‘நீ வாங்கற இந்த அஞ்சு பத்து பிச்சைக்கு இது தேவையா’ என்று கவுண்டமணி ஒரு படத்தில் கேட்க செந்தில் ‘ஒரு விளம்பரம்….’ என்று இழுப்பார். விளம்பரம் என்று அவர் குறிப்பிடுவது பப்ளிசிட்டி. இதற்கு இன்று பப்ளிசிட்டி கொடுக்கப் போகிறோம்.
பப்ளிசிட்டி என்பது மீடியாவில் ஒருவரை, பொருளை, பிராண்டை, கம்பெனியை பிரபலப்படுத்தி தாக்கத்தை ஏற்படுத்தும் செய்தி. எதையும் பிரபலபடுத்த விளம்பரம் பெரியதாய் உதவும். ஆனால் அதற்கு ஏகத்துக்கு செலவாகிறது. டீவி விளம்பரத்திற்கு செலவழிக்கும் பணத்தில் பேசாமல் ஒரு டீவி சேனலையே துவக்கிவிடலாம். இங்கு தான் உதவிக்கு வருகிறது பப்ளிசிட்டி.
பப்ளிசிட்டிக்கும் விளம்பரத்திற்கும் ஆறு வித்தியாசத்திற்கு மேல் உண்டு. பப்ளிசிட்டி காசு கொடுக்காமல் கிடைப்பது. விளம்பரம் தரும் அதே பயனைத் தரக்கூடியது. ஆனால் பப்ளிசிட்டியின் சக்தி அதன் நம்பகத்தன்மை. மீடியாவில் பார்க்கும், கேட்கும், படிக்கும் விஷயத்தை பொதுவாகவே மக்கள் நம்புகிறார்கள். ஆனால் விளம்பரத்தை ஒருவித சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். மேலும், விளம்பரத்தின் ஆயுள் கம்மி. விளம்பரத்தை பார்த்துக் கொண்டிருக்கும் போதே மறந்து விடும். பப்ளிசிட்டி நீண்ட நாள் நினைவில் நிற்கும். நாலு பேரிடம் அதைப் பற்றிச் சொல்லவும் தோன்றும்.
பப்ளிசிட்டியும் பொது ஜனத் தொடர்பும் கிட்டத்தட்ட ஒன்று தான். இருந்தும் பல மார்க்கெட்டர்கள் தங்கள் பிராண்டுகளை பிரமோட் செய்ய விளம்பரத்திற்கு தரும் மரியாதையில், செய்யும் முயற்சியில், செலவழிக்கும் நேரத்தில் பாதியைக் கூட பப்ளிசிட்டி உருவாக்குவதற்கு தருவதில்லை.
பப்ளிசிட்டியை உருவாக்க முடியுமா?
பேஷாக முடியும். உருவாக்கும் செய்தி, பரப்பும் விதம், தேர்ந்தெடுக்கும் மீடியா பொறுத்து ஜோராக உருவாக்கலாம். உருவாக்கி இருக்கிறார்கள். பப்ளிசிட்டியை கருவாக்கி, உருவாக்கி, மெருகேற்றி, அரங்கேற்றும் வழிகளைப் பார்ப்போம்.
பிராண்டிற்கு பப்ளிசிட்டி உருவாக்க முதலில் அந்த பிராண்ட் தெளிவாக பொசிஷனிங் செய்யப்பட்டிருக்க வேண்டும். பிராண்டின் ஆதி அந்தம் அனைத்தும் அதன் ஆதார பொசிஷனிங். உருவாக்கும் பப்ளிசிட்டி பிராண்டின் பொசிஷனிங்கிற்கு ஏற்ப இருக்கவேண்டும். அதை வலுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.
‘ஃபிலிம்ஃபேர்’ சினிமா செய்திகளை தாங்கி வரும் பத்திரிகை. தங்களுக்கு பப்ளிசிட்டி உருவாக்கும் வகையில் அந்த பிராண்ட் பள்ளிக் குழந்தைகளுக்கு ஸ்காலர்ஷிப், ஏழை விளையாட்டு வீரர்களுக்கு இலவச ஷூ என்று அளிக்காமல் வருடா வருடம் சினிமா அவார்டுகள் வழங்குகிறது. ’ஃபிலிம்ஃபேர் அவார்ட்ஸ்’ நடக்கும் போதும் மற்ற நேரங்களிலும் அச்செய்தி மீடியாவில் எத்தனை பரபரப்பாக பேசப்படுகிறது என்பதை பார்த்திருப்பீர்கள். அந்த விழா நிகழ்ச்சியை எத்தனை முறை நீங்களே டீவியில் குடும்பத்தோடு ரசித்திருப்பீர்கள்.
பப்ளிசிட்டி நோக்கம்
பப்ளிசிட்டி மூலம் என்ன சாதிப்பதாய் உத்தேசம் என்பதை முடிவு செய்த பின் உருவாக்கவேண்டும். நாலு பேருக்கு தெரிய வேண்டும் என்பது முதல், பிராண்ட் பற்றி நல்ல அபிப்ராயம் வளரவேண்டும் என்பது வரை, கடைக்குள் வரவழைக்க வேண்டும் என்பது முதல் மக்கள் மனதில் பப்ளிசிட்டி பல பணிகள் புரியும். பிராண்டை பற்றிய தவறான எண்ணம் மாறவேண்டும் என்பது வரை நோக்கம் தெளிவாக வரையறுக்கவேண்டும்.
சரியான வாடிக்கையாளர்கள்
கூட்டத்தோடு கோவிந்தா போடாமல் பிராண்டின் வாடிக்கையாளர் பிரிவை தாக்கும் வகையில் பப்ளிசிட்டி முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
‘பிஅண்ட்ஜி’ கம்பெனி ‘விஸ்பர்’, ‘பேண்டீன்’, ‘விக்ஸ்’, ‘ஆயில் ஆஃப் ஓலே’ என்று பெரும்பாலும் பெண்களை குறிவைக்கும் பிராண்டுகளை விற்கிறது. அதனால் பெண்களை கவரும் வண்ணம் ‘சிக்க்ஷா’ என்ற ஃபண்டை துவக்கியிருக்கிறது. வாடிக்கையாளர்கள் எந்த பி அண்ட் ஜி பிராண்டை வாங்கும் போதும் அதிலிருந்து ஒரு பகுதி சிக்ஷா ஃபண்டுக்கு செல்கிறது. இந்த ஃபண்ட் கிராமங்களிலுள்ள ஏழை பெண் குழந்தைகளின் பள்ளி படிப்புக்கு செலவழிக்கிறது. கம்பெனியைப் பற்றி நல்ல அபிப்ராயத்தை வளர்ப்பதோடு பெண்கள் மனதை தொடும் வகையில் அமைந்திருப்பதால் பிரபலமான பப்ளிசிட்டி திட்டமாகவும் திகழ்கிறது.
சரியான மீடியா
விற்கும் பிராண்டிற்கேற்ற, உருவாக்க நினைக்கும் பப்ளிசிட்டிக்கேற்ற மீடியாவை தேர்ந்தெடுப்பதும் முக்கியம். தேர்ந்தெடுத்த மீடியாவில் நீங்கள் உருவாக்க நினைக்கும் பப்ளிசிட்டி செய்திக்கேற்றவர் யார் என்று தெரிந்துகொண்டு அவரைக் குறி வைத்து பப்ளிசிட்டி செய்தி அனுப்பப்பட வேண்டும்.
தென் தமிழகமெங்கும் ஹியரிங் எய்ட் விற்கும் ‘சவுண்ட்ஸ் குட்’ என்ற கடை உடல் ஆரோக்கிய பத்திரிகைகளை தேர்ந்தெடுத்து அதன் ஆசிரியர்களுக்கு செய்தி குறிப்பு ஒன்று அனுப்பியது. பத்தில் ஒருவருக்கு காது கேட்பதில் பிரச்சினை இருக்கும் என்று கூறும் உலக ஆய்வுகள் பலவற்றை குறிப்பிட்டு அதில் விளக்கியது. இந்த திடுக்கிடும் செய்தி ஹெல்த் பத்திரிகைகளின் கவனத்தை கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லையே. பல பத்திரிகைகள் இச்செய்தியை கட்டுரைகளாக பிரசுரித்தன. சவுண்ட்ஸ் குட் பற்றிய குறிப்புகள் அதில் தாராளமாய் இடம் பெற்றன, சவுண்ட்ஸ் குட் பிராண்டிற்கு இதனால் ஏகப்பட்ட பப்ளிசிட்டி கிடைத்தது என்பது நான் சொல்லாமலே உங்கள் காதுகளுக்கு கேட்டிருக்குமே!
பப்ளிசிட்டிக்கான கதைகளம்
சினிமாவிற்கு மட்டுமல்ல, உருவாக்கும் பப்ளிசிட்டிக்கும் கதை களம் அவசியம். தெளிவான கதை சரியான முயற்சி சேர்ந்தால் ஜோரான பப்ளிசிட்டி கியாரண்டி. இதற்கு சிறந்த உதாரணம் ‘ஆர்எம்கேவி’ செய்த மார்க்கெட்டிங் சித்து விளையாட்டு.
பட்டு புடவை என்றால் பெண்கள் முதலில் பார்ப்பது கலரை. பல கலரில் பட்டு புடவை இருக்கும் கடை என்று தன்னை வித்தியாசப்படுத்த எண்ணியது ஆர்எம்கேவி. பல கலரில் புடவை உண்டு என்று ஆர்எம்கேவி கூறியிருந்தால் வழக்கமாக எல்லா கடைகளும் சொல்வதுதான் என்று யாரும் அதை கண்டுகொண்டிருக்க மாட்டார்கள். அதனால் பப்ளிசிட்டி கிடைக்கும் வகையில் ஐம்பதாயிரம் கலரில் புடவை நெய்து அதை கோலாகலமாக அறிவித்தது.
ஐம்பதாயிரம் கலர்களை ஒரே புடவையில் அளிக்கும் கடையால் ஐம்பதாயிரம் கலரில் வெவ்வேறு புடவைகளை கண்டிப்பாக அளிக்கமுடியும் என்று மக்கள் நம்பினார்கள். பப்ளிசிட்டியை இன்னமும் வேகமாக முடக்கி விட அப்பொழுது அரசல் புரசலாக பேசப்பட்டு அந்த ‘ஜோதிகா சூர்யா’ கிசுகிசுவை மைப்படுத்தி ஜோதிகாவை விளம்பரத்தில் தோன்ற வைத்து ‘ஐம்பதாயிரம் கலரில் புடவை ரெடி. அப்ப மாப்பிள்ளை’ என்று ஜோதிகாவை கேட்கச் செய்தது ஆர்எம்கேவி. ஊர் கதையை உயிர் போகும் வரை பேசும் தமிழர்களுக்கு இந்த மேட்டர் போதாதா. அன்று துவங்கி இன்று வரை அக்கதையை பேசிக் கொண்டிருக்கிறார்கள் நம் மங்கையர்!
முயற்சி முயற்சி முயற்சி
செய்தி தயாரித்தோம், மீடியாவிற்கு அனுப்பினோம், இனி அவர்கள் பாடு என்று நினைத்து அக்கடா என்று உட்காரக்கூடாது. என்னதான் பெரிய செய்தியை தயாரித்து அனுப்பினாலும் எந்த மீடியாவும் உங்களைத் தேடி ஓடி வராது. நீங்கள் தான் மெனக்கெட வேண்டும். முயற்சி திருவினையாக முயன்று கொண்டே இருக்க வேண்டும். ‘பிரசுரிக்கலன்னா இவன் விடமாட்டான் போலிருக்கு, பிரசுரித்துத் தொலைப்போம்’ என்று மீடியா நினைக்கும் வரை போராட வேண்டும்
.
‘நான் போற ஊருக்கெல்லாம் வா. என்னை புகழ்ந்து பேசு. அதும் அந்த தவில்காரன் காதில விழறா மாதிரி பேசு’ என்ற காமெடி வசனம் கேட்டிருப்பீர்கள். தவில்காரனை எரிச்சல் மூட்டுவது முதல் தமிழகமெங்கும் பிராண்ட் பற்றி தெரிய வைப்பது வரை பப்ளிசிட்டி பல பணிகள் புரியும். பல பயன்கள் தரும். செய்வன திருந்தச் செய்தால்!
கருத்துரையிடுக Facebook Disqus