அரசாங்கம் / பொறுப்பில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய வேலையை தனி மனிதர்கள் ஆர்வமாக செய்து வருகிறார்கள்.
என்னதான் தனி மனிதர்கள் தங்களின் கடும் முயற்சியில் சாதிக்க முடிந்தாலும், அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் பெரியளவில் சாதிக்க முடியாது.
லட்சத்தில் / கோடியில் ஒருவர் விதிவிலக்காக இருக்கலாம்.
இது போல கூறினாலும், புலம்பிக்கொண்டு மட்டும் இருக்காமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் கடமையை / பணியை விருப்பமாக செய்பவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
இவர்கள் தான் நம்மைப் போன்ற புலம்பல் காரர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கிறார்கள்.
இது போல ஒருவர் தான் அர்ஜுனன். இந்த ஃபாஸ்ட் ஃபுட் உலகத்தில் நமக்கு எல்லாமே உடனே நடக்க வேண்டும் என்று விருப்பம். எது செய்தாலும் உடனே விடை தெரிய வேண்டும், யாருக்கும் காத்திருக்க பொறுமையில்லை.
காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த விசயத்தையே புறக்கணித்து டாடா சொல்லி விடுகிறார்கள்.
இங்லிஷ்க்காரன் படத்தில் சத்யராஜ், “”கர்ப்பமான” பெண்ணையே திருமணம் செய்து கொண்டால் வேலை மிச்சம் பாருங்க” என்று கூறுவாரே! அதே போல் ஆட்கள் பலர் இருக்கிறார்கள்.
இதனாலோ என்னவோ அர்ஜுனன் மரம் வளர்க்க ஆகும் காலத்தை எப்படி குறைத்து பயன் பெறுவது என்று யோசித்து ஒரு எளிமையான முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
இது பற்றி தெரியாதவர்கள் இதைப் படிக்க நேர்ந்தால் ஒருத்தராவது முயற்சிக்க மாட்டார்களா! என்ற ஆதங்கத்தில் இதை பகிர்கிறேன்.
இப்போ ஃபாஸ்ட்ஃபுட் உலகம். ‘பனை வெச்சவன் பார்த்துட்டு சாவான்’ங்கிற மாதிரி காத்துக்கிட்டு இருக்க முடியாது.
எல்லாமே சீக்கிரமா கிடைக்கணும். மரமா இருந்தாலும் உடனே அனுபவிக்கணும்.
அதனாலதான் மரம் வளர்க்கிற யுக்தியிலும் ஃபாஸ்ட் ஐடியாவை நான் கடைப்பிடிக்கிறேன்னு” சொல்கிறார் செப்பறை வளபூமி பசுமை உலகம் அமைப்பை நடத்தும் அர்ச்சுனன்.
மணியாச்சி ரயில் நிலையத்தில் டீக்கடை நடத்தி வந்தவர் அர்ஜுனன். பால் குடித்த மகன் மூச்சு திணறி இறந்தபின் வாழ்வின் மீது வெறுப்பு ஏற்பட்டதாம்.
என்ன பாவம் செய்தேனோ? ஒருவேளை மகனோ, நானோ செத்து அடுத்த பிறவியில் பறவையா, விலங்கா பொறந்தா நாம தங்கறதுக்கு இடம் வேணுமே? இருக்கிற மரத்தையெல்லாம் வெட்டிடுறாங்களேன்னு கவலை வந்ததாம். அப்போ தோன்றியதுதான் மரம் வளர்ப்பு.
ஆனால், மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.
கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வர்றேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன்.
சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.
அதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30வது நாள் இலைகள் வந்துடும். 70வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும்.
ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன்.
அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.
ம்ம்… யாருக்கும் இந்த அருமை புரியலை,” என்று அங்கலாய்த்துக் கொள்கிறார் ஃபாஸ்ட் ட்ரீ அர்ச்சுனன்.
தொடர்புக்கு : திரு.அர்ஜுனன்
அலைபேசி : 97903 95796
இதில் இவர் கூறிய “அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும். ம்ம்… யாருக்கும் இந்த அருமை புரியலை”
படித்த போதே, அப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று, மனம் கணக்குப் போட ஆரம்பித்து விட்டது :-). ரொம்ப அருமையான அதே சமயம் நடைமுறையில் சாத்தியமான ஒரு செயல்.
இதற்கு அர்ஜுனன் கூறியது போல அரசாங்கம் ஒத்துழைப்பு இல்லை என்றால், ஒரு வெங்காயச் செடி கூட நட முடியாது.
ஏங்க எல்லோரும் இப்படி மரத்தோட அருமை தெரியாம / புரியாம இருக்காங்க!! செம மன உளைச்சலாக இருக்கிறது. “ஜெ” கடந்த ஆட்சியில் ஒரு சிறப்பான அறிவிப்பு செய்தாங்க. அது, கண்டிப்பாக அனைவரும் “மழை நீர் சேகரிப்பு திட்டம்” செயல்படுத்த வேண்டும் என்று.
இதனால் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் தாறுமாறாக உயர்ந்தது. நம்ம ஊர்ல தான் இது போல நல்லது செஞ்சா பிடிக்காதே! வழக்கம் போல இதற்கும் எதிர்ப்பு. ஓட்டு போய்டுமே என்ற பயத்தில் தேர்தல் சமயத்தில் இந்த உத்தரவை “ஜெ” வாபஸ் செய்தார்.
உருப்படியா இருந்த ஒரு உத்தரவும் டமால் ஆகி விட்டது.
இது போன்ற “மழை நீர் சேகரிப்பு” திட்டத்திற்கு தான் கிறுக்கனுக எதிர்ப்பு தெரிவிப்பாங்க ஆனால், இது போல நெடுஞ்சாலையில் மரம் வைக்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை.
“ஜெ” மட்டும், நெடுஞ்சாலை முழுக்க மரம் வைத்தே ஆக வேண்டும் என்று ஒரு அதிரடி உத்தரவைப் போட்டால், பொறுப்பில் உள்ளவர்கள் அலறி அடிச்சுட்டு செய்ய மாட்டார்களா!
மரம் பட்டுப் போனால் பொறுப்பில் உள்ளவர்களுக்கு வேட்டு என்று கூடுதலா ஒரு அறிவிப்பையும் வெளியிட்டால், அவனவன் ஒழுங்கா வேலையைப் பார்க்க மாட்டானா!!
இப்படி எல்லாம் நடந்தால் நல்லா இருக்குமே என்று கற்பனையில் மட்டுமே நினைத்து சந்தோசப்பட முடிகிறது. என்னமோ போங்க!
எந்த ஆட்சி வந்தாலும் இதே நிலை தான். பொறுப்பில் உள்ளவர்களுக்கு எப்படி பணம் சம்பாதிப்பது என்பதில் மட்டுமே முழுக் கவனமும் உள்ளது.
மக்களைப் பற்றி / வருங்காலத்தில் [வருங்காலம் எங்கே..! இப்பவே அப்படித்தான் இருக்கு] நாம் அனைவரும் எதிர்கொள்ளப் போகும் பிரச்னை பற்றி யாருக்கும் கவலையில்லை.
அடுத்த தலைமுறை நபர்கள் எல்லோரும் மரத்தைப் பார்த்தால்.. “அதோ பாருங்க! அங்கே ஒரு மரம்!” என்று கூற வேண்டிய நிலையில் தான் இருப்பார்கள்.
என்னுடைய ஆதங்கம் எல்லாம், அனைத்து வசதிகளும் / வளங்களும் இருந்தும் பொறுப்பில் உள்ளவர்கள் அக்கறையின்மையால் / திறமையின்மையால் / புறக்கணிப்பால் இப்படி தமிழகம் படாதபாடு படுகிறதே என்பது தான்!
எனவே இதைப் படிக்கும் உங்களை நான் கேட்டுக்கொள்வது, அரசியல்வாதிகளை / அதிகாரிகளை திட்டும் முன்பு நாம் நம் அளவில் என்ன செய்தோம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.
அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அவர்களை கை காட்டும் வழக்கமான சமாளிப்பு செயலை கை விட்டு, நம்மால் என்ன செய்ய முடியும் என்று முயன்று சிறு முயற்சி எடுத்தால் கூட போதும்.
ஒன்றுமில்லாமல் போவதற்கு சில விஷயங்களாவது நடக்கும். நம்மைப் போலவே நினைக்காமல் அர்ஜுனன் போன்றவர்கள் முயற்சி செய்வதால் தான், இது போன்ற விசயங்களுக்கு சிறு நம்பிக்கை கிடைத்து வருகிறது.
உங்கள் வீட்டில் இடம் இருந்தால், இது போல ஒரு மரமாவது வையுங்கள்.. அட! முடியாத பட்சத்துக்கு ஒரு செடியாவது வைங்க. மனமிருந்தால் மார்க்கம் உண்டு.
கருத்துரையிடுக Facebook Disqus