0
2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பு வாய்ந்த நகரம் - காஞ்சி. ஆற்றல் வாய்ந்த இந்நகரத்தில் அமைந்துள்ளது வரத ராஜ பெருமாள் கோயில்.

ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில், அத்திவரதர் பெருமாள் சயனக் கோலத்தில் குளத்துக்குள் பள்ளி கொண்டுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து உற்சவம் நிகழும்.

கிருஷ்ணரின் எட்டு பிரதம பக்தர்களில் ஒருவரான வல்லபாச்சாரியார் பெருமாளுக்கு சுக்குமிளகிட்ட பச்சரிசி இட்லியை மந்தாரை இலையில் படைத்த தால், இன்றும் அவ்வழக்கம் குடலையில் இட்லி செய்து காஞ்சிபுர இட்லியாகத் தொடர்கிறது.

வரதராஜருக்கு தினப்படி இரண்டு இட்லிகள் செய்து காலையில் நைவேத்தியம் செய்யப்படுகிறது.

ஒன்று கோயிலுக்கும் மற்றொன்று கட்டளைதாரர்களுக்கும். வழக்கம் போல பெருமாளுக்கு படைக்கும் இட்லியில் மிளகாயும் நல்லெண்ணெயும் சேர்ப்பதில்லை. மாற்றாக மிளகும் நெய்யும் சேர்க்கப்படுகின்றன. ஒரு இட்லி 2 கிலோவுக்கும் அதிக எடை கொண்டது.
காஞ்சி மற்றும் சுற்றுவட்டாரத்தில் எங்கெங்கும் இந்த இட்லி மயமே. ஹோட்டல்கள், திருமணங்கள், விசேஷங்கள் என எல்லா நிகழ்வுகளிலும் காஞ்சி இட்லி சிறப்பிடம் பிடிக்கிறது.

‘காஞ்சிபுரம் இட்லி’ என்று ஆங்காங்கே விதவிதமாகச் சுவைத்திருந்தாலும் நிஜ காஞ்சிபுரம் இட்லி வேறு மாதிரி இருக்கிறது. பொதுவாக, தயிர் புளிப்பில் மிளகு சேர்த்தோ, வெறுமனே மிளகு சேர்த்தோ பல வகைகளில் ஹோட்டலிலும் மற்ற இடங்களிலும் காஞ்சிபுரம் இட்லி கிடைக்கிறது.

ஒரிஜினல் இட்லியானது, லேசான பழுப்பு நிறத்தில் நிறைய மிளகு, சுக்கு சுவையுடன், அருமையான வாசனையுடன் மனம் நிறைய செய்கிறது.
இந்த இட்லி வழக்கமாக மூங்கில் குடலையில் செய்யப்படுகிறது, அந்த மூங்கில் குடலை, காஞ்சி மற்றும் சுற்றுவட்டாரங்களில் மட்டுமே கிடைக்கிறது, அதனால் அங்கிருந்து குடலை வரவழைத்து பாரம்பரிய முறையில் முயற்சித்தோம்.
 
மூங்கில் கொண்டு பின்னப்பட்ட குடலையில் மந்தாரையை சுருட்டி செருகி, மாவை நிறைத்து, மேலே நூலால் கட்டி, வேக வைக்க வேண்டும்.பாரம்பரிய முறையில் செய்வது சிறப்புதான்...



சீக்ரெட் ரெசிபி- காஞ்சிபுரம் இட்லி:

என்னென்ன தேவை?

பச்சரிசி - 2 கப்,

உளுந்து - 1 கப்,

வெந்தயம் - 2 டேபிள்ஸ்பூன்,

மிளகு - 3 டேபிள்ஸ்பூன்,

சீரகம் - 3 டேபிள்ஸ்பூன், (மிளகு-சீரகம்
 

இரண்டையும் ஒன்றிரண்டாக பொடிக்கவும்)

பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,

கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி (பொடியாக நறுக்கவும்),

சுக்குத்தூள் - 10 கிராம்,

உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - 1 கப்.

எப்படிச் செய்வது?
*அரிசி, பருப்பு, வெந்தயம் - மூன்றையும் ஒன்றாக 3 மணிநேரம் ஊற வைத்து கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

* அத்துடன் மிளகு, சீரகத்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, சுக்குத்தூள், உப்பு ஆகியவற்றுடன் நல்லெண்ணெயும் சேர்த்து கலந்து வைக்கவும்.

* குக்கரில் ஒரு வட்ட அடுக்கில் அல்லது கேக் ட்ரேயில் நெய் தடவி பாதி அளவு ஊற்றி, குக்கரை மூடி வெயிட் போடாமல், விசில் வரும் இடத்தில் ஒரு சிறிய கப் கொண்டு மூடி, சுமார் 40 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* வெந்ததும் எடுத்து கவிழ்த்து, துண்டு போட்டு, புதினா சட்னி, தேங்காய் சட்னி, மிளகாய் பொடியுடன் பரிமாறவும்.

கருத்துரையிடுக Disqus

 
Top