0
பயிர்களைத் தாக்கி சேதத்தை ஏற்படுத்தும் கெட்ட பூச்சிகளை, அழிக்க நல்ல பூச்சிகள் இயற்கையாகவே ஒவ்வொரு வயலிலும் இருக்கும்.
இப்படிப்பட்ட நன்மை தரும் பூச்சிகளை ஒவ்வொரு விவசாயியும் அடையாளம் கண்டு கொள்வதோடு மட்டுமல்லாமல், அதை அழிக்காமல் இருக்க பூச்சிக் கொல்லி மருந்தின் உபயோகத்தைத் தவிர்த்திட வேண்டும்.
இதோ நல்ல பூச்சிகளைப் பற்றிய தகவல்கள்…
கிரைசோபா:
இவ்வகை பூச்சிகளில் ஆண் பூச்சிகள் 10 முதல் 12 நாள்களும், பெண் பூச்சிகள் 35 நாள்களும் உயிர்வாழும். 500 முதல் 600 முட்டைகள் வரை இடும். இது குஞ்சு பருவமாக இருக்கும் போதே தீமை செய்யும் பூச்சிகளைத் தாக்க ஆரம்பித்து விடும்.
இவை பயிர்களைத் தாக்கும் அசுவினி, இலைப்பேன், தத்துப்பூச்சிகள், முட்டைகள், குஞ்சுகளைத் தாக்கி அழிக்கும். இதன் வாழ்நாளில் 400 முதல் 500 தீமை செய்யும் பூச்சிகளை அழித்து விடும்.
கிரைசோபா தாய்பூச்சி பச்சை நிறத்தில் கண்ணாடி போன்ற இறக்கை உடையது. இதன் குஞ்சுகள் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
முட்டை ஒட்டுண்ணிகள்:
முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோகிரம்மா டெலிநாமஸ், டெட்ராஸ்டிக்ஸ் வகை ஒட்டுண்ணிகள் தன்னுடைய வாழ்நாளில் 20 முதல் 40 முட்டைகள் வரை இடும். இதில் இருந்து வெளிவரும் பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகளைக் காய்புழுக்களின் முட்டைகளின் மீது தன் முட்டைகளை இட்டு இனத்தைப் பெருக்கி, காய்புழுக்கள் வெளிவராமல் தடுக்கிறது.
இது தன் வாழ்நாளில் 20 முதல் 40 தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கிறது. இந்த ஒட்டுண்ணிகள் கருப்பு நிறம் கொண்டவை.
அன்சிர்டிட்ஸ் முட்டைப் புழு ஒட்டுண்ணி:
இதன் வாழ்நாள் 14 முதல் 17 நாள்கள். தன்வாழ்நாளில் 300 முதல் 400 முட்டைகள் வரை இடும். இது காய்ப் புழுக்களின் முட்டைகளின் மீது தன் முட்டைகளை இடும். முட்டைகளையும், புழுக்களையும் தாக்கி அழிக்கும். இவை பழுப்பு மற்றும் கருப்பு நிறம் கலந்த சிறிய ஈ போன்றது.
செலானஸ்குளவி:
தாய்பூச்சி சிவப்பும் கறுப்பும் கலந்தது. அடி வயிற்றில் மஞ்சள் கோடு இருக்கும். இவை தாய்ப் புழுக்களின் முட்டைகள், புழுக்களையும் தாக்கி அழிக்கும்.
கோடீசியா குளவி:
இதன் வாழ்நாள் 10 முதல் 15 நாள்கள். 10 முதல் 30 முட்டைகள் வரை இடும். இவைகள் காய்ப் புழுக்களின் முட்டைகளையும், புழுக்களையும் தாக்கி அழிக்கும்.
பிகோனிட் குளவி:
இதன் வாழ்நாள் 3 முதல் 6 நாள்கள். இது 6 முதல் 20 முட்டைகள் இடும். இந்த குளவிகள் காய்ப் புழுக்களையும், முட்டைகளையும் தாக்கி அழிக்கும்.
பெதிலிட்ஸ் குளவி:
இவ்வகை குளவிகள் கருப்புநிறம் கொண்டவை. சிறு எறும்புபோல் இருக்கும். காய்ப் புழுக்களை நினைவு இழக்கச் செய்து,அதன் மேல் தன் முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்து, காய்ப் புழுக்களை அழிக்கின்றன. இதன் வாழ்நாள் 10 முதல் 12 நாள்கள். 3 முதல் 8 முட்டைகள் இடும்.
இக்மானிட் குளவி:
இதன் வாழ்நாள் 3 முதல் 6 நாள்கள். இது 10 முதல் 30 முட்டைகளை இடும். புழுவின் மேல் ஒரு முட்டை வீதம் இடும். குஞ்சு புழுக்களை அழிக்கும். தன் வாழ்நாளில் 10 முதல் 30 பூச்சிகளை அழிக்கும்.
டாகினிட் ஈ:
இதன் வாழ்நாள் 7 நாள்கள் . இதன் நிறம் கறுப்பு அல்லது கருநீலம். வீட்டு ஈயை விடப் பெரியது. 8 முதல் 12 முட்டைகள் இடும். காய்ப் புழுக்களின் மேல் 2 முதல் 4 முட்டைகள் இடும். வெளிவரும் சிறிய புழுக்கள் காய்ப் புழுக்களை அழிக்கும்.
பிராகிமீரியா குளவி:
இது கறுப்பு நிறம் கொண்டது. மஞ்சள் கோடுகள் இருக்கும். குண்டானது. பின்கால்கள் இருக்கும். இதன் வாழ்நாள் 3 முதல் 5 நாள்கள். இந்த குளவி 5 முதல் 20 முட்டைகள் வரை இடும். இது காய்ப்புழு அல்லது கூட்டுப்புழு மீது ஒரு முட்டை வீதம் இட்டு அழிக்கின்றது. இதன் வாழ்நாளில் 5 முதல் 20 தீமை செய்யும் பூச்சிகளை அழிக்கிறது.
தட்டான் இனங்கள்:
தட்டான், ஊசி தட்டான் போன்ற பூச்சிகள், வானிலும் நீர்நிலைகளின் மீதும் பறந்து கொண்டே இருக்கும். பறந்துச் செல்லும் கொசு மற்றும் சிறு பூச்சிகளைப் பிடித்து உண்கின்றன. தட்டான்கள் சுற்றிவளைத்து இரைதேடும் சிறப்பு வாய்ந்தவை. இதன் கால்கள் இலகுவாக சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் இளம் புழுக்களை கவ்வி பிடித்து தாக்க ஏதுவாக அமைந்துள்ளன.
பொறி வண்டு:
இதன் தாய்ப் பூச்சி முழுவதும் மஞ்சள் அல்லது முழு சிவப்பில் கரும்புள்ளிகள் இருக்கும். குஞ்சு கறுப்பு அல்லது கருநீலமாக இருக்கும். இதன் வாழ்நாள் 42 முதல் 70 நாள்கள். இது 150 முதல் 200 முட்டைகள் வரை இடும். இந்த வண்டுகள் காய்ப் புழுக்கள், அதன் முட்டைகள், அசுவினி தத்துப் பூச்சிகள், வெள்ளை ஈ, முட்டைகள் குஞ்சுகளை அழிக்கின்றன. தன் வாழ்நாளில் 400 முதல் 500 பூச்சிகளைத் தேடி அழிக்கின்றன.
அசாசின் வண்டு:
நன்செய்,புன்செய் பயிர்களில் திடீரென அதிகமாக வரும். கழுத்தில் 3 முட்டைகள் இருக்கும். இது 35 நாள்கள் உயிர்வாழும். 150 முதல் 200 முட்டைகள் இடும். இந்த வண்டுகள் அந்துப் பூச்சிகளையும், புழுக்களையும் தாக்கி அழிக்கும். தன் அளவை விட பெரிய பூச்சிகளையும் தாக்கும் தன்மை உடையது. தன் வாழ்நாளில் 120 முதல் 140 பூச்சிகளை அழிக்கும்.
சிலந்திகள்:
பல வண்ணங்களில், பல வகையான சிலந்திகள் அனைத்துமே நன்மை செய்பவை. இவை 60 முதல் 400 முட்டைகள் வரை இடும். 120 நாள்கள் வாழக் கூடியது. இதுவும் தன் அளவைவிட பெரிய பூச்சிகளையும் தாக்கி அழிக்கும். தன் வாழ்நாளில் 500 முதல் 600 பூச்சிகளைத் தாக்கி அழிக்கும்.
நீள கொம்பு வெட்டுக்கிளி:
இது உடலைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு நீளமுடைய கொம்பு போன்ற உணர் உறுப்பினைக் கொண்டு இருக்கும். பச்சை நிறமுடையது. மென்று விழுங்கும் வாய் உறுப்பைக் கொண்டது. இவை பூச்சிகளின் முட்டைகள், தத்துப் பூச்சிகளை உணவாக உள்கொள்ளும். இதன் வாழ்நாள் 110 நாள்கள்.
இந்த நன்மை தரும் பூச்சிகளை அடையாளம் கண்டு அதை பாதுகாத்தால், விவசாயிகள் நல்ல பலனை அடையலாம்.

கருத்துரையிடுக Disqus

 
Top