0
ன்றாட நீர்த்தேவைகளுக்காக தொட்டிகள் கட்டப்படுவது அத்தியாவசியமான முறையாக இருக்கிறது. தொட்டிகளை பூமிக்கு அடியிலும், கட்டிடங்களின் மேற்பகுதிகளிலும் அமைப்பது வழக்கம். நகர்ப்புற வளர்ச்சிகள், மக்கள் தொகை பெருக்கம் ஆகிய காரணிகளால் வீடுகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது நீர்த்தேவையும் அதிகரிக்கிறது. பாதுகாப்பாக நீரை சேமிக்க வேண்டியதும் அவசியமாகிறது. அன்றாட வாழ்க்கைக்கான தண்ணீர் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதன் முக்கியத்துவம் பழங்காலம் முதலாக கவனத்தில் கொள்ளப்பட்டு வந்திருக்கிறது.

சேமிக்கும் முறைகள்

இன்றைய சூழலில் ‘வாட்டர் சம்ப்’ மூலம் நிலத்தின் அடியில் நீரை சேமிப்பது, ‘ஓவர் ஹெட் டேங்’ மூலமாக மேல்மாடியில் தண்ணீரை சேமிப்பது ஆகிய இரண்டு முறைகள் தண்ணீரை பாதுகாத்து வைப்பதற்கான நடைமுறையாக இருக்கின்றன. அவை ‘கான்கிரீட்’ கொண்டு அமைக்கப்படுகின்றன. தண்ணீர் என்ற சக்தியை தகுந்த வலுவான கட்டமைப்பில்தான் சேமித்து வைக்க இயலும். அதில் ஏதாவது குறைகள் இருக்கும் பட்சத்தில் நீர்க்கசிவுகள் ஏற்படுவதால் அருகில் இருக்கும் சுவர்கள் அல்லது பிற கட்டமைப்புகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

பிளாஸ்டிக் நீர்த்தொட்டி

எல்லா இடங்களிலும் கான்கிரீட்டால் தண்ணீர் தொட்டிகள் கட்டுவதென்பது அவ்வளவு எளிதான விஷயமாக இருப்பதில்லை. சில எளிமையான வழிகளும் வேண்டும் என்ற சூழலில் ஆரம்பத்தில் ‘பிளாஸ்டிக்’ தொட்டிகள் அறிமுகமாகின. எடை குறைவாகவும், வீடுகளில் அமைப்பதற்கு சுலபமாகவும் இருக்கும் காரணத்தால் அவை பிரபலமாகி விட்டன. தொடக்கத்தில் கருப்பு நிறத்தில் தயாரிக்கப்பட்டாலும் பிறகு வெள்ளை, நீலம் மற்று பச்சை நிறங்களில் இப்போது பயன்பாட்டில் இருக்கின்றன. நீர்த்தொட்டிகள் அமைப்பது பற்றியும், அதன் கொள்ளளவு பற்றியும் கட்டுமான பொறியாளர்கள் தரும் முக்கியமான விஷயங்களை இங்கு காணலாம்.

கொள்ளளவு கணக்கு

கான்கிரீட் தொட்டிகள் பல்வேறு அளவுகளில் அமைக்கப்பட்டாலும் அவற்றில் எத்தனை லிட்டர் தண்ணீர் சேமிக்க இயலும் என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. அதற்கு ஒரு சுலபமான முறை இருக்கிறது. அதாவது தொட்டியின் உள்ளளவு நீளம், அகலம் மற்றும் ஆழம் அல்லது உயரம் ஆகிய மூன்று அளவுகளையும் அடிக்கணக்காக மாற்றி பெருக்க வேண்டும். வரக்கூடிய விடையானது தொட்டியின் மொத்த கொள்ளளவு கன அடியில் இருக்கும். அந்த விடையுடன் 28 என்ற எண்ணை பெருக்கி வரும் விடையானது அத்தொட்டியின் மொத்த நீர்க்கொள்ளளவு எவ்வளவு என்பதை காட்டும்.

உதாரணமாக 6 அடி அகலம், 6 அடி நீளம், 6 அடி உயரம் கொண்ட தொட்டியின் மொத்த கொள்ளளவு 216 அடிகளாக இருக்கும். அந்த விடையுடன் 28 என்ற எண்ணை பெருக்கும்போது 6048 என்ற விடை கிடைக்கும். அதுதான் அந்த தொட்டியின் மொத்த நீர் கொள்ளளவு ஆகும். தோராயமாக ஒரு கன சதுர அடி கொள்ளளவு கொண்ட பாத்திரத்தில் 28 லிட்டர் நீர் நிரப்ப முடியும் என்பது பொதுவான கணக்காகும்.

கட்டமைப்பில் கவனம்

கான்கிரீட் கொண்டு கட்டும்போது தொட்டிகளின் மூலைகள் சரியான கோணமாக இருக்கக் கூடாது. சற்றே வளைவாக இருப்பதுபோல கட்ட வேண்டும். காரணம் நீரானது அனைத்து பக்கங்களிலும் அழுத்தத்தை கொண்டதாக இருப்பதால் முனைகள் அதிகப்படியான அழுத்தத்துக்கு உள்ளாகின்றன. தொட்டிகளின் முனைகள் வளைவாக அமைக்கப்படும்போது அழுத்தமானது பக்கவாட்டில் செலுத்தப்படுவதால் தொட்டியானது பாதிக்கப்படுவதில்லை. 

தொட்டிகளுக்கான சுவர் அமைக்கும்போது ‘மெஷ்’ எனப்படும் கம்பி வலை பொருத்தப்பட்டு அதன்மீது கான்கிரீட் போடுவதுதான் பாதுகாப்பனது. அதன் வாயிலாக சுவர்களில் விரிசல்கள் வராமல் பாதுகாக்கப்படுகிறது. வழக்கமான சுவர்  கட்டமைப்பை விடவும் இதற்கு கூடுதல் கவனம் செலுத்துவது முக்கியம். கூடுதலாக ‘பாலிமர்’ பூச்சையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

கருத்துரையிடுக Disqus

 
Top