குமரனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை.
‘பேனை ஆப் பண்ணாமல் வெளியே போற, ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.’
இப்படியே சின்னச்சின்ன விஷயத்திலும் அம்மா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.
நேற்று வரை வீட்டில் இருந்ததால் அதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி இருந்தது.
இன்று அவனுக்கு நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது.
”வேலை கிடைத்ததும் வெளியூர் போய்விட வேண்டும்.
அம்மாவின் நச்சரிப்பு குறையும்” என்று எண்ணிக் கொண்டான்.
நேர்காணலுக்கு கிளம்பினான்.
“கேட்கிற கேள்விக்கு தைரியமான பதில் சொல்” என்று வழியனுப்பி வைத்தாள் அம்மா.
அழைக்கப்பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் குமரன்.
கட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை. கதவு சற்றே திறந்திருந்ததாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக் கொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடும்படி இருந்தது.
அதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.
நடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன.
தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற்காக குழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான்.
தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக் கொண்டிருந்தது.
குழாயை கையில் எடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.
வரவேற்பறையில் யாரும் இல்லை.
நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார்கள்.
மெதுவாக மாடிப்படியில் ஏறினான்.
இரவில் போடப்பட்ட விளக்கு காலை பத்து மணியாகியும் ஒளிந்து கொண்டிருந்தது.
“விளக்கை அணைக்காமல் செல்கிறாயே?” என்ற அம்மாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் அனிச்சை செயலாக படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.
மாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள்.
கூட்டத்தைப் பார்த்த குமாருக்கு ஒரே திகைப்பு. “நமக்கு வேலை கிடைக்குமா?” என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது.
பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான். வருத்தத்துடனேயே அதை காலால் சரிசெய்துவிட்டு உள்ளே நுழைந்தான்.
அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு வந்த இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சுற்றிக் கொண்டிருந்தன.
”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி ஓடுகிறது?” என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின்விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்.
இளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர். இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது குமரனுக்குத் தெரியவில்லை.
கலக்கத்துடனே நேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான்.
சர்டிபிகேட்களை வாங்கிப் பார்த்த அதிகாரி, “நீங்கள் எப்போது வேலைக்கு சேருகிறீர்கள்?” என்று கேட்டார்.
“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக்கூர்மை கேள்வியா, இல்லை வேலை கிடைத்துவிட்டதற்கான அறிகுறியா? என்று தெரியாமல்” குழம்பி நின்றான் குமரன்.
”என்ன குமரன் யோசிக்கிறீர்கள்?
நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை. கேள்வி பதிலில் ஒருவனின் மேலாண்மையை தெரிந்து கொள்வது கடினம்.
அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா மூலம் கண்காணித்தோம்.
இங்கு வந்த எந்த இளைஞனுமே தேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை.
நீங்கள் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு வந்தீர்கள். நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம்” என்றார்.
அம்மாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும்.
அந்த ஒழுங்கு முறையே
இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.
அம்மாவின் மீதுள்ள எரிச்சல் தணிந்தது.
வேலைக்குச் செல்லும் இடத்திற்கு அம்மாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான் குமரன்.
கருத்துரையிடுக Facebook Disqus