0


Image result for இதய ரத்த குழாயில் அடைப்பு
பெரும்பாலான நோயாளிகளுக்கு பிரதான ரத்தக்குழாயில் இல்லாமல், சிறு சிறு கிளைகளில் அடைபட்டிருந்தால், அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை தவிர்த்து, 80 சதவீதம், மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும்

இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தால், 50 முதல், 80 சதவீதம் பேரை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும். பிரதான மூன்று ரத்தக் குழாய்களிலும் அடைப்பு இருந்தால் மட்டுமே, அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்.

1. இதய நோய்க்கு, டி.எம்.டி., பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறார்களே? அப்படி என்றால் என்ன?

'டிரெட் மில் டெஸ்ட்' என்பதையே, சுருக்கமாக டி.எம்.டி., என்கின்றனர். இ.சி.ஜி., பரிசோதனையில், மாற்றங்கள் தெரிந்தால், அவருக்கு இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறதா என்பதை, கண்டறியும் பரிசோதனை இது. இன்னும் சொல்வது என்றால், அதிக வேலைகள் செய்யும் போது, எனர்ஜி தேவை. அதற்கேற்ப இதயத்திற்கு ரத்த ஓட்டம் சரியாக செல்லவில்லை என்றால், அவர்களுக்கு நெஞ்சில் வலி ஏற்படும். இந்த வலி எதனால், எந்த மாதிரியான கடின வேலை செய்யும் போது வருகிறது என, கண்டறியும் முதற்கட்ட பரிசோதனை இது.

2. இந்த பரிசோதனை எப்படி செய்யப்படும்?

நடைபயிற்சி இயந்திரத்தில் (டிரெட் மில்), குறைந்த வேகத்தில் நடக்க வைப்பர். படிபடியாக வேகத்தை கூட்டி, ஓட வைப்பர். 5 முதல் 10 நிமிடங்கள் வரை பரிசோதனை நடக்கும். பயிற்சியின் போது, கை, கால்கள், மார்பு பகுதி என, ஆறு, ஏழு இடங்களில், இ.சி.ஜி., லீட்கள் பொருத்தப்பட்டு, அதை, கம்ப்யூட்டருடன் இணைத்து, பதிவு செய்யப்படும். ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு அனைத்தும் பதிவாகும். எந்த நேரத்தில் அவரால் நடக்க முடியவில்லை; எப்போது நெஞ்சு வலி வருகிறது என, துல்லியமாக தெரிந்து விடும். உடனடியாக, பயிற்சி நிறுத்தப்பட்டு, ஓய்வு தரப்படும். அப்போதும், இ.சி.ஜி.,யின் மாற்றம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்றால், இதய ரத்தக்குழாயில் அடைப்பு உள்ளது என்று, அர்த்தம்.

3. இந்த பரிசோதனையை யார் எல்லாம் செய்ய வேண்டும்?


ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இனம்புரியாத தலை சுற்றல், மயக்கம், மார்பில் படபடப்பு, மார்பு இருக்க உணர்வு உள்ளோர், கொழுப்பு சத்து அதிகம் உள்ளோர் ஒல்லியாக இருந்தாலும், குடும்பத்தில் யாருக்கேனும் இதய நோய் பாதிப்பு இருந்தால், குடும்பத்தில் மற்றவர்களுக்கும் வர வாய்ப்புஉள்ளதால், டி.எம்.டி., பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

4. ரத்த குழாய் அடைப்புக்கு டிரெட் மில் சோதனை தான் இறுதியானதா; வேறு பரிசோதனைகள் உண்டா?


'டிரெட் மில்' பரிசோதனை என்பது, முதற்கட்ட பரிசோதனை தான். இதில், ரத்தக்குழாய் அடைப்பு என, தெரிந்தால், அடுத்த கட்டமாக, 'குரோனரி ஆஞ்சியோ கிராம்' என்ற பரிசோதனை செய்ய வேண்டும். இதில், இதய பாதிப்பை உறுதி செய்து கொள்ளலாம். இதுதான், ரத்தக்குழாய் அடைப்பை கண்டறியும் முடிவான பரிசோதனை.

5. குரோனரி ஆஞ்சியோ கிராம் சோதனை எப்படி செய்யப்படுகிறது?

தொடை அல்லது கையில் உள்ள தமணி வழியாக, நரம்பு போன்ற கத்திட்டரை (சோதனை கருவி) செலுத்தி, இதயம் வரை கொண்டு சென்று, இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதாக என, கண்டறியப்படும். தற்போது, பெரும்பாலும் கை மணிக்கட்டு தமணியில் வழியாகவே அதிகம் செய்யப்படுகிறது. இது, எளிதாக கருதப்படுகிறது; எந்த சிக்கலும் இல்லை.

6. ரத்தக்குழாய் அடைப்பு உறுதியானால் அறுவை சிகிச்சை தான் தீர்வா?

பெரும்பாலான நோயாளிகளுக்கு பிரதான ரத்தக்குழாயில் இல்லாமல், சிறு சிறு கிளைகளில் அடைபட்டிருந்தால், அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை தவிர்த்து, 80 சதவீதம், மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும். ஒரே ஒரு ரத்தக்குழாயில் மட்டும், 1 செ.மீ., அளவுக்கு குறைவாக, 80 முதல் 90 சதவீதம் வரை அடைப்பு இருந்தால், அவர்களுக்கு 'ஆஞ்சியோ பிளாஸ்டி' எனப்படும், நரம்பு வழியாக காற்று புகுத்தி செய்யும் பலுான் சிகிச்சை செய்யலாம். மூன்று பிரதான ரத்த குழாயில் அடைப்பு இருந்தால், அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதே தீர்வு; வேறு வழியில்லை.

7. 'கார்டியோ ஜெனிக் ஷாக்' என்றால் என்ன? அதற்கான நவீன சிகிச்சை என்ன?

இதயத்தின் மூன்று ரத்தக்குழாய்களும் அடைக்கப்பட்டு, மயக்க நிலை ஏற்பட்டால், 'கார்டியோ ஜெனிக் ஷாக்' என்று பெயர். பாதிப்பின் தன்மை அதிகம். இதற்கு, ஐ.ஏ.பி.பி., (இண்டிரா அயோதிக் பலூன் பம்ப்) சிகிச்சை அளிக்கப்படுகிறது. நரம்பு வழியாக ஒரு பலூனை மகா தமணியின் இடது பக்கம் செலுத்தி, 'ஹீலியம்' என்ற வாயுவை அந்த பலூனில் செலுத்தி, இயந்திரத்தில் இணைத்து விடுவர். அந்த இயந்திரம் பலூனை சுருங்கி, விரிவடையச் செய்து, இதயத்துக்கான ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்யும். இதனால், இதயம் ஓய்வெடுப்பதால், அது நலம் பெற்று மீண்டும் சீராக இயங்க முடியும். இந்த அதிநவீன சிகிச்சையால் மட்டுமே, மிகப்பெரிய மாரடைப்பில் இருந்து ஒருவரை காப்பாற்ற முடியும். மாநகரங்களில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளில் தான், இந்த வசதி உள்ளது. அதிலும், தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் மிக குறைவே. சென்னை, அரசு பொது மருத்துவமனையில் இந்த வசதி உள்ளது; இலவசமாக செய்யப்படுகிறது.

8. இதுபோன்று பாதிப்பு வராமல் இருக்க, என்ன செய்ய வேண்டும்?

உரிய நேரத்தில் அளவோடு சாப்பிட வேண்டும். எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எளிய உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. நேரமில்லை என்றால், இரவிலும் உடற்பயிற்சி செய்யலாம். மன அழுத்தம் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ளுங்கள்; அதற்கு யோகா, தியானம் நல்ல பலன் தரும் இதோடு, சரியான தூக்கமும் இருந்தால், இதய நோய் அல்ல; எந்த நோய் பாதிப்பும் வராது.

கருத்துரையிடுக Disqus

 
Top