0

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சிறிய கிராமம் கலங்கல்.
தமிழகத்தின் தலை சிறந்த விஞ்ஞானியான ஜி.டி.நாயுடுவை தந்த
பெருமைக்குரிய கிராமம்.
ஒரு காலத்தில் செம்மறியாட்டின் ரோமங்களிலிருந்து 
கம்பளி தயாரிக்கும் தொழில் இங்கு பிரபலம். 
பல ஊர் மக்களும், மைனர்களும்,செல்வந்தர்களும் 
இவர்களின் கைவித்தையிலேயே ‘குளிர்காய்ந்துள்ளனர்’ கம்பளி வழி.
ஆனால் இன்று அது பழம்பெருமையாகிவிட்டது.
ஊரே செய்தே இத்தொழிலை இப்போது ஊரிலேயே 10 குடும்பங்கள் 
மட்டுமே செய்து வருகின்றன என்பதுதான் இதன் மறுபக்க 
சோகம்.
இன்றும் இத்தொழிலை மேற்கொண்டு வரும் 
ராயப்பன்-சாவித்திரி குடும்பத்தினரிடம் இது பற்றி பேசினோம்.

“ கிட்டத்தட்ட 150 வருடங்களுக்கு மேலாக எங்கள் பாட்டன்,பூட்டன் காலத்திலிருந்தே இதுதான் எங்கள் தொழில்.
இங்கு மொத்தம் 500 குடும்பங்கள் இதையே முழு மூச்சாக செய்து 
வந்தோம்.ஒவ்வொரு வீட்டிலும் செம்மறி ஆடுகள் 
சொந்தமாக இருக்கும். அப்போது அவரவர் வசதிக்கேற்ப 
10 முதல் 200 ஆடுகள் வரை வைத்திருந்தனர். 
ஆட்டை இங்கிருந்து திருச்சூர்,மைசூர், பழனி, கோபி, பொள்ளாச்சி 
என ஊர்களில் வைத்து மேய்ப்பார்கள். ஆட்டிலிருந்து முடி மட்டுமே எங்களுக்கு தேவை. ஆட்டின் கழிவு ஆனது தோட்டங்களுக்கு நல்ல உரமாக பயன்படும். எனவே அதற்கும் அங்கு மதிப்பு இருக்கும்.
கம்பளி தேவைக்காக ஆண்டுக்கொரு முறை ஆட்டின் முடியை வெட்டுவோம். அன்றைய தினம் ஆட்டினை நன்கு தூய்மையாக கழுவி அதன் நான்கு கால்களையும் நாலா புறத்தில் நட்டு வைக்கப்பட்டுள்ள குச்சியில் கட்டி ,மனிதர்களுக்கு முடி வெட்டுவது போன்று கத்தரிக்கோல் வைத்து வெட்டி பயன்படுத்துவோம். கம்பளி தயாரிக்கும் மற்ற ஊர்களில் ஆடுகள் இல்லாதவர்கள் எங்களிடமிருந்து ஆட்டின் முடியை விலைக்கு வாங்கிச் செல்வார்கள்.

கம்பளி நெய்தல் ஒன்றும் சுலபமான காரியம் அல்ல. அதற்கு நீண்ட பொறுமையும்,உடல் பலமும் வேண்டும். பச்சை முடியை இதற்கென உள்ள இயந்திரத்தில் இட்டு அரைக்க வேண்டும். இந்த ஊருக்கே ஒரே இயந்திரம் மட்டுமே உள்ளது. அதில் அரைத்து பின் வீட்டிற்கு கொண்டு வந்து நூலாக திரிக்க வேண்டும்.திரித்த நூலை நன்கு சேர்த்து கயிறு போல மாற்ற வேண்டும். இதற்கு பாவு வீசுதல் என்று பெயர்.இப்படி பாவு வீசி முடிந்ததும் கஞ்சி போட்டு ஓரிரு நாட்கள் காயவைக்க வேண்டும்.
இப்படி காய்ந்த நூலை சுவற்றின் ஒரு முனையிலும்,நெசவு இயந்திரத்தின் ஒரு முனையிலும் கட்டி நெய்ய வேண்டும்.நெய்தல் என்பது சாதாரணமான ஒன்றல்ல..நெய்யும் போது இரண்டு மார்புகளும் கடுமையாக வலிக்கும். ஒரு முழு கம்பளி தயாரிக்க குறைந்த பட்சம் 16 நாட்களாகும்.நன்கு செய்ய தெரிந்த ஒருவர் செய்யவே 16 நாட்கள். சுமாராக செய்பவர், இலகுவான உடல்வாகு கொண்டவர்கள் நெய்தால் 30 நாட்கள் ஆகும்.
நெய்த கம்பளியை ஊட்டி,வெள்ளியங்காடு, கேரளா, பழனி, பொள்ளாச்சி, கோபி, மைசூர் ஆகிய பகுதிகளில் இருந்து வாங்க வருவர். உள்ளூர் மக்கள் நேரடியாக வீட்டிற்கே வந்து வாங்கி செல்வார்கள்.
இந்த வகை கம்பளிகள் பயன்படுத்திய யாரும் சாதாரண கம்பளிகளை பயன்படுத்த மாட்டார்கள். அவ்வளவு சுகம். ஒரு கம்பளியின் ஆயுள் ஒரு தலைமுறையே தாண்டி வாழும்.தந்தை பயன்படுத்திய கம்பளிகளை தற்போது அவர் ஞாபகமாக பயன்படுத்துவோர் இன்றும் உள்ளனர். நெசவாளியை பொறுத்தவரை ஒரு கம்பளியை நெய்து முடித்தால் ஒரு பிரசவத்தின் இன்பமே ஏற்படும்” என பழைய நினைவுகளில் மூழ்கினர்.
தொழிலில் நலிவு ஏற்பட்டது ஏன் என்றோம் அவர்களிடம். “ கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பாகவே இந்த தொழில் தனது களையை இழந்தது. காரணம் இங்கு அமைந்த பஞ்சாலைகளே. இந்த தொழிலில் ஒரு தொழிலாளி நாளொன்றுக்கு 12 முதல் 15 மணி நேரம் வரை செலவிட வேண்டும். அதிகமான உடலுழைப்பு தேவை. குறைந்தபட்சம் 20 நாட்கள் சேர்த்து செய்யும் ஒரு கம்பளிக்கு கிடைக்கும் லாபமும் மிக குறைவே.
இதனால் ஒரு கம்பளியை 2000 ரூபாய்க்கு விற்றாலும் லாபம் கிடைப்பதில்லை. இங்கு வந்து ஆக்கிரமித்த பஞ்சாலைகள் நாள் சம்பளம் என்று அதிகமான சம்பளம் கொடுப்பதை பார்த்து ஊரில் பலரும் ஆடுகளை விற்றும், தொழிலை நிறுத்தியும் மில் வேலைகளுக்கு செல்லத் துவங்கினர்.அப்படியும் இந்த தொழிலை தொடர்ந்து செய்தவர்கள் வெகு சிலரே. அவர்களும் பல்வேறு கஷ்டங்களால் சிறிது சிறிதாக ஒரு கட்டததில் கைவிட்டனர்.
இதன் மேலுள்ள மதிப்பும், இந்த கலங்கல் கம்பளிக்கு இன்றும் வாடிக்கையாளர்களாக உள்ளவர்கள் ஏமாறக்கூடாது என்ற எண்ணத்தில்தான் இப்போதும் நாங்கள் இதனை தொடர்ந்து செய்கிறோம். இதிலுள்ள கஷ்டங்கள் பல. தற்போது நாங்களும் ஆடு வளர்ப்பை கைவிட்டதால் செம்மறி ஆடு வளர்ப்பவர்களிடமே முடிகளை பெற வேண்டியுள்ளது. இந்த முடியின் தற்போது வரத்தும் குறைந்து விட்டது. காரணம் இந்த செம்மறி ஆடுகள் வைத்திருப்பவர்கள் இதற்காக அதிக செலவை பராமரிப்பிற்காக செலவிட வேண்டியது வரும். எனவே இதை சாதாரண ஆடுகளோடு சேர்த்து விடுவதால் முடிகளற்ற ஆடுகளே உருவாகின்றன. இதனால் முடி வரத்தும், பராமரிப்பு செலவும் குறைகிறது.
அனைவரும் சாதாரண வகை கம்பளிகளுக்கு மாறி விட்டனர்.அவை சில மாதங்கள் கூட தாக்கு பிடிக்காது.”என நிறுத்தியவர் உள்ளே சென்று 2 கம்பளிகளை கொண்டு வந்து நமக்கு காட்டினார்.
தற்போது நெய்ததா?என நாம் கேட்க, ஒன்று 25 வருடங்களுக்கு முன் நெய்தது. இன்னொன்று இப்போது நெய்து முடித்தது “என அவர் சொன்னபோது அகல விரிந்தது நம் கண்கள். ஆச்சரியம், இரண்டிற்கும் துளி வேறுபாடு தெரியவில்லை.
“தற்போது எங்கள் வாரிசுகள் கூட இந்த இயந்திரங்களை தொட்டதில்லை. ஒரு வேளை நவீன இயந்திரங்கள் வந்தால் மீண்டும் கலங்கல் கம்பளி எழுச்சி பெறலாம். அரசும் இதற்கு இதற்கு உதவினால் வாய்ப்புண்டு'
பலரை ‘காத்த’ கலங்கல் கம்பளி தன்னை மீட்டெடுக்குமா?

கருத்துரையிடுக Disqus

 
Top