0
மீத்தேன் வாயு எடுத்தால் காவிரி டெல்டா பகுதி பாலைவனமாக மாறும்: நம்மாழ்வார் எச்சரிக்கை

தஞ்சாவூர்: ""காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுத்தால் இப்பகுதி முழுவதும் பாலைவனமாக மாறிவிடும்,'' என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தெரிவித்தார்.

மீத்தேன் வாயு திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி, தஞ்சாவூரில் பேரழிப்புக்க எதிரான பேரியக்கம் சார்பில், விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது:

தமிழ்நாட்டில் முக்கியமான உணவு அரிசி. இந்த அரிசி பெருமளவில் விளையக்கூடிய பகுதி காவிரி டெல்டா பகுதிதான். உணவு உத்தரவாதம் குறித்து அரசு மீண்டும், மீண்டும் பேசிக் கொண்டிருக்கிறது. அரிசி விளைவிக்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் குழி தோண்டி தண்ணீரை எடுத்து மீத்தேன் வாயுவை உறிஞ்சுவதுக்கு தனியார் நிறுவனத்துடன் அரசு கையெழுத்திட்டுள்ளது.

இந்த தகவல் காலம் கடந்துதான் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. புதுச்சேரியிலிருந்து மன்னார்குடி வரை 690 சதுர கிலோ மீட்டர் பரபரபளவில் மீத்தேன் வாயு உறிஞ்சி எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு 500 முதல் 1,500 அடி ஆழம் வரை குழிதோண்ட வேண்டும். பூமியில் தண்ணீரையும் காற்றையும் எடுத்தால் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படும்.

தமிழகத்துக்கு உணவளிக்கும் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாழ்பட்டு விடும். இதுகுறித்து யாருக்கும் தெரியாமல் அரசு தனியார் நிறுவனத்துக்கு கையெழுத்திட்டுள்ளது. இது நாட்டை மீண்டும் காலனியாதிக்கத்துக்கு கொண்டு செல்லும் செயல். இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்த வேண்டிய காலக்கட்டம் இது.

மனிதன் தவறான நடவடிக்கைகளினால்தான் பூமி சூடாகி பேரழிவுகள் நிகழ்கின்றன. வறட்சி நிலவுவதுக்கும் அதுதான் காரணம். "சோழ மண்டலம் நெல் களஞ்சியம்' என பெயர் பெற்றது.

இந்த நிலத்தில் தண்ணீரை எடுத்து மீத்தேன் வாயுவை உறிஞ்சினால் சோழ மண்டலம் முழுவதும் பாலைவனமாக மாறிவிடும். இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அனாதைகளாகப்படுவர்.

ஏற்கனவே, டெல்டா மாவட்டங்களில் பல இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீரில் கடல் நீர் கலந்து விட்டது. மீத்தேன் வாயு எடுக்கப்பட்டால் நிலத்தடிநீர் மேலும் உப்பாகி, உப்பளமாக மாறிவிடும்.

எனவே, காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் வாயு எடுக்க இயந்திரங்களுடன் குழி தோண்ட வந்தால் அதை தமிழ்நாடு முழுவதும் மக்கள் திரண்டு முற்றுகையிட வேண்டும். இதுதொடர்பாக மூன்று மாவட்டங்களிலிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு நம்மாழ்வார் பேசினார்.

கருத்துரையிடுக Disqus

 
Top