தமிழர் பாரம்பரியத்தை மீட்க வேண்டும் என்பதற்காக, 12 லட்ச ரூபாய் செலவில் பிரம்மாண்ட மாட்டு வண்டி ஒன்றை திருவண்ணாமலையை சேர்ந்த நெசவாளர் உருவாக்கியுள்ளார்.
தமிழக சாலைகளில் இன்றைய நிலையில் மாட்டு வண்டிகளை காண்பது என்பது அரிதிலும் அரிதான ஓர் விஷயம். மாட்டு வண்டிகள் அபூர்வ பொருளாக மாறி போனதற்கு, அதிநவீன வசதிகளுடன் வந்த சொகுசு கார்களும், பைக்குகளும்தான் மிக முக்கிய காரணம்.
ஒரு காலத்தில் மாட்டு வண்டிகளால் நிரம்பியிருந்த தமிழக சாலைகளை எல்லாம் இன்று அதிநவீன சொகுசு கார்களும், பைக்குகளும் ஆக்கிரமித்து கொண்டன. அவற்றில் என்னதான் சொகுசான வசதிகள் இருந்தாலும் கூட, மாட்டு வண்டிகளில் பயணிக்கும் சுகமான அனுபவம் போல் வராது என்பதே நிதர்சனமான உண்மை.
இன்றைய நவ நாகரீக இளைய தலைமுறையினர் மாட்டு வண்டிகளை பற்றி அவ்வளவாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் ஆனந்தமாக அளவாவி கொண்டு, குலுங்கி குலுங்கி செல்லும் மாட்டு வண்டிகளில் பயணிக்கும் அந்த அனுபவம் அவர்களுக்கு கிடைக்குமா? என்பதும் சந்தேகமே.
இவ்வளவு மாற்றங்கள் எல்லாம் ஏறக்குறைய கடந்த 2 தசாப்தங்களில்தான் நிகழ்ந்திருக்க கூடும். ஆனால் தமிழர்களின் பாரம்பரிய வாகனமான மாட்டு வண்டிகள் குறித்து இன்றைய இளம் தலைமுறையினர் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டும் என்பது மார்க்கபந்துவின் எண்ணம்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ஒண்ணுபுரம் என்ற கிராமத்தை சேர்ந்த நெசவாளர்தான் இந்த மார்க்கபந்து. வளர்த்து ஆளாக்கிய தமிழ் மீதும், தமிழ் கலாச்சாரத்தின் மீதும் மார்க்கபந்து அதீத பற்று கொண்டவர்.
பிரபல இயக்குனர் ஷங்கர் படம் போல் பிரம்மாண்டமான பொருட்செலவில் தற்போது மாட்டு வண்டி ஒன்றை மார்க்கபந்து உருவாக்கியுள்ளார். இந்த மாட்டு வண்டியை தயாரிப்பதற்காக மார்க்கபந்து செலவிட்ட தொகை 12 லட்ச ரூபாய் என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.
நெசவாளரான மார்க்கபந்து 2.20 லட்ச ரூபாய் செலவில் 2 காங்கேயம் காளைகளை வாங்கியுள்ளார். அந்த காளைகளை பூட்டி ஓட்டுவதற்காக 8.45 லட்ச ரூபாய் செலவில் பிரம்மாண்டமான மாட்டு வண்டி ஒன்றை அவர் உருவாக்கியுள்ளார். எஞ்சிய செலவுகளுக்காக 1.35 லட்ச ரூபாய் தேவைப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக மாட்டு வண்டியை உருவாக்கி முடிக்கும்போது, 12 லட்ச ரூபாய் செலவாகியுள்ளது. மார்க்கபந்து உருவாக்கியுள்ள மாட்டு வண்டி முழுக்க முழுக்க தேக்கு மரத்தால் ஆனது. இதில் கலைநயத்துடன் அழகிய வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கருத்துரையிடுக Facebook Disqus