இந்திய இணைய வெளியில், 'Golroted' கோல்ரோடெட் என்னும் வைரஸ் பரவி வருவதாக, வைரஸ் பரவுதல் குறித்து கண்காணித்து வரும் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இவை, தனிநபர் மின் அஞ்சல்களையும், அவர்களின் வங்கிக் கணக்கு குறித்த தகவல்களையும் இலக்கு வைத்து திருடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு ட்ரோஜன் வகை வைரஸ் ஆகும். தன் நிலையை மறைத்துக் கொண்டு, நல்ல புரோகிராம் போல, நம் கம்ப்யூட்டருக்குள் வந்து நாச வேலையைத் தூண்டும் வகையான வைரஸ் இது எனக் கண்டறியப்பட்டுள்ளது. Golroted என்ற வகையில், நம்மை உளவு பார்க்கும் புரோகிராம்களும் பரவி வருகின்றன. இவை, நம்மை ஈர்க்கும் வகையிலான மின் அஞ்சல்களாகத் தரப்படுகின்றன. பின்னர், ஏதேனும் ஒரு லிங்க், பொதுவாக, ஸிப் செய்யப்பட்ட பைலாகத் தரப்பட்டு, அதில் கிளிக் செய்திடுகையில், வைரஸ் நுழைகிறது. இந்த தகவலை Computer Emergency Response Team of India (CERT-In) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு, இந்திய இணைய வெளியில், இவ்வாறு பரவும் வைரஸ் புரோகிராம்கள், மால்வேர் பைல்களைக் கண்காணித்து, பயனாளர்களை எச்சரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
வெற்றிகரமாக, கம்ப்யூட்டர் ஒன்றுக்குள் நுழைந்தவுடன், கம்ப்யூட்டரில் உள்ள தனிநபர் அடையாளம் காட்டும் தகவல்களை (Personal Identifiable Information - PII) இலக்கு வைத்து திருடுகிறது. கம்ப்யூட்டரின் பெயர், இயங்கும் இடத்தின் நேரம், தேதி, இணைய இணைப்பில் அதன் முகவரி, இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு தரும் சாப்ட்வேர் புரோகிராம்கள் ஆகிய தகவல்களுடன், தனிப்பட்ட அந்தரங்க தகவல்களையும் திருடுகிறது. குறிப்பாக, இந்த வைரஸ், வங்கி கணக்குகள் சார்ந்த தகவல்களை அடையாளம் கண்டு கொண்டு திருடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வங்கிகளின் இணைய தளங்கள், இணையத்தில் நிதி பரிமாற்றத்திற்கு வழி தரும் இணைய தளங்கள், மின் அஞ்சல் கணக்குகள், சமூக வலைத் தளங்கள் ஆகியவற்றைத் தனியே அடையாளம் கண்டு, தன் நாச வேலையை மேற்கொள்ளும்படி புரோகிராம் செய்யப்பட்டுள்ளது.
திருடப்பட்ட தகவல்கள், வடிகட்டப்பட்டு, தேவையான தகவல்கள் மட்டும், அதற்கென இணைக்கப்பட்ட File Transfer Protocol சர்வருக்கு இணைப்பாக அனுப்பப்படுகிறது. பின்னர், நம் நிதியைத் தன் வசம் கொண்டு செல்கிறது. இந்த வைரஸ் இரு வகை தோற்றத்தைக் கொண்டுள்ளதாகவும், இதனைக் கண்டறிந்த அமைப்பு அறிவித்துள்ளது. கம்ப்யூட்டரில் நாம் பாஸ்வேர்ட் போன்றவற்றை அமைக்கையில், நாம் இயக்கும் கீகளை அடையாளம் கண்டு கொண்டு, சேமிக்கும் திறன் இந்த வைரஸ் புரோகிராமிற்குத் தரப்பட்டுள்ளது.
இதிலிருந்து தப்பிக்க, Computer Emergency Response Team of India (CERT-In) அமைப்பு தந்திருக்கும் சில வழிகளை இங்கு பார்க்கலாம். கம்ப்யூட்டர்களின் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட்டினை அடுத்தவர் பயன்படுத்தும் வகையில் தர வேண்டாம். முன் பின் அறியாத நபர்கள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிலிருந்து, இணைப்புகள் மற்றும் லிங்க் இணைந்து உங்களை அடையும் மின் அஞ்சல்களைத் திறக்க வேண்டாம். லிங்க் மீது கிளிக் செய்திட வேண்டாம். புரோகிராம்களை தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்திட வேண்டாம். பயர்வால் புரோகிராமினை இயக்கி வைக்கவும்.
ஆண்ட்டி வைரஸ் மற்றும் ஆண்ட்டி மால்வேர் புரோகிராம்களை, கம்ப்யூட்டர்களில் இன்ஸ்டால் செய்து வைத்தல் ஓர் அத்தியாவசியத் தேவையாகும். இதனை அவ்வப்போது அப்டேட் செய்து வைக்க வேண்டும். சமூக வலைத் தளங்களில் நீங்கள் இடம் பெற்றுள்ள குழுக்களிடமிருந்து வரும் இணைப்புகளையோ, இணைய தளங்களுக்கான லிங்க்களையோ கிளிக் செய்திட வேண்டாம். குறிப்பிட்ட ஒரு குழுவிலிருந்து அடிக்கடி இது போல அனுப்பப்படுகிறது என்றால், அந்த குழுவிலிருந்து விலகிவிடவும்.
கருத்துரையிடுக Facebook Disqus