0

செத்தவன் பிழைத்த மர்மம்!!!

தெனாலிராமனை அழைத்து வந்த காவலரைப் பார்த்து, “”ராஜகுரு எங்கே?” என்று கேட்டார் மன்னர்.

“”அவர் அடித்த அடியில் நகர முடியாமல் கிடக்கிறார்!” என்றனர் காலவர்கள்.
“”அடப்பாவிகளா! அவரை ஏன் அடித்தீர்கள்? நான் அடிக்கச் சொன்னது இவனையல்லவா?”
“”தோளிலிருப்பவனை நையப்புடையுங்கள் என்றீர்கள்! தோளில் இருந்தவர் அவர்தான்!” என்றனர் பயந்துகொண்டே.
“”தெனாலிராமா! எப்படி இந்த மாற்றம்?” என்று ஆத்திரத்தோடு கேட்டார் அரசர்.
“”மன்னா! தாங்கள் சேவகர்களிடம் ஏதோ சொல்வது தெரிந்தது. ராஜகுரு என்னைச் சுமந்து வருவது தங்களுக்குப் பிடிக்கவில்லையோ என நினைத்தேன். அதனால் பிராயச்சித்தமாக நான் அவரை சுமந்து வந்தேன்…” என்று தெனாலிராமன் இழுக்க, “”ராஜகுருவைத் தண்டிக்கும்படி செய்த இவனைச் சிரச்சேதம் செய்யுங்கள்!” என்று சீறினார் அரசர்.
தெனாலிராமனை காவலர்கள் மயானத்துக்குக் கூட்டிச்சென்றனர். ராமன் காளியைத் துதித்துக் கொண்டே வந்தான். சேவகர்களில் ஒருவன், “”வேலை கிடைத்தென்று நிம்மதியாயிராமல் புத்தி கற்பிக்கிறேன் என்று கிளம்பி இப்படி உயிருக்கே உலைவைத்துக்கொண்டாயே! அப்படியென்ன ராஜகுருவிடம் பகை?” என்று கேட்டான்.
“”அண்ணே! ராஜகுரு மோசம் பண்ணிவிட்டார்!” என்று நடந்ததைச் சொல்லி, “”நீங்க இரக்கம் காட்டினா உயிர் பிழைப்பேன்!” என்று கூறியபடியே இடுப்பிலிருந்த பொன்முடிச்சை அவிழ்த்து ஆளுக்குப் பத்துப் பொன் கொடுத்தான்.
அவர்களும், “”சரி, நாட்டைவிட்டே ஓடிவிடு!” எனக் கூறி ராமனை விடுவித்தனர். ஆனால், ராமன் ஊரை விட்டு ஓடாமல் வீட்டக்குள்ளேயே ஒளிந்து கொண்டான்.
சேவகர்கள் ஒரு புறாவைக் கொன்று அதன் ரத்தத்தைக் கத்தியில் தடவி ராமனைக் கொன்று விட்டதாக அரசரிடம் காண்பித்தனர்.
மறுநாள் ராமன் சொன்னபடி அவனது தாயாரும், மனைவி மங்கம்மாவும் பையனுடன் தலைவிரிகோலமாக சபைக்கு வந்தனர்.
“”யார் நீங்கள்? உங்களுக்கு என்ன தீங்கு நேர்ந்தது? ஏன் அழுகிறீர்கள்?” என்று விசாரித்தார் மன்னர்.
“”வேந்தே! நான் தெனாலிராமனின் தாய்; இவள் அவன் மனைவி; இது ராமனின் பிள்ளை. ராஜகுருவை அடிக்கும்படி செய்தது குற்றம்தான். அதற்காகத் தலையை வாங்குவதா? பதிலுக்கு ராஜகுருவைவிட்டே ராமனை அடித்திருக்கலாம். சிறையில் தள்ளியிருக்கலாம். நாடு கடத்தியிருக்கலாம். தங்களையே தஞ்சமென்று வந்தவனைக் கொலை செய்வதா? நாங்கள் அநாதைகளாகி விட்டோம். இந்தச் சிறுபிள்ளையை எப்படி வளர்ப்போம்? அரசன் ஆண்டவனுக்குச் சமம் என்பர். தெய்வம் பாரபட்சமாய் நீதி வழங்குமா?” என்று முறையிட்டாள்.
அவர்களைப் பார்த்தபோது அரசரின் மனம் வேதனைப்பட்டது. “நீதி தவறிவிட்டோமே’ எனப் புழுங்கினார். அதனால் சமாதானமாக, “”ஏதோ ஆத்தரப்பட்டு விட்டேன். என்னை மன்னியுங்கள். ராமன் உயிரை மீட்டுத் தரமுடியாதென்பது நிஜம். ஆனால், நீங்கள் இனி அநாதைகளல்ல! தாங்கள் என் தாய்! ராமனின் மனைவி என் சகோதரி. இந்தப் பையன் வளர்ந்து சம்பாதிக்கும் வரை படிக்கவும், நீங்கள் வாழவும் இந்த அரசு சகலவிதத்திலும் உதவும்!” என்று குரல் தழுதழுக்கு வாக்களித்து, ஒரு பை நிறையத் தங்கநாணயங்களையும் கொடுத்தார்.
அவர்களும் அரைமனதோடு அதை வாங்கிக் கொள்வதாக நடித்தனர். இந்தச் செய்தி அந்தப்புர ராணிகள் காதிலும் விழுந்தது.
அவர்கள் ராயரிடம், “”அந்தணனைக் கொலை செய்தால் பிரம்மஹத்தி பாவம் சூழும். பிராயச்சித்தம் பண்ண வேண்டும்!” எனக் கோரினர்.
புரோகிதர்களிடம் இதுபற்றிக் கலந்தாலோசித்தார் அரசர். பிறகு ராஜகுருவை அழைத்து, “”ராமனின் ஆவி அவன் கொலையுண்ட மயானத்தில் அலையுமாம். அமாவாசை நள்ளிரவில் அங்கு பூஜை போட வேண்டும் என்று சாஸ்திரிகள் கூறிகிறார். உங்களால் அவனுக்குத் தண்டனை கிடைத்ததால் நீங்கள்தான் அதைச் செய்ய வேண்டுமாம்! போய்விட்டு வாருங்கள்!” என உத்தரவிட்டார்.
“அமாவாசை இருட்டில் பூஜையா’ என்று ராஜகுருவுக்கு உதறலாக இருந்தது. ஆனாலும், என்ன செய்வது, அரசகட்டளையாயிற்றே! புறப்பட்டார்.

சுடுகாட்டில் ஒரு பெரிய ஆலமரம். மழை வந்தால் நெருப்பு அணைந்துவிடுமே. அதனால், அதனடியில் தீ வளர்த்து ஹோமம் நடத்தினர். ஹோமம் முடிந்ததும், “”ராமனின் ஆவியே! சாந்தியடைந்து விடு!” என உரக்கக் கூவினர்.
“”மாட்டேன்!” என்றபடி ஒரு கரிய உருவம் மரத்திலிருந்து குதிக்க, குதிகால் பிடரியில் படும்படி அனைவரும் ஓடினர். அரண்மனைக்குச் சென்றுதான் திரும்பிப் பார்த்தனர். ராமனின் ஆவியைக் காணோமென்றதும் பெருமூச்செறிந்தனர்.
அரசர் இதைக் கேட்டதும், “”ராமனின் ஆவியை சாந்தி அடையச் செய்பவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசு!” எனப் பறையறையச் செய்தார்.
நீண்ட நரைத்த தாடியுடன் ஒரு சாமியார் வந்தார். தான் ராமனின் ஆவியைச் சாந்தப் படுத்துவதாகக் கூறினார்.

“”எப்படிச் செய்வீர்கள்?” என்று மன்னர் கேட்க, “”அவனுக்கு உயிர் கொடுப்பேன். ஆனால், ஒரு நிபந்தனை. அவன் பிழைத்து வந்த பிறகு பழைய விஷயம் பற்றி யாரும் எதுவும் போசக்கூடாது!” என்றார். அரசரின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
“”ராமன் மீண்டும் பிழைத்துவந்தால் என் பாவம் தொலையும். மன உறுத்தலும் மறையும். எதுவும் பேசமாட்டோம்!” என வாக்களித்தார்.
“”இறந்தவன் எழுந்து வருவதா? சுத்த ஹம்பக்!” என்றார் ராஜகுரு.
“”நீங்கள் பேசாமலிருங்கள்! ஐயா! ராமன் எப்போது வருவான்?” என அரசர் ஆர்வத்தோடு கேட்டார்.
“”இதோ, இப்போதே வந்துவிட்டான்!” என்று தாடியைப் பிய்த்தெறிந்தான் ராமன்.
அரசர் முதலில் திடுக்கிட்டாலும், பின் ராமனின் சமயோஜித நடவடிக்கைகளைக் கண்டு மெச்சினார். வாக்களித்தபடி ஆயிரம் பொற்காசுகளைப் பரிசாகவும் அளித்தார். தன்னை விடுவித்த சேவகர்களைத் தண்டிக்கக்கூடாதென்று வேண்டினான் ராமன்.

அரசரும், “”ராஜகுருவிடம் இனி துவேஷம் பாராட்டக்கூடாது!” என எச்சரித்தார்.
புத்திசாலி எந்த இக்கட்டிலிருந்தும் தப்பிவிடுவான் என்பதற்கு ராமனே சாட்சி!

கருத்துரையிடுக Disqus

 
Top