0

இன்னும் 12 மாதங்களுக்குள் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய கார் மற்றும் பைக்குகளை இங்கே பட்டியலிட்டு இருக்கிறோம். உங்கள் கனவு கார் இதில் இருக்கலாம் அல்லது நீங்கள் வாங்க நினைக்கும் காரின் புதிய வெர்ஷன் விரைவில் விற்பனைக்கு வரலாம். வரப்போகும் கார், பைக்குகளின் விறுவிறு ட்ரெய்லர் இங்கே...


4YJRDHo.jpg


ஃபோர்டு 'கா’ என்ற பெயரில் பிரேசிலில் விற்பனைக்கு வந்துவிட்டது, இந்தியாவுக்கான அடுத்த தலைமுறை ஃபிகோ. அடுத்த ஆண்டு ஜூன் - ஜூலை மாதவாக்கில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த ஃபிகோ, புதிய டிஸைனுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்டன் மார்ட்டின் கார்களில் இருப்பது போன்ற முன்பக்க கிரில், பின்பக்கம் நீளும் ஹெட்லைட் டிஸைன், புதுமையான பின்பக்க விளக்குகள் என அசத்துகிறது புதிய ஃபிகோ. ஆனால், பழைய ஃபிகோவைவிட, புதிய ஃபிகோவின் டிக்கியில் இடம் குறைவு. 284 லிட்டர் கொள்ளளவு கொண்ட இப்போதைய ஃபிகோவைவிட, புதிய ஃபிகோவின் டிக்கி கொள்ளளவு 257 லிட்டர் மட்டுமே! புதிய ஃபியஸ்டாவின் டேஷ்போர்டு ஃபிகோவுக்குள் இடம் பிடித்திருக்கிறது. புதிய ஃபிகோவில் 3 சிலிண்டர் கொண்ட, 1 லிட்டர் இன்ஜின் விற்பனைக்கு வருகிறது. இது அதிகபட்சமாக 85 bhp சக்தியை வெளிப்படுத்தும். இது தவிர, 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடனும் விற்பனைக்கு வருகிறது புதிய ஃபிகோ.



V7JlFNi.jpg


விரைவில் வெளிவரவிருக்கும் டாடா போல்ட், இண்டிகா விஸ்ட்டாவுக்குத்தான் மாற்று. டாடாவின் முதல் காரான இண்டிகாவுக்கு மாற்றாக, புதிய டிஸைனில் வெளிவருகிறது டாடா கைட். இது நானோவுக்கும், போல்ட்டுக்கும் இடையில் விற்பனைக்கு வரும். போல்ட் மற்றும் ஜெஸ்ட் அடிப்படையில் கைட் கார் டிஸைன் செய்யப்பட இருப்பதால், பழைய இண்டிகாவை மறந்துவிடலாம். டிஸைனிலும் சரி, தரத்திலும் சரி, கைட் மதிப்புள்ள காராக இருக்கும். இது செவர்லே பீட், ஹூண்டாய் கிராண்ட் ஐ10, மாருதி செலெரியோ ஆகிய கார்களுடன் போட்டி போடும்.


eTzb678.jpg



அதிக விலையால் தயாரிப்பையே நிறுத்தும் அளவுக்கு ஹோண்டாவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய கார், ஜாஸ். ''வெளிநாட்டில் இருந்து பல பாகங்கள் வாங்கிப் பொருத்தப்பட்டதால்தான் அப்போது விலையை அதிகரித்து விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். இப்போது 90 சதவிகித பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால், புதிய ஜாஸ் காரின் விலை குறைவாக இருக்கும்'' என்கிறது ஹோண்டா. இப்போது விலை குறைவாக மட்டும் அல்ல, டீசல் இன்ஜினுடனும் வருகிறது ஜாஸ். 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வரவிருக்கும் ஜாஸ் காரில், இடவசதி தாராளம்.


gmRiGPw.jpg


செம பிரீமியம் ஹேட்ச்பேக் காராக இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கிறது, ஃபோக்ஸ்வாகன் கோல்ஃப். முதலில், முழுக்க முழுக்க ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்து, இந்தியாவில் 100 கார்களை விற்கத் திட்டமிட்டிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். வரவேற்பு இருந்தால், கோல்ஃப் தொடர்ந்து இந்தியாவிலேயே தயாரிக்கப்படலாம். கோல்ஃப் ஜிடி என்ற பெயரில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த காரில் 1.4 லிட்டர், 140bhp சக்திகொண்ட பவர்ஃபுல் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதேபோல், 2 லிட்டர் டீசல் இன்ஜின் 150bhp சக்தியை வெளிப்படுத்துமாம். பிஎம்டபிள்யூ 1 சீரிஸ் விலைக்கு விற்பனைக்கு வரும் கோல்ஃப் காருக்கு, வரவேற்பு இருக்குமா என்பது சந்தேகம்தான்.


IdFDYuu.jpg


ஃபியட் புன்ட்டோவின் க்ராஸ் வெர்ஷன்தான் அவென்ச்சுரா. எட்டியோஸில் இருந்து எப்படி எட்டியோஸ் கிராஸ் முளைத்ததோ, அதுபோன்ற 'காஸ்மெட்டிக் கிமிக்’தான் இதுவும். டிக்கி கதவில் ஸ்பேர் வீல், பிரம்மாண்டமான பம்ப்பர், அசரடிக்கும் ஸ்போர்ட்டி அலாய் வீல்கள் என அவென்ச்சுராவுக்குத் தனி கலர் கொடுத்திருக்கிறது ஃபியட். புன்ட்டோவைவிட கிரவுண்ட் கிளியரன்ஸில் அதிகமாகவும், பெரிய சைஸ் வீல்களையும் கொண்டிருக்கும் அவென்ச்சுரா, 90bhp சக்திகொண்ட டீசல் மற்றும் 1.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வரவிருக்கிறது.


5R7BVi7.jpg



சென்னை ஒரகடத்தில் உள்ள ரெனோ- நிஸான் கூட்டணித் தொழிற்சாலையில், 'காமென் மாட்யூல் ஃபேமிலி’ என்ற பெயரில், புதிய கார் தயாரிப்பு பிளாட்ஃபார்மை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த பிளாட்ஃபார்மில் இருந்துதான் ரெனோ-நிஸானின் அடுத்த கட்ட புதிய கார்கள் விற்பனைக்கு வரவிருக்கின்றன. இதிலிருந்துதான் நிஸானின் புத்தம் புதிய மைக்ரா, 2016-ம் ஆண்டு விற்பனைக்கு வரவிருக்கிறது. அதற்கு முன்பாக ரெனோ முந்திக்கொண்டு, தனது புதிய சின்ன காரை விற்பனைக்குக் கொண்டுவருகிறது. XBA என்ற குறியீட்டு எண்ணில் தற்போது அழைக்கப்படும் இந்த கார், டெஸ்ட்டுக்குத் தயாராகிவிட்டது. மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான், டட்ஸன் கோ கார்களுடன் போட்டி போட இருக்கும் இதில், 1 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட இருக்கிறது. மைலேஜ் அதிகம் கிடைக்கும்படி இந்த இன்ஜின் ட்யூன் செய்யப்படுகிறது. ரெனோவின் சின்ன கார் 4 லட்சம் ரூபாய்க்குள் விற்பனைக்கு வரும்.



I9X2gub.jpg



இண்டிகா விஸ்டாவுக்கு மாற்றாக விற்பனைக்கு வருகிறது டாடா  போல்ட். பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களுடன் போட்டி போட இருக்கும் போல்ட்டின் டிஸைன், ஜெஸ்ட்டைப் போல மாடர்னாக இருக்கிறது. 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் ஃபியட்டின் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வருகிறது போல்ட்.


vmDiUWV.jpg


புதிய ஃபிகோவை அடிப்படையாகக்கொண்டு, ஃபிகோ பிளஸ் காரை விற்பனைக்குக் கொண்டுவருகிறது ஃபோர்டு. 4 மீட்டருக்குள் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த காரின் உள்பக்கம் ஃபியஸ்டா போலவே இருக்கும். இன்ஜினைப் பொறுத்தவரை 1 லிட்டர் எக்கோபூஸ்ட், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் விற்பனைக்கு வருகிறது ஃபிகோ ப்ளஸ்.


Q7P7NVA.jpg




அதிக இடவசதி கொண்ட தனது பெரிய செடான் காரான சன்னியை, அப்படியே 4 மீட்டருக்குள் மிட் சைஸ் செடான் காராகச் சுருக்குகிறது நிஸான். மாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், ஹூண்டாய் எக்ஸென்ட் ஆகிய கார்களுடன் போட்டி போட இருக்கிறது இந்த மிட் சைஸ் செடான். 4.4 மீட்டர் நீளம் கொண்டிருந்த சன்னி, 3.8 மீட்டர் நீளம்கொண்ட காராகக் குறைக்கப்படுகிறது. இதனால், சன்னியின் பலமாக இருந்த பின்பக்க இடவசதி, புதிய காரில் இருக்குமா என்பது சந்தேகமே! 5 லட்சம் ரூபாய்க்குள் சன்னி செடான் காரை விற்பனைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறது நிஸான்.


LKN7Mgz.jpg


வென்ட்டோவை வெட்டி, மிட் சைஸ் செடானாக மாற்றிவருகிறது ஃபோக்ஸ்வாகன். 4 மீட்டருக்குள் சுருக்கப்பட இருக்கும் வென்ட்டோவில், போலோவைவிட பின்பக்க இடவசதி அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த மிட் சைஸ் வென்ட்டோவில் ஏராளமான சிறப்பம்சங்களைச் சேர்க்க திட்டமிட்டிருக்கிறது ஃபோக்ஸ்வாகன். புதிய வென்ட்டோவில், போலோவில் இருக்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கும்.


4mZ1m8w.jpg


டஸ்ட்டர் தந்த உற்சாகத்தில் எம்பிவி காரை விற்பனைக்குக் கொண்டுவருகிறது ரெனோ. 'லாட்ஜி’ என்ற பெயரில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் எம்பிவி கார், கொஞ்சம் மாற்றங்களுடன் இந்தியாவுக்கு வருகிறது. 7 பேர் உட்கார்ந்து செல்லக்கூடிய எம்பிவி காரான இதில், டஸ்ட்டரில் இருக்கும் அதே டீசல் இன்ஜினே பொருத்தப்பட இருக்கிறது. ரெனோவின் இந்த லாட்ஜி, ஹோண்டா மொபிலியோ மற்றும் மாருதி எர்டிகா கார்களுக்குப் போட்டியாக இருக்கும்.


wnWhug0.jpg




நிஸானின் பட்ஜெட் பிராண்டான டட்ஸன் கோ, விற்பனைக்கு வந்து நிலையான இடத்தைப் பிடித்திருக்கிறது. கோ காருக்கு அடுத்தபடியாக, அதே ப்ளாட்ஃபார்மிலேயே 'கோ ப்ளஸ்’ காரைத் தயாரித்திருக்கிறது நிஸான். கோ ப்ளஸ்தான் இந்தியாவின் முதல் நான்கு மீட்டருக்குள் வடிவமைக்கப்பட்டிருக்கும் முழுமையான 7 சீட்டர் கார் என்ற சாதனையைப் படைக்க இருக்கிறது. இதனால், இந்தியாவின் விலை குறைவான 7 சீட்டர் காராக இருக்கப்போவதும் டட்ஸன் கோ ப்ளஸ் தான். காரின் டேஷ்போர்டைப் பொறுத்தவரை கோ காருக்கும், கோ ப்ளஸுக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. இன்ஜினிலும் எந்த வித்தியாசமும் இல்லை. 67bhp சக்திகொண்ட அதே 1.2 லிட்டர் இன்ஜின், இந்த 7 சீட்டர் காரிலும் இருக்கும். அதிக எடை காரணமாக, கோ காரைவிட கோ ப்ளஸ்ஸின் பெர்ஃபாமென்ஸ் கொஞ்சம் குறைவாகவே இருக்கும் எனத் தெரிகிறது. 5 லட்சம் ரூபாய்க்குள் கோ ப்ளஸ் காரை விற்பனைக்குக் கொண்டுவருகிறது நிஸான்.
MxPwjDB.jpg



டஸ்ட்டர், எக்கோஸ்போர்ட் கார்களுடன் போட்டி போட ஹூண்டாயும் ரெடி. சின்ன எஸ்யுவி காராக ஹூண்டாய் தயாரித்துவரும் கார், சீன மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட ix25 காரை அடிப்படையாகக்கொண்டது. தற்போது சென்னை அருகே டெஸ்ட் செய்யப்பட்டு வரும் இந்த கார், அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும். எக்கோஸ்போர்ட் போல 4 மீட்டர் எஸ்யுவியாக இல்லாமல், டஸ்ட்டர் போன்று பெரிய எஸ்யுவியாக இருக்கிறது ஹூண்டாயின் புதிய எஸ்யுவி. அறுகோணவடிவ கிரில், பவர்ஃபுல் ஹெட்லைட்ஸ் என புதிய டிஸைன் தீம் படி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த காரில், 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன. இதில், இப்போதைக்கு 4 வீல் டிரைவ் ஆப்ஷன் வராது. சிறப்பம்சங்களுக்குப் பெயர் பெற்ற ஹூண்டாய், இதில் டஸ்ட்டர் மற்றும் எக்ஸ்போர்ட் கார்களில் இல்லாத சிறப்பம்சங்களைச் சேர்த்திருக்கிறது. அதனால், இது டஸ்ட்டர் மற்றும் டெரானோ கார்களைவிட விலை அதிகமாகவே இருக்கும்.


FbSMzC8.jpg?1




எர்டிகா, மொபிலியோ கார்களுக்குப் போட்டியாக, ஹூண்டாயும் எம்பிவி கார் மார்க்கெட்டில் களம் இறங்குகிறது. 7 பேர் அமர்ந்து செல்லக்கூடிய காரான இதில், வெர்னாவில் இருக்கும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜினை அறிமுகப்படுத்துகிறது ஹூண்டாய். 10 லட்சம் ரூபாய்க்குள் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த எம்பிவி காரில், இடவசதி அதிகம் இருக்கும் என்கிறது ஹூண்டாய். புதிய ஐ20 மற்றும் வெர்னா இரண்டு கார்களுக்கும் இடைப்பட்ட மாடலாக இந்த எம்பிவி அறிமுகமாக இருக்கிறது.


UPqIuoY.jpg




விற்பனைக்குத் தயாராகிவிட்டது மாருதி சியாஸ்.  SX4 காருக்குப் பதிலாக விற்பனைக்கு வருகிறது சியாஸ். SX4 காரைப் போன்று உயரமான செடான் காராக இல்லாமல், ஸ்போர்ட்டியாக டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது சியாஸ். ஃபோக்ஸ்வாகன் கார்களில் இருப்பது போன்ற தரமான டேஷ்போர்டை சியாஸில் காணலாம் என்கிறார்கள். ஸ்விஃப்ட்டில் இருக்கும் ஃபியட்டின் மல்ட்டிஜெட் இன்ஜினான 1.3 லிட்டர் டீசல் இன்ஜின்தான் சியாஸிலும் பொருத்தப்படுகிறது. இது தவிர, 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்கொண்ட மாடலும் விற்பனைக்கு வரும். விலை 8 லட்சம் ரூபாயில் இருந்து துவங்கும்.


CIV5Fx6.jpg?1


தமிழகத்தில் கிட்டத்தட்ட ஓர் ஆண்டாக டெஸ்ட்டிங்கில் இருக்கும் புதிய மினி எஸ்யுவி காரை, அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்குக் கொண்டுவருகிறது மஹிந்திரா. எக்ஸ்யுவி 500 காரின் மினி வெர்ஷனாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த காரின் டேஷ்போர்டு உள்ளிட்ட உள்பக்க பாகங்கள் அனைத்தும், எக்ஸ்யுவி 500 காரின் காப்பிகேட்தான். வெளிப்பக்க டிஸைனிலும் எக்ஸ்யுவி 500 காரையே நினைவுபடுத்துகிறது மினி எஸ்யுவி. மினி எஸ்யுவி என்றாலும், இதை 7 சீட்டர் காராக மஹிந்திரா வடிவமைத்து வருவதுதான் ஷாக்கிங் சர்ப்ரைஸ்.



kJqMGGj.jpg?1


இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் எஸ்யுவிகளில் முதல் இடத்தில் இருக்கும் பொலேரோவை, மாடர்ன் டிஸைன் காராக மாற்றுகிறது மஹிந்திரா. 4 மீட்டர் மற்றும் 4 மீட்டருக்கு மேல் என இரண்டு ஆப்ஷன்களுடன் புதிய பொலேரோ விற்பனைக்கு வரவிருக்கிறது. காரின் டேஷ்போர்டு தற்போதைய பொலேரோவைப்போல இல்லாமல் மாடர்னாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இருக்கைகளின் சொகுசுத் தன்மையும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. புதிய பொலேரோவில் குவான்ட்டோவில் இருக்கும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட இருக்கிறது.




Ks8MjhK.jpg


தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும் ஜீப்பின் அறிமுகம், 2015-ல் நிச்சயம் நிகழ்ந்துவிடும் என்கிறது ஃபியட். முழுக்க முழுக்க ஆஃப் ரோடர் எஸ்யுவி காரான ரேங்ளரை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்துகிறது ஃபியட். வெளிநாட்டில் இருந்து முழுக்க முழுக்க இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருப்பதால், ரேங்ளரின் விலை 40 லட்சம் ரூபாயைத் தாண்டும். 2.8 லிட்டர் டீசல் இன்ஜினுடன் மிகவும் பவர்ஃபுல் 4 வீல் டிரைவ் எஸ்யுவியாக வருகிறது ரேங்ளர்!


nfIQHsJ.jpg



விற்பனையில் இருந்து நிறுத்தப்பட்டுவிட்ட அக்கார்டு, புதிய தோற்றம் மற்றும் புதிய இன்ஜினுடன் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது. அதிக இடவசதி, அதிக சிறப்பம்சங்கள் மற்றும் முதன்முறையாக டீசல் இன்ஜினுடன் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது அக்கார்டு. 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் அக்கார்டில் பொருத்தப்பட இருக்கிறது. இது தவிர, 2.4 லிட்டர் திறன்கொண்ட பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும் உண்டு.


ocSqvWZ.jpg


எண்டேவர் ரசிகர்களுக்கு நல்ல செய்தி. புத்தம் புதிய டிஸைனில் மாடர்ன் காராக எண்டேவரை அடுத்த ஆண்டு விற்பனைக்குக் கொண்டுவருகிறது ஃபோர்டு. ஃபார்ச்சூனர் காருக்குப் போட்டியாக, அதைவிட விலை குறைவான காராக புதிய எண்டேவரை களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறது ஃபோர்டு. 2.2 லிட்டர் மற்றும் 3.0 டீசல் இன்ஜின்களுடன் புதிய எண்டேவர், ஃபோர்டு எவரெஸ்ட் காரை அடிப்படையாகக்கொண்டு வடிவமைக்கப்பட்டுவருகிறது.


vWphOco.jpg



யமஹாவின் மார்க்கெட் ஷேரைப் பிடிக்கத் தயாராகிவிட்டது சுஸ¨கி. 150சிசி மார்க்கெட்டில் அசத்தலான, ஸ்போர்ட்டியான பைக்காக ஜிக்ஸரை விற்பனைக்குக் கொண்டுவந்திருக்கிறது. 82,600 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்திருக்கும் ஜிக்ஸர், அதிகபட்சமாக 14.6bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட ஜிக்ஸர், பின்பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஷனைக் கொண்டிருக்கிறது. ட்யூப்லெஸ் டயர், முன்பக்கம் டிஸ்க் பிரேக் என 150சிசி பைக்குக்கான அத்தனை அம்சங்களுடனும் வெளிவருகிறது ஜிக்ஸர்.
dI1aFsF.jpg




பிப்ரவரி மாதம் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில், காட்சிக்கு வைக்கப்பட்ட பல்ஸர் சிஎஸ் மற்றும் எஸ்எஸ் 400 பைக்குகள், இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வருகின்றன. நேக்கட் மற்றும் ஃபேரிங் என இரண்டுவிதமான ஸ்டைலுடனும் வெளிவரும் இந்த பைக்குகளில், கேடிஎம் 390-ல் இருக்கும் அதே இன்ஜின்தான் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக 41bhp சக்தியை வெளிப்படுத்தும் இந்த பைக்குகள், பெர்ஃபாமென்ஸில் கில்லியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


m6BloSe.jpg?1




அக்டோபர் மாதவாக்கில் விற்பனைக்கு வரவிருக்கும் மோஜோ, முழுக்க முழுக்க மஹிந்திராவின் இன்ஜினீயர்களால் புனேவில் உருவாக்கப்பட்டது. 300சிசி திறன்கொண்ட இந்த பைக், அதிகபட்சமாக 27bhp சக்தியை வெளிப்படுத்தும். 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்ட இந்த பைக்கின் டாப் ஸ்பீடு 140bhp சக்தியைத் தாண்டும். இந்தியாவிலேயே முதன்முறையாக பைரலியின் ரேடியல் டயர்களுடன் விற்பனைக்கு வருகிறது மோஜோ. இதன் விலை 1.70 லட்சம் ரூபாய்க்குள் இருக்கும்.


p18c.jpg


ஜெஸ்ட்டோவும் முழுக்க முழுக்க மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தில் தயாராகியிருக்கும் ஸ்கூட்டர்தான். 110சிசி ஸ்கூட்டரான ஜெஸ்ட்டோ, 60 கி.மீ வரை மைலேஜ் கிடைக்கும் வகையில் ட்யூன் செய்திருப்பதாகச் சொல்கிறது மஹிந்திரா. முன்பக்க டிஸ்க் பிரேக், சென்ட்யூரோவில் உள்ளது போல ஆட்டோமேட்டிக் ஃப்ளிப் கீ, ஆன்டி லாக், எம்.ஆர்.எஃப் டயர்கள் என பல புதுமைகளுடன் வெளிவருகிறது ஜெஸ்ட்டோ. விலை 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும்.


VQo969H.jpg




டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட HX 250 பைக்கை, நவம்பர் மாதம் விற்பனைக்குக் கொண்டுவருகிறது ஹீரோ. ஹோண்டாவின் இன்ஜின் இல்லாமல் வெளிவர இருக்கும் முதல் ஹீரோ பைக் என்பதுதான் இதன் ஸ்பெஷல். அமெரிக்க நிறுவனமான எரிக் ஃப்யூல் ரேஸிங் நிறுவனத்துடன் இணைந்து, இந்த இன்ஜினை உருவாக்கியிருக்கிறது ஹீரோ. 249சிசி திறன்கொண்ட இந்த இன்ஜின், அதிகபட்சமாக 31bhp சக்தியை வெளிப்படுத்துகிறது. 6-ஸ்பீடு கியர்பாக்ஸ்கொண்ட HX250 அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ வேகத்தைத் தொடும் என எதிர்பார்க்கலாம். இதில் ஏபிஎஸ் பிரேக்ஸ் ஆப்ஷன் உண்டு என்பது கூடுதல் ஸ்பெஷல்.


UObiej9.jpg




100 சிசி பைக்குகளில் முதல் இடம் பிடிக்க தீவிரமான முயற்சிகளில் இறங்கியிருக்கிறது யமஹா. இந்தியாவின் விலை குறைவான பைக்காக 30,000 ரூபாய்க்குள் புதிய 100 சிசி பைக்கை அறிமுகப்படுத்துகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த பைக், சென்னையில் அமைக்கப்பட்டுவரும் யமஹா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட இருக்கிறது.

கருத்துரையிடுக Disqus

 
Top