0
பேஸ்புக் தளத்தில் உங்கள் நண்பர்களுடன் நீங்கள் செஸ் விளையாடலாம். இந்த வசதி மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அல்லது ரகசிய வசதியாகத் தரப்படுகிறது. இதனை மொபைல் போன்களில், பேஸ்புக் மெசஞ்சர் செயலியிலும், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில், வெப் பிரவுசரில் பேஸ்புக் தளத்தில் உங்கள் பக்கத்திலும் மேற்கொள்ளலாம். 
ஒருவரோடு மட்டுமல்ல குழுவாகவும் விளையாடலாம். இருவர் ஒரு பக்கமும், இன்னும் இருவர் மறு பக்கமுமாக விளையாடலாம். அல்லது ஒரு பக்கம் ஒரு குழுவும், எதிர் பக்கத்தில் இன்னொரு குழுவும் விளையாடலாம். இதற்கான வழிமுறைகளை இங்கு பார்க்கலாம்.



இணையத்தில் பல்வேறு செயலிகளும், இணைய தளங்களும் செஸ் விளையாடுவதற்கென்றே கிடைக்கின்றன. இணைய தளங்களில், முகம் தெரியாதவர்களுடன் நாம் செஸ் விளையாடலாம். ஆனால், பேஸ்புக் தளத்தில், உங்கள் நண்பர்களுடன் மட்டுமே விளையாட முடியும். இது நல்லதுதானே.


இந்த பேஸ் புக் செஸ் விளையாட்டினை விளையாட, எந்த ஒரு அப்ளிகேஷனையும் இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இது, உங்கள் பேஸ்புக் பக்கத்திலேயே, சேட் விண்டோவிலேயே உள்ளது. இதனைப் பெற, முதலில், பேஸ்புக் தளத்தில் இருக்கும், உங்கள் நண்பர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். 



தேர்ந்தெடுத்துவிட்டு, மெசேஜ் கட்டத்தில் ‘@fbchess play’ (மேற்கோள் குறிகள் இல்லாமல்) என டைப் செய்திடவும். உடன் ஒரு செஸ்போர்ட் காட்டப்படும். 
யார் எந்த வண்ணம் என்பது தானாக அமைக்கப்படும். ஆனால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட வண்ணத்தினை விரும்பினால், மேலே சொல்லப்பட்ட கட்டளைக்குப் பதிலாக, தொடக்கத்திலேயே, @fbchess play white அல்லது @fbchess play black என டைப் செய்திடவும். எப்போதும் போல, விளையாட்டு விதிகளின்படி, வெள்ளை காய்கள் முதலில் நகர்த்தப்படும்.

ஆனால், நீங்கள் குறிப்பிட்ட வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து விளையாட வேண்டும் என எண்ணினால், @fbchess play white அல்லது @fbchess play black வண்ணத்திற்கேற்றபடி கட்டளை அமைக்க வேண்டும். 
 
முதலில் தரப்பட்ட கட்டளைக்குப் பதிலாக இதனைத் தொடக்கத்திலேயே இட வேண்டும். 

சேட் விண்டோவில், நண்பரை அழைத்து, செஸ் விளையாட போர்டையும் விரித்துவிட்டோம். இனி எப்படி காய்களை நகர்த்துவது? 
இணைய தளங்களில் இது போல விளையாடுகையில், மவுஸால், காய்களை அழுத்திப் பிடித்து, இழுத்து நகர்த்தலாம். ஆனால், இங்கு அதற்கான கட்டளைகளை குறியீடு கட்டளையாக டைப் செய்திட வேண்டும். 
ஒவ்வொரு கட்டளை முன்பாகவும் @fbchess என தர வேண்டும். 
e4 கட்டத்தில் உள்ள சிப்பாயை நகர்த்த, “@fbchess Pe4” என டைப் செய்திட வேண்டும். 
 
வழி காட்டுதல்களுக்கும், உதவிக்கும் @fbchess help என டைப் செய்தால், அனைத்து உதவியும் கிடைக்கும். அடிப்படையில் இவை எளிதாகவே அமைக்கப்பட்டுள்ளன என்பது இதன் சிறப்பு. 
 
K என்பது king, 
Q என்பது queen, 
B எழுத்து bishop, 
N குறியீடு knight, R rook ஐக் குறிக்க மற்றும் 
P என்பது pawn ஐக் குறிக்கும். 
கட்டங்களின் எண்கள் செஸ் போர்டின் கீழாகத் தரப்பட்டிருக்கும். எனவே, எந்த கட்டத்தில் இருக்கும் காய் நகர்த்த விரும்புகிறீர்களோ அதனை முதலில் குறியிட்டு, பின் “x” இணைத்து, அதன் பின்னர், எந்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டுமோ, அந்த இடத்தினை குறிக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, B2xc5 என்ற கட்டளை, உங்கள் பிஷப் காயை, B2 என்ற கட்டத்திலிருந்து, c5 என்ற இடத்திற்கு மாற்றும். e8=Q என்ற கட்டளை, உங்கள் சிப்பாயை, ராணியாக மாற்றும். 

விளையாட்டை முடித்துக் கொள்ள “@fbchess resign” என்ற குறியீடு. விளையாடிய விளையாட்டின் புள்ளி விபரங்களை அறிய, நகர்த்தல்களை அறிய “@fbchess stats,” என்று டைப் செய்திட வேண்டும். மேலும் தகவல்களை, ஹெல்ப் அடங்கிய கட்டளை கொடுத்து பெற்றுக் கொள்ளலாம். 


பேஸ்புக்கில் தரப்பட்டுள்ள இந்த செஸ் விளையாட்டினை ஒரு “ஈஸ்டர் எக்” (Easter Egg) என்றே கொள்ளலாம். ஈஸ்டர் எக் என்பது, இந்த புரோகிராமினை வடிவமைத்தவர்கள், புரோகிராமின் செயல்பாட்டிற்குத் தொடர்பில்லாமல், விளையாட்டாக, வேடிக்கையாக அமைக்கும் ஒரு செயலியாகும். இருந்தாலும், இந்த செஸ் விளையாட்டு, வேடிக்கையானதாக இல்லாமல், ஆர்வம் தரும் விளையாட்டாக உள்ளது.

அப்படியானால், வேறு ஏதேனும் ஒரு ஈஸ்டர் எக் உள்ளதா? என்று நீங்கள் கேட்கலாம். உங்கள் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கையில்,
“@dailycute” என டைப் செய்தால், அழகான ஒரு பிராணியின் படம் தரப்படும். நண்பருக்கான செய்தியில், “ஏன் இதனை நீ தத்தெடுக்கக் கூடாது?” என்ற செய்தியும் அனுப்பப்படும். எனவே, உங்களைப் புரிந்து கொண்ட நண்பருக்கு இதனை அனுப்பவும்.

கருத்துரையிடுக Disqus

 
Top