நீங்கள் தினமும் சாதம், இட்லி, தோசை எனச் சாப்பிடுறீங்களே... அவற்றின் ஆதார உணவான அரிசி, தானியங்கள் மற்றும் காய்கறிகள் எல்லாம் எங்கேயிருந்து வருதுனு தெரியுமா?
அதைத் தெரியவைக்க, உங்களையே வயலில் இறக்கி, விவசாயத்தைக் கற்றுத்தருவதற்காக, பெரிய பண்ணையுடன் காத்திருக்கிறார் மகாதேவன்.
கல்பாக்கத்தில் 36 ஏக்கர் பரப்பளவில் பண்ணை அமைத்து, 14 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்துவருகிறார் இவர். தென்னை, மா, பலா என எல்லா வகை மரங்களும் இங்கு உண்டு. நெல், சோளம், காய்கறிகள், கீரைகளும் விளைகின்றன.
மண்புழு உரம், பஞ்சகவ்யம் என்னும் இயற்கை உரம் தயாரித்தல் என வேளாண்மை சார்ந்த விஷயங்களும் இங்கு நடைபெறுகின்றன. பச்சைப் பசேல் எனப் பார்ப்பதற்கே மனதை அள்ளும் இந்தப் பண்ணையை, மாணவர்களுக்கான விவசாயப் பள்ளிக்கூடமாக மாற்றியிருக்கிறார் மகாதேவன். விவசாயத்தின் அடிப்படை விஷயங்கள்கூடத் தெரியாத நகர்ப்புறப் பள்ளி மாணவர்களுக்கு, விவசாயத்தை செயல்முறையில் கற்றுத்தருகிறார்.
நிலத்தை உழுவது, விதைப்பது, நீர் பாய்ச்சுவது, நாற்று நடுவது, களை எடுப்பது, அறுவடை என வேளாண் நடவடிக்கைகளை, அந்தந்தப் பருவத்தில் வந்து மாணவர்களே செய்கின்றனர். அறுவடை செய்த விளைபொருட்களை, எப்படி சந்தைப்படுத்தி விற்பது என்பதையும் தெரிந்துகொள்கின்றனர்.
''இந்தக் காலத்துப் பிள்ளைங்களிடம் 'அரிசி எங்கேயிருந்து வருது?’னு கேட்டால், 'டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரில் இருந்து’னு சொல்றாங்க. அதனால், விவசாயத்தைப் பற்றி அவங்க எளிமையாப் புரிஞ்சுக்கவே இந்த ஏற்பாடு. இங்கே, அவங்களே விவசாயம் செய்யலாம். அதோடு, ஜியோமெட்ரி, சயின்ஸ், மார்க்கெட்டிங்னு எல்லாப் பாடங்களையும் இங்கேயே கத்துக்கலாம்'' என்கிறார்.
அது எப்படி?
''வாழையை நடணும்னா, அதுக்கு சரியான இடைவெளியில் குழிகள் வெட்டணும். அதற்கு, பசங்களே நிலத்தை அளந்து பிரிச்சுக்கிறாங்க. அதுமாதிரி, கிராம், கிலோகிராம் போன்றவற்றை காய்கறிகளை எடை போடுறப்ப தெரிஞ்சுக்கிறாங்க. அவங்க விதைச்ச செடியிலிருந்து காய்கறிகளை அவங்களே பறிக்கும்போது, அந்த முகங்களில் தெரியும் சந்தோஷத்துக்கு நிகர், வேற எதுவும் இல்லை'' என்கிறார் மகாதேவன்.
இந்தப் பயிற்சியின் மூலம், ஒவ்வொரு மாணவனுக்கும் தான் சாப்பிடும் அரிசி முதலான தானியங்கள் மற்றும் காய்கறி, பழங்கள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன என்று தெரிவதோடு, அந்த உணவுப் பொருட்களை உருவாக்குவதில் உள்ள கஷ்டங்களும் புரிகின்றன. இதைப் புரிந்துகொள்ளும்போது, உணவை வீணாக்கத் தோன்றாது. மரங்களை வெட்டுவது தவறு என்பதையும் புரிந்து கொள்கிறார்கள்.
விவசாயம் கற்க ஆசைப்படும் பள்ளி மாணவர்கள், இவருடைய பண்ணையை அணுகலாம். மண் கெடாமல், சுற்றுச்சூழல் மாசுபடாமல் விவசாயம் செய்து, மக்களுக்கு தரமான விளைபொருட்களை வழங்குவதில் கிடைக்கும் மனநிறைவு... மாணவர்களின் வாழ்க்கைக் கல்விக்கு உதவும் திருப்தி என மகாதேவனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
- CONTACT INFORMATION
Mobile Phones +91 98402 77566
- Email alladiss@gmail.com
- WEBSITES AND SOCIAL LINKS
Websites www.greenembryo.com
- Social Links
- https://www.facebook.com/alladimahadevan
- alladis(Skype)
கருத்துரையிடுக Facebook Disqus