0
வாழை சாகுபடிக்கேற்ற தட்பவெப்ப நிலை, தண்ணீர் வளம்... போன்ற சாதகமான அம்சங்கள் நிறைந்த பகுதிகளில் ஒன்று தேனி மாவட்டம். ஆனால், கால ஓட்டத்தில், அதிகரித்துக் கொண்டே போகும் சாகுபடி செலவு... குறைந்து கொண்டே போகும் கொள்முதல் விலை... உள்ளிட்ட பல காரணங்களால், 'வாழை சாகுபடியே வேண்டாம்’ என ஒதுக்கித் தள்ளியிருந்தனர், இங்குள்ள விவசாயிகள் பலரும். தற்போது, ஆச்சரியப்படத்தக்க வகையில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து, வாழை உற்பத்தியில் முன்னணியில் இருக்கிறார்கள், இந்த விவசாயிகள்!

'எப்படி சாத்தியம்?’ என்று ஆச்சர்யப்படுபவர்களுக்கு 

'தொழில்நுட்பங்கள்தான்’ என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்கிறார்கள்!

ஆம்... முறையான சாகுபடி முறைகள், அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தியதால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.

''ஒரு ஏக்கர் வாழை சாகுபடியில் 50 ஆயிரம் ரூபாய் வருமானம் எடுத்துக் கொண்டிருந்த நாங்கள், இன்று இரண்டரை லட்சம் ரூபாயைத் தாண்டி சம்பாதிக்கிறோம்' என்று சொல்லும் இவர்கள், தங்களது முன்னேற்றத்துக்குக் காரணமாக... அப்பகுதியில் அமைந்துள்ள வாழை பதப்படுத்தும் நிலையம் ஒன்றையும் கை நீட்டுகிறார்கள்!

சின்னமனூருக்கு வெளியே, உத்தமப்பாளையம் சாலையில் இருக்கிறது, 'ஃபிரெஷ் பனானா’ என்கிற பெயர் கொண்ட அந்த நிலையம். ஒரு பகுதியில் வாழைகளை, ஒரு பெண்கள் குழு தரம் பிரித்துத் தர அவற்றை 'பிளாஸ்டிக் டிரே’க்களில் அடுக்கி குளிர்பதனக் கிட்டங்கியில் அழகாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர். இன்னொரு பகுதியில், குளிர்சாதன வசதியுடன் கூடிய 'கன்டெய்னர்’களில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதற்காக வாழைக்காய்கள் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தன.
நிலையத்தின் உரிமையாளர் ஏ.பி. கருப்பையாவை சந்தித்தோம். பணியாளர்களுக்கு, சில உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு, நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

''தேனி மாவட்டத்துல வாழையும் ஒரு முக்கிய பயிர். ஆனா, வாழை சாகுபடி ரொம்ப நஷ்டமாயிட்டதால தாக்குப் பிடிக்க முடியாம, நிறைய பேர் நிலத்தைகூட வித்துட்டுப் போயிட்டாங்க. கிட்டத்தட்ட 2004-ம் வருஷம் வரைக்கும் அப்படித்தான் நிலைமை இருந்துச்சு. அந்த சமயத்துலதான் 'திசு வாழை’ அறிமுகமாச்சு. அதுல அதிக எடையோட பெரியத் தார் கிடைச்சாலும், பெருசா லாபம் கிடைக்கல.

ஒரு கட்டத்துல, 'எப்படியாவது வாழையில ஜெயிக்கணும்’னு அது பத்தின விஷயங்களைத் தெரிஞ்சுக்குறதுக்காக, நாங்க கொஞ்ச பேர் சேந்து... முக்கியமான வாழைச் சந்தைகள், அதிக மகசூல் எடுத்த வாழை விவசாயிகள், திசு வாழை கம்பெனிகள்னு இந்தியா முழுக்க, சுத்தி அலைஞ்சதுல... ஒவ்வொரு இடத்துலயும் ஒவ்வொரு விஷயத்தைக் கத்துகிட்டோம். அப்படியே நாங்க, 'எந்தெந்த விஷயத்துல தப்பு செஞ்சோம்’னும் புரிஞ்சுக்கிட்டோம்.

அழிவைக் குறைத்த அறுவடை முறை!
ஊருக்குத் திரும்பினதும், நாங்க கத்துக்கிட்ட விஷயங்களைச் செயல்படுத்த ஆரம்பிச்சோம். என்னோட 50 ஏக்கர் வாழைத் தோட்டத்துல ஏற்றுமதித் தரம் வாய்ந்த வாழை உற்பத்திக்கான முறைகளை ஒவ்வொண்ணா செய்ய ஆரம்பிச்சேன். எங்க பகுதியில பலரும் இதேபோல செய்தாங்க. தார் விட்டதும், அதுல ஒரு பிளாஸ்டிக் கவரை மாட்டி விட்டதும், காயில கருப்புப் புள்ளிகள் விழறது குறைஞ்சுது. வழக்கமா, வாழைத் தாரை வெட்டி, அப்படியே கீழ வெச்சுருந்து லாரி வந்ததும் தூக்கி அடுக்குவோம். இதுல அடியில இருக்கற காய்கள், அடிபட்டு நசுங்கி வீணாத்தான் போகும். அதைத் தவிர்க்கறதுக்காக தாரை மரத்துல விட்டுட்டு சீப்பை மட்டும் 'ரோப்’ மூலமா அறுவடை செஞ்சு, பிளாஸ்டிக் டிரேல அடுக்கி, லாரியில ஏத்த ஆரம்பிச்சோம். இதனால சேதாரம் சுத்தமா குறைஞ்சுது. சொட்டுநீர்ப் பாசன முறையைப் பயன்படுத்த ஆரம்பிச்சதும்... ஆள் தேவை குறைஞ்சு, மகசூலும் அதிகமாச்சு.

சாகுபடியை சரி பண்ணியாச்சு. அடுத்து நல்ல விலை கிடைக்கணும்ல... அதுல நிறைய பிரச்னைகள். அதிக விளைச்சல் இருக்குறப்போ, விலை இறங்கிடும். அதுக்கு பதப்படுத்தும் நிலையம் மட்டும்தான் தீர்வுனு தெரிஞ்சுக்கிட்டோம். முதலீடு அதிகமா தேவைப்பட்டாலும், நானே துணிஞ்சு அதை ஆரம்பிச்சுட்டேன். அதுக்கப்பறம்தான் வாழைக்கு அதிக விலை கிடைக்க ஆரம்பிச்சது. விவசாயிங்ககிட்ட இருந்து காய்களை கொள்முதல் பண்ணி, தரம் பிரிச்சு, இயற்கை முறையில பழுக்க வெச்சு சந்தைக்கும் அனுப்பிக்கிட்டிருக்கோம். 'ஃபிரெஷ் பனானா’ங்கிற பேர்ல வெளிமாநிலங்கள், வெளிநாடுகள்னு அனுப்பிக்கிட்டிருக்கோம்'' என்று சொன்ன கருப்பையா...  

கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை!
''நிறைய பேர், இயற்கை விவசாயம் செஞ்சா... சரியான மகசூல் கிடைக்கறதில்லம்பாங்க. அளவுக்கு அதிகமா ரசாயனங்களைக் கொட்டுனதால, கெட்டுப்போன மண்ணுல... இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிச்சதுமே மகசூல் கிடைச்சுடாது. இயற்கை விவசாயத்துக்கு மாற நினைக்கறவங்க, ரசாயனத்தைக் கொஞ்சம், கொஞ்சமா குறைச்சுக்கிட்டு, இயற்கை இடுபொருளை கொஞ்சம் கொஞ்சமா அதிகரிச்சுக்கிட்டே வரணும். பசுந்தாள் உரங்கள், ஆட்டுக்கிடைனு தொடர்ந்து கொடுத்துக்கிட்டே இருந்தா... ஒரு கட்டத்துல மண் வளமாயிடும். அதுக்குப் பிறகு முழுமையான இயற்கை விவசாயம் செய்யலாம்'' என்ற கருப்பையா நிறைவாக,

அஞ்சு லட்சம் லட்சியம்!
ரெண்டரை லட்சம் நிச்சயம்!
''இப்ப தேனி மாவட்டத்துல பெரும்பாலான வாழை விவசாயிங்க 65 சதவிகிதம் இயற்கை, 35 சதவிகிதம் ரசாயனம்னுதான் செஞ்சுட்டு இருக்காங்க. அதுவும் அனுமதிக்கப்பட்ட அளவுலதான் ரசாயனத்தைப் பயன்படுத்துறாங்க. முழுக்க இயற்கையில செய்றவங்களோட எண்ணிக்கையும் கூடிகிட்டிருக்கு. 2004-ம் வருஷம் 5 ஆயிரம் ஏக்கர்லதான் வாழை இருந்துச்சு. இப்ப, 30 ஆயிரம் ஏக்கர்ல வாழை சாகுபடி நடக்குது. அப்ப, கிலோ 3 ரூபாய்லருந்து 4 ரூபாய் வரைக்கும்தான் காய் விக்கும். இப்போ, கிலோ 12 ரூபாய்க்கு விக்குது. ஏக்கருக்கு சர்வசாதாரணமா ரெண்டரை லட்ச ரூபா அளவுக்கு வருமானம் கிடைச்சுடுது. ஒரு ஏக்கர்ல அஞ்சு லட்ச ரூபாய் சம்பாதிக்கணும்ங்கிறதுதான் எங்க இலக்கு. அதுக்காகத்தான் போராடிட்டுருக்கோம்.

இந்திய அளவுல அதிக வாழை உற்பத்தி செய்ற மகாராஷ்டிராவுல ஒரு ஏக்கர்ல இருந்து அதிகபட்சம் 60 டன் மகசூல் எடுக்கறாங்க. ஆனா, தேனி மாவட்டத்துல அதிகபட்சம் 80 டன் வரை எடுக்கிறோம். இயற்கையின் அருட்கொடையா இந்தப் பகுதியில நிலவுற சூழல்தான் இதுக்குக் காரணம். நாங்க, ரொபஸ்டா வாழையை மட்டும் வெச்சுக்கிட்டு இதை சாதிக்கிறோம். ஆனா, பலவிதமான வாழைகளை விளைய வெக்குற நாகர்கோவில் விவசாயிங்க, மலைவாழை விவசாயிங்களெல்லாம் இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினா, கண்டிப்பா கூடுதலா வருமானம் பார்க்க முடியும்'' என்று சொல்லி விடைகொடுத்தார்.

''வாழை விவசாயிகள் வாழ்க்கையில் வசந்தம் வீசுவது உண்மைதானா..? ஏக்கருக்கு இரண்டரை லட்சம் வருமானம் கிடைக்கிறதா..?’ என்று நம் மனதில் எழுந்த அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் அளித்தார், குச்சனூர் பகுதியைச் சேர்ந்த கோட்டைசாமி. இவர், ஜீரோ பட்ஜெட் முறையில் 15 ஏக்கரில் திசு வாழையை சாகுபடி செய்து வருகிறார்.
''ஒரு காலத்துல பொழப்பே பொசுங்கிப் போய் கிடந்தோம். இன்னிக்கு தளைச்சு நிக்குற துளிராட்டம் இருக்கோம். அதுலயும் இயற்கை விவசாயத்தோட... கூடுதலான தொழில்நுட்பங்களும் சேர்ந்துட்டா... வருமானத்துக்கு என்ன குறை? நான், 15 ஏக்கர்ல வருஷத்துக்கு 30 லட்ச ரூபா லாபம் எடுத்துட்டுருக்கேன்'' என சிலாகித்தவர், தனது ஜீரோ பட்ஜெட் வாழை சாகுபடியையும், தொழில்நுட்பங்களால் எற்பட்ட மாற்றங்களையும் பற்றி சொல்ல ஆரம்பித்தார்...

        அவை அடுத்த இதழில்...
 தொடர்புக்கு, மணிகண்டன், செல்போன்: 80125-79964.

 இப்படித்தான் பழுக்க வைக்கிறோம்!
பதப்படுத்தும் நிலையம் செயல்படும் விதத்தைப் பற்றி விளக்கிய அதன் மேலாளர் மணிகண்டன், ''இந்த நிலையம் 640 டன் கொள்ளளவு கொண்டது. இங்கு, காய்கள் சேமிப்பு, இயற்கை முறையில் பழுக்க வைத்தல் என இரண்டு செயல்பாடுகள் நடக்கின்றன. தோட்டங்களில் இருந்து வரும் காய்களை, முதலில் தரம் பிரிக்கிறோம். பிஞ்சு காய்கள், அடிபட்ட காய்களை நீக்கி, மற்றவற்றைச் சுத்தமாகத் துடைத்து, டிரேக்களில் அடுக்கி குளிர்பதன அறையில் வைத்து விடுவோம். ஆர்டருக்கு ஏற்றபடி இந்தக் காய்களை 'எத்திலீன்’ வாயு மூலமாகப் பழுக்க வைத்து... விற்பனைக்கு அனுப்புவோம். காய்களை முழுவதும் பழுக்க வைக்காமல், 70 சதவிகிதம் பழுத்த நிலையில், குளிர்சாதன வசதியுள்ள லாரிகளில் அனுப்புவோம். அவை, போகும்போதே பழுத்து விடும்'' என்றார்.

 காத்திருக்கும் விவசாய ரயில்!
தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து பிரபல நிறுவனங்கள் இணைந்து சில விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதற்கான முயற்சியில் இறங்கியிருக்கின்றன. அதில், கருப்பையாவின் 'ஃபிரெஷ் பனானா’ நிறுவனமும் ஒன்று. அதைப் பற்றி பேசிய கருப்பையா, ''300 கோடி ரூபாய் முதலீட்டில் வட மாநிலங்களையும் தென் மாநிலங்களையும் இணைக்கும் 'ரயில் வணிகப்பாலம்’ என்ற திட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கிய நிறுவனங்கள் இணைந்து செயல்படுத்த உள்ளோம்.
வடஇந்தியாவில் ஆப்பிள், ஆரஞ்சு, விதையில்லா திராட்சைகள்... போன்றவை அதிகமாக விளைகின்றன. ஆனால், அவற்றை நாம் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. அதேபோல, தென்னிந்தியாவில் உற்பத்தியாகும் வாழை, தென்னை, மாம்பழம், சப்போட்டா, ஏலக்காய், மிளகு, காபி, முட்டை... போன்றவற்றை வட மாநிலங்களில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கிறது. இதை சரி செய்து, நமது நுகர்வோருக்கும், விவசாயிகளுக்கும் உரிய பலன் கிடைக்கச் செய்வதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இங்கு விளையும் பொருட்களை ரயில் மூலமாக மற்ற மாநிலங்களுக்கு அனுப்பிவிட்டு... அதே ரயிலில் அங்கு விளையும் பொருட்களை தமிழகத்துக்குக் கொண்டு வருவோம்.

விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் பயனுள்ள இந்தத் திட்டம், மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறது. விரைவில் கிடைத்து விடும் என நம்புகிறோம். அது வந்துவிட்டால்... தமிழகத் தோட்டக்கலை விவசாயிகள் வாழ்க்கையில் நிச்சயம் மாற்றம் ஏற்படும்'' என்றார்.
 பழுக்க வைப்பதால் பாதிப்பு இல்லை!

என்னதான் இயற்கை முறை என்று கூறப்பட்டாலும், 'எத்திலீன் வாயுவைச் செலுத்தி பழுக்க வைக்கும் பழங்களைச் சாப்பிடுபவர்களுக்கு உடல்ரீதியாக ஏதாவது பாதிப்புகள் ஏற்படுமோ?' என்கிற அச்ச உணர்வு இங்கே இருக்கத்தான் செய்கிறது.

இதைப்பற்றி மதுரை, அப்போலோ மருத்துவமனையின் சிறுநீரகத் துறை மருத்துவர் சௌந்திரபாண்டியனிடம் கேட்டபோது, ''புறத்தூண்டுதல் எதுவும் இல்லாமல் பழங்கள் தானாகப் பழுப்பதை இயற்கை முறையில் பழுத்தது என்கிறோம். ஆனால், இயற்கையிலேயே மரங்களில் காய்கள் பழுப்பதும், இலைகள் பழுத்து மஞ்சள் நிறமடைவதற்கும் காரணமாக இருப்பது எத்திலீன் வாயுதான். மூடிய அறையில் குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் எத்திலீன் வாயுவை நிரப்பும்போது... காய்களின் தோல்களில் உள்ள செல்கள் பழுக்கத் தொடங்குகின்றன. கிட்டத்தட்ட இயற்கையாக நிகழும் அதே செயல் ஓர் அறைக்குள் நடக்கிறது. அதனால், எத்திலீன் வாயு மூலமாக பழுக்க வைக்கும் பழங்களை உண்பதால், உடல்ரீதியான பாதிப்புகள் எதுவும் இல்லை. இப்படி பழுக்க வைப்பதை சர்வதேச உணவுக் கழகம் அங்கீகரித்திருக்கிறது'' என்று விளக்கம் தந்தார்.

 வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்காது!
வாழைப்பழம் பற்றி பேசிய கருப்பையா, ''நம்ம ஊர்லதான் 'குளிர் காலத்துல வாழைப்பழம் சாப்பிட்டா சளி பிடிச்சிடும்’னு பயப்படுறோம். உண்மையில வாழைப்பழம் சாப்பிட்டா சளி பிடிக்காது. ஜம்மு-காஷ்மீர்ல மட்டும் குளிர் காலத்துல 200 டன் அளவுக்கு வாழைப்பழம் விக்குது. அங்க மட்டுமில்ல... உலகம் முழுக்க குளிர் காலத்துலதான் அதிகளவுல வாழைப்பழங்கள் விக்குது. குறைஞ்ச விலையில, அதிக சத்துக்களைக் கொடுக்கற வாழைப்பழங்களை அதிகளவுல சேத்துக்கறது ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது. இதை வெளிநாட்டுக்காரங்க புரிஞ்சுகிட்டாங்க. நாம எப்பப் புரிஞ்சுக்கப் போறமோ...'' என்றார், ஆதங்கத்துடன்.

கருத்துரையிடுக Disqus

 
Top