தாலி கட்டிய நாள் முதலாய் எங்கள் சந்தோஷத்துக்கு வேலிகட்டிய மாமியார்
பெத்த மகள்களே.. ! கடவுளின் துகள்களே !,
தந்திரத்தால், தலையணை மந்திரத்தால், தொட்டுத் தாலி கட்டிய எங்களை
எந்திரமாகச் சுழலவிடும் திரிபுரசுந்தரிகளே !
கல்யாணத்துக்கு முன்னால இனிக்க இனிக்கப் பேசினீங்க...
ஆனா, கல்யாணம் ஆனதில் இருந்து தட்டு டம்ளர்களை எடுத்து வீசுறீங்க …
சத்தியமா நினைச்சுப் பார்க்கலை இப்படி ஒரு மாறுதலை …
அதனாலதான் அரசாங்க பாருக்குத் தேடிப் போறோம் ஆறுதலை.
கொஞ்சிப் பேசிய குரல் எங்கே ?
கிள்ளி விளையாடிய விரல் எங்கே ?
எங்க காதுல பாடின 'சிநேகிதனே... சிநேகிதனே...’ பாட்டு எங்கே ?
ரிஷப்சனுக்கு வாங்கின ரேமண்ட்ஸ் கோட் எங்கே... ?
ஆமா, நேத்து சட்டையில வெச்சிருந்த 100 ரூபாய் நோட்டு எங்கே ? !
உங்களை கரெக்ட் பண்ணி, கல்யாணம் பண்ண உதவின ஃப்ரெண்ட்ஸ்களையே கட் பண்ணச் சொல்லி ஊட்ட ஆரம்பிக்கிறீங்க பொங்கச்சோறு...
கடைசில எங்க நெருங்கிய நட்பு வட்டாரத்தைச் சுருங்கிய நட்பு வட்டாரம்
ஆக்கிட்டுத்தான் போடுறீங்க மத்தியான சோறு.
நட்புனா என்ன தெரியுமா ? !
சின்ன பிரச்னைக்குக்கூட செவுத்துல காலைவெச்சு உதைக்கிற குங்ஃபூ இல்லம்மா...
சுமாரா ஆடினாக்கூட 'சூப்பர்’னு மார்க் போடுற குஷ்பூம்மா... குஷ்பூ …
காபி குடிச்சுட்டா 'கப்’பைத் தூக்கி எறியலாம்...
ஆனா, கல்யாணம் பண்ணிட்டோம்னு நட்பைத் தூக்கி எறிய முடியுமா ?
ஜனவரி மாசம் ரெடி பண்ணின சாம்பாரை, பிப்ரவரி வரைக்கும் ஃப்ரிட்ஜ் என்ற
மார்ச்சுவரியில் பாதுகாப்பா வைக்கிறீங்க.
டி.வி, டேப் ரிக்கார்டரைத் தவிர மத்த எல்லாத்தையும் அதுக்குள்ளே திணிக்கிறீங்க. !
ஷாப்பிங் போயி லேட்டானாலோ, சீரியல் சென்ட்டிமென்ட்டுக்கு எமோட்
ஆகிட்டாலோ, உடனே உப்புமா கிண்டிக் குடுக்கிறீங்க பாருங்க...
மக்கழே, வாரம் ஒரு தடவை கிண்டுனாதான் அது உப்புமா...
வருஷம் முழுக்க அதையே கிண்டுறது ரொம்பத் தப்பும்மா …. !
போருக்குப் போனவன்கூடப் பொழைச்சு வந்திருக்கான்,
ஆனா, பொண்ணுங்ககூட புடவை எடுக்கப் போனவன், கூடாரம் கவிழ்ந்து
சேதாரமாகிப் போனதாதான் பலப் பல வரலாற்று ஆதாரங்கள் சொல்லுது.
பொண்டாட்டிகூட துணியெடுக்க 'அமர்க்களம்’ அஜித் போல போன பல பேரு,
'ஆரம்பம்’ அஜித் போல தலை நரைச்சு வந்த தமாஸு ஊரு முழுக்க நிறையவே இருக்கு.
அரசமரம் போல இருக்கும் புருஷ மரங்களின் தேக்கு உடம்பையே உதறவைக்கிற அளவு, புருஷனை அதட்டுறதுல பிஹெச்.டி., முடிச்ச நீங்க, கிச்சன்ல கரப்பான்பூச்சியையும், பாத்ரூம்ல பல்லியையும் பார்த்துட்டுப் போடுவீங்க பாருங்க ஒரு சத்தம்....
அதைக் கேக்கிற எங்களுக்கு, ஏதோ விட்டலாச்சார்யா வீட்டுக்குள்ளயே பேய்
வந்த மாதிரி தலைக்கு ஏறும் பித்தம் .!
ஒரு தக்குனூண்டு கரப்பான்பூச்சிக்கே பயந்து கணவனைத் துணைக்குக் கூப்பிடுறீங்களே ? நாங்களும்தான் பொண்டாட்டிக்குப் பயப்படுறோம். ஆனா, என்னைக்காவது அப்படில்லாம் கத்திக் கூப்பாடு போட்டிருக்கோமா ?
எண்ணெயை விட்டு செஞ்ச பன்னு மேல கொஞ்சம் வெண்ணையைத் தடவுன மாதிரி, லைட்டா தொப்பை வந்தாலே, 'உடம்பைக் குறை, வயித்தை மறை’னு, காவடி சிந்து முதல் கண்ணீர் சிந்து வரை பேச்சா பேசிக் கொல்றீங்க.
இல்ல தெரியாமத்தான் கேட்கிறேன்... ?
இது என்னம்மா நியாயம் ?
டயட்டாவும் புருஷன்தான் இருக்கணும், கொயட்டாவும் புருஷன்தான் இருக்கணுமா ?
ஐ டோன்ட் நோ ஒய்... ஆல் ஹஸ்பண்ட்ஸ் சொல்லிங் பொய்.
இது எதுனாலனு உங்களுக்குப் புரியணுமா … ?
நாங்க சொல்ற எல்லா பதில்களுக்கும், நீங்க திருப்பிக் கேள்விகளா கேட்டா,
நாங்க பதிலா சொல்லுவோம்.. ?
பொய்தான் சொல்லுவோம் !
வீட்டுக்கு வந்த மனுஷன், பசி ஏப்பம் விட்டாக்கூட பீர் ஏப்பம்னு நினைச்சு
மோப்பம் புடிக்கிறது,
'சாப்பாடு போடும்மா’னு கெஞ்சிக் கேட்டாலும், ரிமோட்டைத் தூக்கி தலையில அடிக்கிறது,
வாய் திறந்து பேசினாலே நெருப்பா முறைக்கிறது.
வேண்டாம் பேபிம்மா கோவம்,
ஆம்பளைங்க ஆல்வேஸ் பாவம் …. !
கல்யாணமோ, காதுகுத்தோ, சீமந்தமோ, சினிமாவோ என்னைக்காவது சீக்கிரமா கிளம்பி இருக்கீங்களா ?
எட்டு முழம் ஸாரியை நீங்க பாடில சுத்தறதுக்குள்ள, அசோக் லேலண்டு லாரிக்கே பாடி கட்டிடலாம். !
நீங்க மேக்கப் முடிக்கிறதுக்குள்ள, 'இதுவரைக்கும் நீ மந்திரி, இந்த
நிமிஷத்துல இருந்து நீ எந்திரி’னு அம்மா மினிஸ்ட்ரியையே மாத்திடுறாங்க.
கிளியோபாட்ராவுக்கு எதுக்கும்மா த்ரெட்டிங்கு ?
மோனலிசாவுக்கு எதுக்கும்மா ப்ளீச்சிங்கு ?
தகரத்துக்கு ரப்பிங் பாலிஷ் போடுறது லாஜிக்...
தங்கத்துக்கு டால்கம் பவுடர் போடுறதுல என்ன மேஜிக் ?
நீங்கள்லாம் தங்கம்மா... தங்கம்.
ஊருக்குப் போற அன்னைக்குத்தான் பல கணவர்கள் பாருக்குப் போறாங்க.
அதைப் புரிஞ்சுக்காம, 'கதவைத் தொறந்து போட்டுத் தூங்காதீங்க...
சிலிண்டரை ஆஃப் பண்ணுங்க, டி.வி சுவிட்சை ஆஃப் பண்ணுங்க’னு மொபைல்லயே குடும்பம் நடத்துறீங்களே... ?
முடியலைம்மா …..!
எதையாவது புரியிற மாதிரி பேசுறீங்களா ?
'அஞ்சு நிமிஷம் சும்மா இருக்குதா... அப்படியே அப்பன்போல’னு நீங்க சொன்னா, லேப்டாப்பை மூடிவெச்சுட்டு நாங்க குழந்தையைப் பார்த்துக்கணும்னு அர்த்தம். !
'ஆபீஸுக்கு சீக்கிரம் போகணுமா?’னு நீங்க கேட்டா, 'பாத்திரம் நிறைய
சேர்ந்திடுச்சு... கொஞ்சம் வெளக்கித் தர்றீங்களா?’னு அர்த்தம்.
'தலை வலிக்குது’னு சொன்னா, ஈவ்னிங் வரப்பவே டிபன் வாங்கிட்டு வரணும்னு அர்த்தம்...
இதையெல்லாம் புரிஞ்சுக்கவே கோனார் நோட்ஸ் ஒண்ணு போடணும் .
கல்யாணமான நாளுல இருந்து வீட்டுக்குள்ள முணுமுணுப்பும், தொணதொணப்பும்தான் இருக்கே தவிர, என்னைக்காவது ஒரு கிளுகிளுப்பு இருக்குதா ?
வருஷத்துல 365 நாள் இருக்கு...
அதுல ஒரு நாள் உங்க பொறந்தநாளு. அதை மறந்தா என்னமோ, அம்மாவைச் சந்திச்சுட்டு வந்த அதிருப்தி எம்.எல்.ஏ - வை கேப்டன் முறைக்கிறதுபோல பாக்கிறீங்க.
சரி பொறந்த நாளுகூட ஓ.கே...
சோஷியல் மேட்டர் பண்ணிக்கலாம். !
ஒவ்வொரு கணவனும், தன் சந்தோஷத்தின் நினைவு நாளா நினைக்கிற கல்யாண நாளை, நினைவிலேயே வைக்கசொன்னா எப்படிம்மா ?
வீட்டுக்கு வந்தவுடனே 'வாயை ஊது’னு சொல்றீங்க.
அதுவே விவரமா ஏதாவது பேசுனா 'வாயை மூடு’னு சொல்றீங்க. !
இதைத்தான் 'எகனைக்கு மொகனை’னு சொல்வாங்க.
எங்க மேல ஏன் இவ்வளவு குரோதம் ?
மனைவிகளே... மனைவிகளே, !
நீங்கள் எங்களை வீட்டுக்கு வெளியே தூக்கியெறிந்தாலும், நாங்கள் வீட்டு
வாசலில் செருப்பாகக் கிடப்போம்.
துணைவிகளே, துணைவிகளே, !
நீங்கள் எங்களைக் கோபத்தில் கும்மியெடுத்தாலும், குழம்புச் சட்டியில்
பருப்பாகக் கொதிப்போம் ..
'கேம் விளையாடிட்டுத் தர்றேன்... செல்போனைக் குடு’னு கேட்கிறப்பவே, அதுல பாம் செட் பண்ணுவீங்கனு எங்களுக்குத் தெரியாதா ?
பொம்பளைங்கன்னா கடுகு டப்பா, மொளகு டப்பால காசை ஒளிச்சுவைக்கிறதும்...
ஆம்பளைங்கன்னா கால் லிஸ்ட், கான்டாக்ட் லிஸ்ட்ல ரிஸ்க் நம்பரை
அழிச்சுவைக்கிறதும் சகஜம்தானே ….! ?
ஃபேஸ்புக்ல எங்களோட நடமாட்டத்தை உளவுபார்க்க ஃப்ரெண்ட்ஸ் ஐடி, ஃபேக் ஐடினு வர்றீங்க.
ஆட்டோட தாடியைப் பார்த்தே, அது இளங்கறியா, கடுங்கறியானு கணிச்சுச் சொல்ற நாங்க, எங்ககூட சாட்டிங் போடுறது லேடியா இல்ல கேடியானு கண்டுபிடிக்கவா மாட்டோம் ? ?
ஆல் மனைவீஸ், நல்லா கேட்டுக்கங்க...
நைட்டிக்குத் துப்பட்டாவா துண்டு செட்டாகாது,
ஃபேஸ்புக்ல உங்க துப்பறியும் படம் ஹிட்டாகாது .
பக்கத்து வீட்டு பாட்டில இருந்து நீங்க போற பியூட்டி பார்லர் ஆன்ட்டி வரை
எங்களை 'அண்ணா’னு கூப்பிடச் சொல்லிவெச்சிருக்கீங்களே... அதுதான்
வன்கொடுமைகளுக்கு மத்தியில் பெண்கொடுமை.
ஒரு புருஷனோட பிரச்னைகளைப் புரிஞ்சுக்கணும்னா, ஒரு மாசம், வேணாம், ஒரு வாரம் நீங்க புருஷனா இருந்து பாருங்க...
ஓ, சயின்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி அதுக்கு அனுமதிக்காதா ?
அப்போ, ஆண்டவனாப் பார்த்து பொண்டாட்டிங்களுக்கு ஒரு பொண்டாட்டி
அனுப்பிவெச்சாதான், பொண்டாட்டிங்களுக்கு, பொண்டாட்டிங்க பண்ற டார்ச்சர் புரியும்.
கருத்துரையிடுக Facebook Disqus