0
6zeOIry.jpg


மத்திய அரசு அறிவித்தபடி சமையல் எரிவாயுவுக்கான (எல்பிஜி) நேரடி மானிய திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. முதற்கட்டமாக ஆந்திரம், கேரளம், அசாம், பஞ்சாப், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 54 மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது.தமிழகத்தில் 2015 ஜனவரி 01 முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எரிவாயு விநியோகஸ்தர்கள் வழங்கி வருகின்றனர். ஆன்லைன் மூலமாகவும் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.


இந்த நிலையில் இந்த நேரடி மானியத் திட்டத்தில் விண்ணப்பம் செய்வது எப்படி? எப்போது கிடைக்கும்? யாரெல்லாம் மானியம் பெற தகுதியுள்ளவர்கள் என்று ஏகப்பட்ட சந்தேகங்கள் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளன. இவற்றைத் தீர்க்கும் விதமாக சம்பந்தபட்ட நிறுவன அதிகாரிகளையே தொடர்பு கொண்டோம். அவர்கள் அளித்த தகவலை சரிவர பின்பற்றினாலே மானியம் கிடைக்கும் என்பது புலனாகியது.


திட்டத்தின் நோக்கம்


சமையல் எரிவாயுவுக்கான மானியத்தை ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஒதுக்கி இதை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கே நேரடியாகக் கொடுத்து வந்தது. ஆனால் சமையல் எரிவாயுவுக்கு கொடுக்கப்படும் மானியம் நேரடியாக பயனாளிகளுக்கே சென்று சேர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நேரடி மானிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. சந்தை விலையில் சமையல் எரிவாயுவை வாங்கிக் கொள்ள இந்த மானியத் தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.



யாரை அணுகுவது


சமையல் எரிவாயு முகவர்கள் மற்றும் வங்கிகள் மூலமாக இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். நான்கு வகையான விண்ணப்பப்படிவங்கள் உள்ளன. எரிவாயு முகவர்கள் மூலமாக விண்ணப்பம் செய்யும்போது படிவம் 1 அல்லது 3 இதில் ஏதாவது ஒரு படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். வங்கி மூலமாக விண்ணப்பம் செய்பவர்கள் படிவம் 2 அல்லது 4 இதில் ஏதாவது ஒன்றின் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.சில முகவர்கள் வங்கி மூலமாக செய்கிற விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து வங்கிகளிடத்தில் கொடுக்கும் ஏற்பாட்டையும் செய்கின்றனர். இதற்கு என்று தனியாக இணையதளம் உள்ளது. அதன் மூலமாகவும் விண்ணப் பிக்கலாம்.


விண்ணப்பம் வாங்குவதற்கு அல்லது விண்ணப்பிக்க கட்டணங்கள் எதுவும் கிடையாது.

இணையதள முகவரி: Petroleum.nic.in



ஆதார் அட்டை


இந்தத் திட்டதில் சேர ஆதார் அட்டை முக்கியம். ஆதார் அட்டை இல்லை என்றாலும் விண்ணப்பிக்கலாம். ஆதார் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு ஒரு விண்ணப்ப படிவமும், ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு மற்றொரு விண்ணப்பப் படிவமும் உள்ளது. விண்ணப்பித்த பிறகு ஆதார் அட்டை எடுத்து கொடுக்க வேண்டும்.



வங்கிக்கணக்கு அவசியம்


இந்த நேரடி மானியத் திட்டத்துக்கு வங்கிக் கணக்கு அவசியம் இருக்க வேண்டும். தேசிய மயமாக்கபட்ட வங்கிகள் மற்றும் சில தனியார் வங்கி கணக்குகளும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.வங்கிக்கணக்கு இல்லாதவர்கள் புதிதாக வங்கிக்கணக்கு தொடங்க வேண்டும். வங்கிக்கணக்கு மூலமாகத்தான் இந்த மானியம் பயனாளிகளுக்குச் சென்று சேரும். கையில் பணமாக கொடுக்கப்பட மாட்டாது என்று வங்கித்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.


மானியம் எவ்வளவு:


ஒவ்வொரு மாதமும் சந்தை விலைக்கு ஏற்ப மானியத் தொகை வேறுபடும். இண்டேன் நிறுவனத்தின் சமையல் எரிவாயு 14.2 கிலோ அடைக்கப்பட்ட சிலிண்டரின் டிசம்பர் மாத சந்தை விலை ரூ. 755 மானிய விலையில் ரூ 400-க்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதன்படி தோராயமாக ரூ 350 மானியம் என கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நேரடி மானிய திட்டத்தில் இவ்வளவுதான் மானியம் என்பதை அரசு வரையறுக்க வில்லை.


மானியம் எப்போது?


2015 ஜனவரி 01 முதல் இந்த நேரடி மானியம் திட்டம் தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வர உள்ளது. எரிவாயு நிறுவனங்களால் பயனாளிகள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப் பட்டதும் பயனாளியின் வங்கிக் கணக்கில் முன்பணமாக ரூ. 568 வரவு வைக்கப்படும். அதற்கு பிறகு வாங்கும் சிலிண்டருக்கு தற்போதைய சந்தை விலை என்னவோ அதை கொடுத்து வாங்க வேண்டும்.


இந்த சிலிண்டருக்கு உரிய மானியம் அடுத்த இரண்டொரு வேலைநாட்களில் வங்கிக்கணக்கில் போடப்படும். இது போல நீங்கள் வாங்கும் ஒவ்வொரு சிலிண்டருக்கும், வாங்கிய பிறகு மானியம் கணக்கிடப்பட்டு வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.இந்த முன்பணத் தொகை அப்படியே இருக்கும். எரிவாயு இணைப்பை சரண்டர் செய்யும்போது திரும்ப கொடுக்க வேண்டும்.


யாருக்குக் கிடைக்காது?


தற்போது மானிய விலையில் சமையல் எரிவாயு வாங்கிக் கொண் டிருக்கும் அனைவரும் இந்த நேரடி மானிய திட்டத்தில் பயன் பெறலாம். இணைப்பு யார் பெயரில் உள்ளதோ அவர்கள் பெயரில் உள்ள வங்கிகணக்கு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். எரிவாயு இணைப்பு ஒரு பெயரிலும், வங்கிக்கணக்கு வேறொரு பெயரிலும் இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.எரிவாயு இணைப்பு வாங்கிய நபர் உயிருடன் இல்லை என்றால் அவரது வாரிசுகள் நேரடியாக இந்த மானியத்தை பெற முடியாது. எரிவாயு இணைப்பை தங்களது பெயருக்கு மாற்றிக்கொண்ட பிறகே தகுதி பெறுவார்கள். எனவே முதலில் பெயர் மாற்ற வேலைகள் செய்துவிட்டுதான் விண்ணப்பிக்க முடியும்.


கடைசி தேதி


ஜனவரி மாதத்துக்குள் விண்ணப்பிக்க தவறியவர்கள், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மூன்று மாதங்களுக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த மாதங்களில் சமையல் எரிவாயுவுக்கான தொகை வழக்கமாக கிடைக்கும் மானிய விலையில்தான் இருக்கும்.ஏப்ரல் 01 முதல் ஜூன் 31 வரை யிலும் விண்ணப்பம் செய்ய கடைசி கெடு தேதி. இந்த நாட்களுக்குள் விண்ணப்பித்தால் அந்த மாதத்திற்கான மானியத் தொகையை இருப்பு வைத்திருப்பார்கள். ஆனால் சமையல் எரிவாயுவை அப்போதைய சந்தை மதிப்பில்தான் வாங்க வேண்டும். சந்தை மதிப்பில் வாங்கிவிட்டு பிறகு மானியத்தை கிளைம் செய்து கொள்ளலாம்.


இந்த ஆறு மாதங்களுக்குள் பதிவு செய்யாமல், ஜூலை 01க்கு பிறகு பதிவு செய்பவர்கள் வழக்கமான சந்தை மதிப்பு என்னவோ அதைக் கொடுத்துதான் வாங்க வேண்டும். அந்த மாதத்திலிருந்து மானியம் கிடைக்கும்.வருகிற ஜனவரியிலிருந்து இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளதால் உடனடியாக விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்.எரிவாயு இணைப்பு வாங்கிய நபர் உயிருடன் இல்லை என்றால் அவரது வாரிசுகள் நேரடியாக இந்த மானியத்தை பெற முடியாது. எரிவாயு இணைப்பை தங்களது பெயருக்கு மாற்றிக்கொண்ட பிறகே தகுதி பெறுவார்கள்.

கருத்துரையிடுக Disqus

 
Top