0

 
"ஆகாசவாணி! செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி " இதைப் படிக்கும் போது மனம் காலை ஏழே கால் மணி பரபரப்பை உணர்ந்தது. அந்த நேர ஸ்கூல் , கல்லூரிக்கு செல்லும் பரபரப்பு , அடுக்களையிலிருந்து மிதந்து வரும் சாம்பார் கொதிக்கும் மணம் எல்லாமே நினைவுக்கு வந்தன..

' ரேடியோ " பொழுது போக்கு அம்சத்தை நம் வீட்டு கூடத்திற்கு கொண்டு வந்தது. இன்று தொழில் நுட்பம் எத்தனையோ சாதனங்களை நம் கையருகில் கொண்டு வந்திருக்கலாம். அதற்கெல்லாம் முன்னோடி 'ரேடியோ.'

கடிகாரம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் காதால் நிகழ்ச்சியைக் கேட்டே நேரம் தவறாமல் காரியங்களை நடத்திக் கொண்டிருந்தோம்.

"ஆகாஷவாணி " , " ஆல் இன்டியா ரேடியோ " ஆனது.

நேயர் விருப்பம் இன்றும் எனக்கு விருப்பமே ! என்னைப் போல் நிறைய பேர் உண்டென்றே நினைக்கிறேன்.

மெட்ராஸ் A , மெட்ராஸ் B , திருச்சி என்று பல ஸ்டேஷன்களை மாற்றி மாற்றி கேட்டிருக்கிறேன்.

ரேடியோ சிலோன் ல் வரும் பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சி பலரும் விரும்பிக் கேட்கும் ஒன்று ஆகும்.
"வாழ்த்துகிறவர்கள் அம்மம்மா, அப்பப்பா, மாமி, மாமா ....... " என்று நீண்டு கொண்டே போகும் லிஸ்ட்டை யே ரசிப்பவர்கள் நிறைய பேர்.


வீட்டில் ரேடியோ வாங்கிய அன்று எப்படி ஒரு சந்தோஷத்தில் மிதந்தோம் .அப்படியே நினைவில் இருக்கிறது.

திருச்சி ஸ்டேஷனும் ரேடியோ சிலோனும் கேட்பதற்காக ஒரு பெரிய ஏரியல் ஹாலில் நீளமாகக் கட்டியும் , ரேடியோ சிலோனில் TMS ம் , சுசீலாவும் தொண்டைக் கட்டு வந்தது போல் தான் பாடிக் கொண்டிருந்தார்கள்.

விவித்பாரதி , நாம் வணிகமயமாகப் போவதை முன்கூட்டியே நம் வீட்டிற்குள் வந்து அறிவித்தது. அதில் வரும் தேன்கிண்ணம் நிகழ்ச்சிக்கு அப்போதெல்லாம் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு. சினிமாப் பாட்டுக்கு மட்டுமல்ல , அதில் வந்த விளம்பரங்களுக்கு கூடத்தான் ரசிகர்கள். சாரிடான் , அர்ச்சனா ஸ்வீட்ஸ், நரசுஸ் காபி விளம்பரம்., இது போல் நிறைய ......... .மனதைக் கொள்ளையடிக்கும். 


சினிமா பாட்டு மட்டுமல்ல, கர்நாடக சங்கீதமும், இசைவிழா, நாடக விழா எல்லாமே காதிற்கு விருந்து தான்.

கிரிக்கெட் மேட்ச் கமெண்டரி மறக்க முடியுமா.? கிரிக்கெட் க்ரௌண்டை கண்ணால் பார்க்காமலே mid on , midoff, covers எல்லாமே கற்பனையில்.......... நாம் நினைக்கின்ற இடம் தான் . .Pataudi catch பிடித்தது அப்படியே மனக் கண்ணில் விரிய வைக்கும் , கமெண்டேடர் சாமர்த்தியம்.
 
 
இது மட்டுமா, கும்பாபிஷேகங்கள், பெரிய தலைவர்களின் மரணச்செய்தி, எல்லாமே சட்டென்று வீடு வந்து சேர்ந்து விடும் . வானிலை அறிக்கையும் வந்தடையும்.
நம்மை மகிழ்விக்கும், ரேடியோவைக் கண்டுபிடித்துக் கொடுத்த ' மார்கோனி 'க்கு
" hats off ".

கருத்துரையிடுக Disqus

 
Top