0
3dMBt1U.png?1

குழந்தைகள் காணாமல் போவதும், கடத்தப்படுவதும், கடத்தப்பட்டு வேலையில் ஈடுபடுத்தப்படுவதும், இன்றைக்கும் இந்தியாவில் நடக்கின்ற கொடுமை எனப் பல சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். காணாமல் போகும் குழந்தைகளைக் கண்டறிந்து தகவல்களைத் தெரியப்படுத்தவென, மத்திய அரசு இணைய தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. இந்த இணைய தளம் http://khoyapaya.gov.in/mpp/home என்ற முகவரியில் இயங்குகிறது. இதன் பெயர் - 'Khoya-Paya'. பெண்கள் மற்றும் குழ்ந்தைகள் நலத்துறை அமைச்சரும், தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சரும் இதனை அண்மையில் தொடங்கி வைத்தனர். 

தவறவிடப்பட்ட குழந்தைகள், சந்தேகத்திற்கு இடமான முறையில் திரியும் குழந்தைகள், சந்தேகப்படும் வகையிலான நபர்களிடம் உள்ள குழந்தைகள் எனப் பல்வேறு பிரிவுகளில், இத்தளத்தில் தகவல்களைப் பதியலாம். ஏற்கனவே இதே அமைச்சகம் காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிவதற்கான இணைய தளம் ஒன்றை இயக்கி வருகிறது. அதில் குடிமக்கள், குழந்தை காணாமல் போனாலோ அல்லது சந்தேகத்திற்கிடமான முறையில் அலைந்து திரிந்தாலோ, என்ன செய்திட வேண்டும் எனத் தெரிவிக்கிறது. காவல்துறையும் எப்படி செயல்பட வேண்டும் என்பதனை இந்த தளம் அறிவிக்கிறது. இது முழுக்க முழுக்க பொது மக்கள் மற்றும் காவல்துறை இணைந்து செயல்படுவதற்கான அடிப்படையை வழங்கும் இணைய தளமாகும்.


எனவே தான், அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய தளம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் யாவரும் தாங்களாகவே காணாமல்போன குழந்தைகள் குறித்த தகவல்களை தளத்தில் ஏற்றலாம். யாரேனும், சந்தேகத்திற்கிடமான முறையில், குழந்தைகள் நடமாடுவதைக் கண்டால், அவர்களை நிழற்படம் எடுத்து இந்த தளத்தில் பதியலாம். தங்கள் குழந்தைகளைத் தவறவிட்ட பெற்றோர்களும் தகவல்களை அமைக்கலாம். இது காவல் துறை நடவடிக்கையைப் பிரதிபலிக்காது. இதில் பதியப்படும் தகவல் அறிக்கையை, குழந்தை காணாமல் போனதற்கான காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையாகக் (First Information Report (FIR)) கொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, ஏழைகளின் குழந்தைகளே காணாமல் போகின்றனர். அல்லது கடத்தப்படுகின்றனர். இந்த இணைய தளம் அப்படிப்பட்ட பெற்றோர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று, இத்தளத்தைத் தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் ரவி பிரசாத் கூறினார். இந்த தளத்தின் சேவைகளைப் பயன்படுத்த மொபைல் அப்ளிகேஷன் ஒன்றும் உருவாக்கப்பட்டு வழங்கப்படும் எனத் தெரிகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், 70 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போவதாக தேசிய குற்றப் பதிவு மையம் (National Crime Record Bureau) அறிவித்துள்ளது. 2010ல் இந்த எண்ணிக்கை 77,000 ஆக இருந்தது. 2011ல் இது 90 ஆயிரமாக உயர்ந்தது. 2012 முதல் 2015 ஆம் ஆண்டுக்கான காலத்தில், மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 23,597 மட்டுமே. 

இந்த தளத்தினை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பெருக்கும் திட்டத்திற்கான அமைச்சரவை வடிவமைத்து வழங்கியுள்ளது

கருத்துரையிடுக Disqus

 
Top