பேஸ்புக் நிறுவனம் புதிய அப்ளிகேஷன் ஒன்றை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் பெயர் “பேஸ்புக் லைட்” (Facebook Lite). நூறு கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களை உலகெங்கும் பேஸ்புக் பெற்றுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள், வேகம் குறைந்த 2ஜி நெட்வொர்க்கினையே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பேஸ்புக் பயன்படுத்துவது இவர்களுக்கு உற்சாகமூட்டுவதாய் இல்லை. இந்த குறையைப் போக்கி, பேஸ்புக் செயலியில் செயல்படுவதை வேகமாக்க, பேஸ்புக் நிறுவனம், இந்த செயலியை வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்ற ஜனவரி முதல், இந்த செயலி சோதனையில் இருந்து வந்தது. இதனை உருவாக்கிய குழுவின் தலைவர் விஜய சங்கர் இது பற்றிக் குறிப்பிடுகையில், ''ஆப்பிரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில், இதனை சோதனைக்கென வெள்ளோட்டமிடுகையில், மக்களிடமிருந்து அதிக வரவேற்பு இருந்தது. அதனைத் தொடர்ந்து, செயலியை எந்த அளவிற்கு, அளவில் குறைந்ததாக அமைக்க முடியுமோ, அந்த அளவிற்குச் சிறியதாக அமைத்துத் தற்போது கூகுள் பிளே ஸ்டோர் வழியாக வழங்குகிறோம்” என்றார். சோதனைப் பதிப்பினை தரவிறக்கம் செய்து பயன்படுத்தியவர்களில், 50 ஆயிரம் பேர் இது குறித்து முழு திருப்தி தெரிவித்துள்ளனர்.
இதனை மொபைல் போனில் பதிந்து கொண்டால், இந்த அப்ளிகேஷன், மெதுவாக இயங்கும் நெட்வொர்க் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களில், இணைய இணைப்பினை வேகப்படுத்தும். இணைய இணைப்பினைத் தரும் அலைக்கற்றை வரிசை மெதுவாக இயங்கும் போது, இந்த செயலி உடனே இயங்கி, டேட்டா பரிமாற்றத்தினை விரைவாக மேற்கொள்ள வழி தரும். இந்த செயலி போனில் 1 எம்.பி. இடத்தையே எடுத்துக் கொள்ளும். விரைவாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலி தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் (Play store) இதனைப் பெற்றுக் கொள்ளலாம்.
இது பற்றி மார்க் தன் முகநூல் பக்கத்தில் எழுதுகையில், “உலகம் முழுவதும் உள்ள அனைத்து பிரிவினருக்கான செயலிகளை வடிவமைக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றுகிறோம். நாம் அனைவரும் இணைப்பில் இருக்கும் நிலை வரும் வரை இந்த முயற்சி தொடரும்” என்று குறிப்பிட்டுள்ளார். பேஸ்புக் லைட் அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான், கூகுள் நிறுவனம் தன் ”ஆண்ட்ராய்ட் ஒன்” (Android One) திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில் தரப்படும் செயலி, விலை குறைந்த மொபைல் போன்களில், குறைந்த வேகம் கொண்ட இணைய அலைக்கற்றை வரிசையில், புதிய அப்ளிகேஷன்களை வேகமாக இயக்கும். இந்தியா மற்றும் இந்தோனேஷியா உட்பட ஆறு நாடுகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கூகுள் தான் தரும் தேடல் முடிவுகளை வேகமாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்ல பல செயலிகளைத் தயார் செய்து வருகிறது. கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே, முதம் முதலாக மொபைல் போனில், 2ஜி நெட்வொர்க் வழியாக இணையம் தேடும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் குறி வைத்தே இத்தகைய செயலிகளை உருவாக்கி வழங்குகின்றனர். இவர்களை முதல் கட்டத்திலேயே தங்கள் செயலிகள் மூலம் வளைத்துப் போட்டுவிட்டால், தங்கள் இணைய வர்த்தகம் மிக வேகமாக உயர்ந்து லாபம் தரும் என கணக்குப் போடுகின்றனர்.
APK DOWNLOAD LINK :CLICK HERE
கருத்துரையிடுக Facebook Disqus