தன்னுடைய
2015 ஆம் ஆண்டுக்கான, செயலிகள் உருவாக்குபவர்களுக்கான கருத்தரங்கில்,
கூகுள் தன் அடுத்த மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவல்களைத் தந்தது.
ஆண்ட்ராய்ட் எம் என்ற பெயரில் வர இருக்கும் இந்த சிஸ்டம் தற்போதைய வசதிகள்
பலவற்றை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது. கூகுளின் அடுத்த
மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தும் அனுபவத்தினை முழுமையாக
சிறப்பானதொன்றாகத் தரும் இலக்கினை கூகுள் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆண்ட்ராய்ட்
எம் சிஸ்டத்தில் இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் ஒன்றுக்கொன்று தங்களுக்குள்
டேட்டா பரிமாறிக் கொள்ளும் பாங்கில் புதிய மேம்பாடு தரப்பட்டுள்ளது.
தற்போதுள்ள கட்டமைப்பில், பயனாளர்கள் ட்விட்டர் பயன்பாட்டிற்கான
லிங்க்கினைத் தேர்ந்தெடுக்கையில், குரோம் பிரவுசர் வழி வேண்டுமா அல்லது
ட்விட்டரின் அதிகார பூர்வ பிரவுசர் வேண்டுமா எனக் கேட்டு நாம்
தேர்ந்தெடுப்பதற்காகக் காத்திருக்கும். ஆனால், இப்போது, ட்விட்டரில் கிளிக்
செய்தால், ஆப்பரேட்டிங் சிஸ்டமே, அப்போது எந்த அப்ளிகேஷன் மிகச் சிறந்தது
எனத் தேர்ந்தெடுத்து இயக்கும். ஆனால், வேறு ஏதேனும் தர்ட் பார்ட்டி
அப்ளிகேஷனை இதற்கென நிறுவியிருந்தால், ஆண்ட்ராய் எம் என்ன செய்திடும் என்று
கூகுள் அறிவிக்கவில்லை.
கூகுள்,
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களிலும், டேப்ளட் பி.சி.க்களிலும் இயங்கும்
பேட்டரியின் பயன்பாட்டு காலத்தினை அதிகப்படுத்தும் வகையில் சிஸ்டத்தினை
மேம்படுத்தியுள்ளது. இந்தப் புதிய வழிமுறைக்கு Doze எனப் பெயரிட்டுள்ளது.
இயங்காத போது, பல நாள் இயக்கப்படாத செயலிகளை முடக்கி வைப்பதன் மூலம்,
பேட்டரியின் சக்தி சிக்கனப்படுத்தப்படுகிறது.
ஆண்ட்ராய்ட்
எம் சிஸ்டம், யு.எஸ்.பி. டைப் சி வகையினைப் பயன்படுத்த கட்டமைப்பினைத்
தருகிறது. சாதனங்களை சார்ஜ் செய்வதற்குப் புதிய வரைமுறைப் பயன்
கிடைக்கிறது. இதன் மூலம், குறிப்பிட்ட மொபைல் போனை சார்ஜ் செய்திட வேண்டுமா
அல்லது அதன் மூலம் வேறு ஒரு சாதனத்தினை சார்ஜ் செய்திட வேண்டுமா என்பதனை
முடிவு செய்திடலாம். எடுத்துக் காட்டாக, ஒரு ஆண்ட்ராய்ட் எம் டேப்ளட்
பி.சி.யில் யு.எஸ்.பி. டைப் சி கனக்டர் கொண்டிருந்தால், அது ஒரு ஸ்மார்ட்
போனையும் சார்ஜ் செய்திடலாம். அல்லது அந்த ஸ்மார்ட் போன் மூலம் தன்னையும்
சார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஆண்ட்ராய்ட்
எம் சிஸ்டத்தின் இன்னொரு புதிய வசதி, விரல் ரேகை ஸ்கேனர். டச் ஐ.டி. உள்ள
ஐபோனில் உள்ளதைப் போல, ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் பயனாளர்களும் தங்கள்
விரல் ரேகையைப் பயன்படுத்தி போன்களை இயக்கவும் மூடவும் செய்திடலாம். பணப்
பரிமாற்றத்தினையும் மேற்கொள்ளலாம்.
மொபைல் வழி நிதி பரிமாற்ற வழியில், கூகுள் 'ஆண்ட்ராய்ட் பே' (Android Pay) என்ற
ஒரு திட்டத்தை இந்த கருத்தரங்கில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கட்டமைப்பு
என்.எப்.சி. தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. இதனைப் பயன்படுத்தி சிறிய
வணிக நிலையங்களில் என்.எப்.சி. வழி நிதி பரிமாற்றத்தினை மேற்கொள்ளலாம்.
அமெரிக்காவில், 7 லட்சம் விற்பனை மையங்கள், இந்த ஆண்ட்ராய்ட் பே
சிஸ்டத்தில் இயங்குவதற்கு ஒத்துக் கொண்டு கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
போட்டுள்ளன. இதனை அறிவித்த கூகுள், பழைய கூகுள் வாலட் திட்டம் குறித்தும்,
அதன் இன்றைய நடைமுறை குறித்தும் எதுவும் பேசவில்லை.
இணைய இணைப்பில் படிப்பது என்பதும் தகவல்களைத் தேடுவதும் பழக்கமாகிவிட்டதனால், ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டத்தில் Chrome Custom Tabs என்ற
வசதி தரப்பட்டுள்ளது. இதில், ஸ்மார்ட் போனில் இயங்கும் செயலிகள்,
தங்களுக்கென தனியே ஒரு குரோம் டேப் ஒன்றினைத் தங்களுக்கானதாய்க் கொள்ளலாம்.
இதில் கிளிக் செய்தால், அந்த செயலிக்குள்ளாக, ஒரு குரோம் பிரவுசர்
திறக்கப்பட்டு செயல்பாட்டிற்குக் கிடைக்கும். இந்த பிரவுசர் விண்டோ,
குறிப்பிட்ட செயலி போலவே தோற்றமளிக்கும். இதன் மூலம் செயலிகளை இயக்கி,
அதில் படிவங்களை நிரப்பலாம். நிரப்புவதற்குத் தேவையான தகவல்கள், குரோம்
பிரவுசரிலிருந்து எடுத்துக் கொள்ளப்படும்.
இந்த
குரோம் பிரவுசரில் மட்டும் ஒரு வசதி தரப்பட்டுள்ளது. இது இயங்கும்போது,
இணைய இணைப்பின் வேகம் குறைந்தால், தரவிறக்கப்படும் தளத்திலிருந்து, அதிக
டேட்டாவினைக் கொண்டிருக்கும் படங்கள், ஆப்ஜெக்ட்கள் பிரிக்கப்பட்டு,
தளத்தில் உள்ள டெக்ஸ்ட் தகவல்கள் மட்டும் மிக வேகமாக இறக்கித் தரப்படும். ஆப்பிள் நிறுவனத்தின் சபாரி செயலியும், இன்ஸ்டாபேப்பர் அப்ளிகேஷனும் இதைத்தான் செய்கின்றன.
ஆண்ட்ராய்ட்
சிஸ்டத்தில் இயங்கும் செயலிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும் வசதி
மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், பயனாளர்கள், ஓர் அப்ளிகேஷன் எப்படி
இயங்க வேண்டும் என்பதனைக் கட்டுப்படுத்த கூடுதலாகப் பல வழிகளைப்
பெறுகின்றனர். ஏற்கனவே கொடுக்கப்பட்ட அனுமதியை மாற்றிக் கொள்ளவும் வசதி
தரப்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் அனுமதியைச் சில குறிப்பிட்ட
செயலிகளுக்கு மட்டும் வழங்கலாம்; அல்லது அனுமதி மறக்கலாம். எடுத்துக்
காட்டாக, பயனாளர் ஒருவர், வாட்ஸ் அப் செயலி காண்டாக்ட்ஸ் பட்டியலைப்
பயன்படுத்த அனுமதிக்கலாம். அதே நேரத்தில், மைக்ரோபோன் செயலிக்கு அந்த
அனுமதியை மறுக்கலாம்.
சிறிய
வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக, டெக்ஸ்ட்
தேர்ந்தெடுக்கும் வசதி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. பயனாளர் ஒருவர்,
ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டத்தில் உள்ள தகவல் ஒன்றைப் பகிர்ந்து கொண்டால், அந்த
செயலியின் சாப்ட்வேர், எந்த தொடர்புடன், எந்த அப்ளிகேஷன் வழி பயனாளர்
அவற்றைப் பகிர்ந்து கொள்கிறார் என்பதனை நினைவில் கொள்ளும். இதன் மூலம்,
இந்த சிஸ்டத்தில், அலாரம், நோட்டிபிகேஷன், ரிங் டோன் போன்ற ஒலிக்கும்
செயல்களுக்கு, தனித்தனியே ஒலி அளவினை நிர்ணயம் செய்திடலாம். தற்போதைக்கு
ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டம் சோதனைப் பதிப்பாகக் கிடைக்கிறது. இதன் முழு
இயக்கத் தொகுப்பு 2015 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வழங்கப்படும்.
கருத்துரையிடுக Facebook Disqus