0
இது கோயிலுக்குள் இருக்கின்ற ஒரு சாதாரண தீர்த்தக் கிணறுதானே? 

இதைப் போய் கங்கை என்று சொல்கிறீர்களே...?''- பதஞ்ஜலி முனிவரிடம் இன்னொரு ரிஷி இப்படிக் கேட்டார். பதஞ்ஜலி புன்னகைத்தார். 

""நண்பரே! காசியில் விஸ்வநாதர் இருக்கின்றாரே, அந்தச் சிவலிங்கத்தின் வேர் ஒன்று தென் கோடி வரை நீண்டு, இதோ இந்தக் கோயிலில் இன்னொரு சிவலிங்கமாக முளைத்திருக்கிறது. அதுதான் நாம் பார்க்கின்ற அவிநாசி லிங்கம். காசி விஸ்வநாதருக்கு இணையான மூர்த்தி என்பதால் இந்தச் சிவனுக்கு, "வாராணஸிக் கொழுந்து' என்றொரு பெயரே உண்டு. இந்தக் கிணற்றையும், "காசிக் கிணறு' என்றுதான் சொல்வார்கள்'' என்றார் பதஞ்ஜலி.



ஆனால் சக முனிவருக்கு முழு நம்பிக்கை வரவில்லை. அதை உணர்ந்த பதஞ்ஜலி, தன் கையிலிருந்த தண்டத்தை எடுத்து காசிக் கிணற்றில் போட்டார். பிறகு, ""போகலாம் வாருங்கள்'' என்று நண்பரை அழைத்தார்.
இருவரும் பல மாதங்கள், பற்பல கோயில்களாகத் தரிசித்துக் கொண்டேபோய் கடைசியில் வாராணஸி என்றழைக்கப்படும் காசி மாநகரை அடைந்தார்கள். அங்கே கங்கையில் நீராட இறங்கினார்கள். அப்போது அந்தப் புண்ணிய நதி, தன் அலைக்கரங்களால் பதஞ்ஜலியின் தண்டத்தை சுமந்து வந்து அவரிடமே சேர்ப்பித்தது. இதைப் பார்த்த பதஞ்ஜலியின் நண்பர், வியப்பால் கை குவித்தார். காசிக் கிணற்றில் உள்ள தண்ணீர், கங்கை நீர்தான் என்ற பேருண்மையை உணர்ந்தார். அவர் மனதும் கங்கா பிரவாஹம் ஆகி, அவருடைய கண்களிலும் ஆனந்த கங்கை பொங்கியது. இப்படிப்பட்ட புண்ணியக் கிணறு இருக்கும் ஆலயம் அவிநாசியில் உள்ளது.


அவிநாசியில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற அற்புதங்களைப் பட்டியலிட்டு மாளாது.

கேரள நாட்டு அந்தணன் ஒருவன், பாவங்களால் பேய் வடிவம் பெற்றான். இங்கே வந்து வணங்கியதும் தேவ வடிவம் பெற்று சிவலோகம் சேர்ந்தான்.

குருநாத பண்டாரம் என்பவர், தனது பூஜையில் சிவலிங்கம் வைத்து அன்றாடம் வழிபடுவார். அரசாங்க அதிகாரிகள், பண்டாரத்தின் மகிமை தெரியாமல் அந்த லிங்கத்தைப் பிடுங்கி அவிநாசி ஆலயத் தெப்பக் குளத்தில் எறிந்தனர். பிற்பாடு அங்குள்ள பெரிய மீன் ஒன்று அந்தச் சிவலிங்கத்தை வாயில் ஏந்தி வந்து பண்டாரத்திடம் சேர்ப்பித்தது.
கொங்கு நாட்டை வீர விக்கிரம குமார சோளியாண்டான் ஆண்டு கொண்டிருந்தபோது மந்திரவாதி ஒருவன் அவிநாசியப்பரின் தேர்ச் சக்கரங்களை மந்திரங்களால் நகராதபடி செய்தான். அப்போது அந்த ஊரில் இருந்த வள்ளல் தம்பிரான் என்ற அருளாளர், அவிநாசி இறைவனை மனதார தியானித்து நான்கு சக்கரங்களிலும் திருநீற்றை வீசினார். மந்திரக் கட்டு நீங்கி, தேர் நகர்ந்தது. இது கண்டு மகிழ்ந்த சோளியாண்டான், "வருடா வருடம் தேர் திருவிழாவன்று வள்ளல் தம்பிரானுக்குத்தான் முதல் மரியாதை. தம்பிரானின் காலத்துக்குப் பின் அவருடைய வாரிசுகளுக்கு அந்த மரியாதை வழங்கப்படும்'' என்று அறிவித்தான். இன்றும் தம்பிரானின் வாரிசுகள், தேர்த் திருவிழாவன்று முதல் மரியாதை பெறுகின்றார்கள்.

இப்படித் தோண்டத், தோண்ட அற்புதச் சம்பவங்களாகவே அள்ளித் தரும் அவிநாசியில், சைவ சமயக் குரவர்களில் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனார் செய்த அருஞ்செயல், என்றென்றும் சைவ மக்களால் வியந்து கூறப்படும் விஷயமாகும்...
ஒரு சந்தர்ப்பத்தில் சோழநாட்டுத் தலங்களை தரிசித்துவிட்டு திருப்புக்கொளியூருக்கு (அவிநாசி) வந்தார் சுந்தரர். ஆலயத்தில் உள்ள அவிநாசி அண்ணலைக் காண்கின்ற ஆவலோடு அடியார்கள் புடை சூழ கோயிலை நோக்கி விரைந்தார்.

அப்போது ஒரே வீதியில் இருந்த எதிரெதிர் வீடுகளில் ஒன்றில் மேள சப்தமும், மற்றொன்றில் அழுகை ஒலியும் கேட்டது. ""என்ன இது...?'' என்று உள்ளூர் மக்களிடம் விசாரித்தார் சுந்தரர். அவர்கள், ""ஐயனே! அழுகை ஒலி கேட்கின்ற வீட்டுத் தலைவரின் பெயர் கங்காதரர். அவருக்கு அவிநாசிலிங்கம் என்ற பெயருடைய மகன் ஒருவன் இருந்தான். அவனுக்கு நாலு வயதாகும்போது, இதோ மங்கள மேளம் கேட்கிறதே, இந்த வீட்டிலிருக்கும் தனது நண்பனோடு பக்கத்திலுள்ள தாமரைக் குளத்துக்குப் போனான். அங்கேதான் அந்தப் பரிதாபகரமான சம்பவம் நடந்துவிட்டது.

இரண்டு சிறுவர்களும் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது கங்காதரரின் பிள்ளை அவிநாசிலிங்கத்தை முதலை ஒன்று இழுத்து விழுங்கிவிட்டது. அதைப் பார்த்த அவனுடைய நண்பன், அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்துவிட்டான்.

இந்தச் சோகம் நிகழ்ந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. முதலையிடமிருந்து தப்பிய பாலகனுக்கு இன்று பூணூல் அணிவிக்கும் விழா நடத்துகிறார்கள். "தங்கள் வீட்டுப் பிள்ளையும் உயிரோடிருந்தால் அவனுக்கும் உபநயனம் நடத்தியிருப்போமே?' என்று கங்காதரரின் குடும்பத்தார் சிலர் அழுது கொண்டிருக்கிறார்கள்'' என்றனர்.

சுந்தரர் வந்திருக்கும் செய்தி கங்காதரரின் காதுகளிலும் விழுந்தது. அவர் உடனே தன் மனைவியை அழைத்துக் கொண்டு பரபரவென்று வீதிக்கு ஓடி வந்தார். சுந்தரரின் பாதங்களில் விழுந்து பணிந்தார். முக மலர்ச்சியோடு கை குவித்தார்.

சுந்தரருக்கோ வியப்பு... ""இன்ப மகனை இழந்த அந்தப் பெற்றோர் நீங்கள்தானா?'' என்றார். உடனே கங்காதரரும், அவருடைய மனைவியும், ""ஆமாம் ஐயனே! ஆனால் நடந்தது நடந்துவிட்டது. அதையே நினைத்து வருந்தி என்ன பயன்? உங்கள் அருமை, பெருமைகளைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உங்களை நேரில், அதுவும் நாங்கள் வாழ்கின்ற அக்ரஹாரத்திலேயே தரிசிப்போம் என்று கனவிலும் நினைத்ததில்லை. மகன் போனால் என்ன? மகான் நீங்கள் இருக்கிறீர்களே?'' என்று அன்பு பொங்கக் கூறினார்கள்.

இயல்பிலேயே இளகிய மனம் படைத்த சுந்தரர், அவர்களுடைய அன்பை நினைத்து அகம் குழைந்தார். ""உங்கள் பிள்ளை அவிநாசி லிங்கம் என்னுடன் வராமல் இந்த ஆலயத்தில் குடி கொண்டிருக்கும் அவிநாசி லிங்கத்தை தரிசிக்க மாட்டேன். வாருங்கள்! உங்கள் அன்பு மகன் இறந்த குளத்தைக் காட்டுங்கள்'' என்று ஆணையிட்டார்.

சுந்தரமூர்த்தியின் வேகத்தைக் கண்டு அனைவரும் திகைத்தனர். அவரை தாமரைக் குளக்கரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போனதும் தனது கைகளில் வெண்கலத் தாளத்தை (ஜால்ரா) எடுத்தார் சுந்தரர். ""எற்றான் மறக்கேன்'' என்று ஆரம்பித்து உள்ளங்களை உருக்கும் தேவாரப் பதிகம் ஒன்றை பாடத் தொடங்கினார்.

""புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே!

கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே'' என்று இறைவனை நோக்கி உணர்ச்சி பொங்கக் கேட்டார். அப்போது தாமரைக் குளத்திலே திடீரென்று நீர் பெருகியது. அதன் மேற்பரப்பைக் கிழித்துக் கொண்டு ஒரு பெரிய முதலை கரையை நோக்கிப் பாய்ந்தது. கரையருகே வந்ததும் தனது அகன்ற வாயை மேலும் அகற்றித் திறந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன் அந்த முதலை உண்ட பாலகன், ஏழு வயது நிரம்பிய இளஞ் சிறுவனாய் முதலையின் வாயிலிருந்து வெளிப்பட்டான். 

கரையில் நின்றிருந்தவர்களைப் பார்த்து ஒரு கணம் மருண்டான்; பிறகு மலர்ந்தான். ஓடோடி வந்து, ""அப்பா! அம்மா! அப்பா! அம்மா!'' என்று அரற்றியபடி தன் பெற்றோர்களைக் கட்டித் தழுவி கண்ணீர் பெருக்கினான்.

கங்காதரரும், அவருடைய துணைவியாரும் கதறித் தீர்த்தார்கள். ""கண்ணே அவிநாசி! இதோ இங்கு நிற்கிறாரே இந்த அருளாளர்! இவர்தானடா உனக்கும், எங்களுக்கும் பிரத்யட்ச அம்மையப்பர். அவர் காலைக் கட்டிக் கொள்ளு'' என்று உணர்ச்சி ததும்ப, தட்டுத் தடுமாறிச் சொன்னார்கள்.

அவிநாசிலிங்கம் என்ற அந்தச் சிறுவன், ஆனந்தம் பொங்க சுந்தரரின் திருவடிகளைத் தொழுதான். ""எங்கள் குலக் கொழுந்தை மீட்டுத் தந்த குல தெய்வமே!'' என்று கூவியபடி கங்காதர அய்யரும் , அவரது மனைவியும் சுந்தரரின் பாதங்களில் வேரற்ற மரம்போல விழுந்தார்கள்.
ஊர், இந்த அற்புதத்தைப் பார்த்து வாயடைத்து நிற்கவில்லை; மாறாக வாயார, ""சுந்தரர் வாழ்க! ஆரூரான் வாழ்க! தம்பிரான் தோழர் வாழ்க! எங்கள் தலைவர் வாழ்க!'' என்று கர்ஜித்தது.

சுந்தர மூர்த்தி நாயனார், அவர்களின் வாழ்த்தொலியை புன்முறுவலோடு ஏற்றபடி அவிநாசிலிங்கம் என்ற அந்தச் சிறுவனை அணைத்துக் கொண்டார். அடியார் கூட்டம் பின் தொடர அவிநாசி அப்பரின் ஆலயத்துக்குள் நுழைந்தார். பதிகங்கள் பாடினார். இறைவனுக்கு நன்றி சொன்னார்.

பிறகு மறுபடியும் அக்ரஹாரத்துக்கு வந்தார். எதிர் வீட்டில் கொட்டிக் கொண்டிருந்த மேளக்காரரை அழைத்து கங்காதர வீட்டிலும் மங்கள வாத்தியம் முழங்க வைத்தார். சிறுவன் அவிநாசிக்கு அவரது கண் முன்னாலேயே பூணூல் கல்யாணம் நடந்தது.

""திருவாரூரில் பிறக்க முக்தி. அருணாசலத்தை நினைக்க முக்தி. சிதம்பரத்தைத் தரிசிக்க முக்தி. காசியில் இறக்க முக்தி. ஆனால் அப்பன் அவிநாசியைப் பற்றி வாயாரப் பேசினாலே முக்தி'' என்பார்கள் பெரியோர்கள். இதைப் படித்த நாம் அனைவரும் இனி அதைத்தானே செய்யப் போகிறோம்...!

சென்னை-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோயமுத்தூருக்கு முன்னதாக உள்ளது அவிநாசி.

கருத்துரையிடுக Disqus

 
Top