0
My Smartphone Recognizes Genuine QR Codes! Practical Unclonable QR ...

யூஸ் பண்ணிகிட்டு இருக்கற கட்டில் பழசா  போச்சு, இதை வித்துட்டு இன்னும் கொஞ்சம் பணத்தை போட்டு நியூ மாடல்ல ஒண்ணு வாங்கலாம்னு நினைச்சு ஓஎல்எக்ஸ்ல விளம்பரம் செஞ்சு அதனோட விலை 12 ஆயிரம்னு போடறாரு சென்னையில் இருக்கற ஒருத்தரு அந்த விளம்பரத்தை பார்த்ததும் அந்தநெம்பருக்கு கால் பண்ணிட்டு விலாசம் வாங்கிட்டு வீட்டுக்கு வந்து கட்டிலை பார்த்துட்டு 9 ஆயிரம் ரூபாய்க்கு கேஷ் கொடுத்துட்டு உடனே எடுத்துக்கறேன்னு சொல்றாரு. 

ஆனா அந்த விலைக்கு விக்கறதுக்கு விளம்பரம் போட்டவர் விரும்பலே. இன்னும் நல்ல விலைக்கு போகும்னு எதிர்பார்த்துகிட்டு இருந்தப்போ ஒருத்தர் தான் ராணுவத்திலே பணிபுரியறதா சொல்லிட்டு இவர் அதை நம்பனும்கிறதுக்காக அவரோட அடையாள அட்டையை வாட்ஸ்அப்ல அனுப்பிவிடறாரு. அந்த கட்டில் தனக்கு பிடிச்சுப்போனதாகவும் அது தனக்கு வேணும்னும் கால் பண்ணி கேட்கறார். நான் வெளியூர்ல இருக்கறேன். வர்றதுக்கு ஒருமாசம் ஆகும். நீங்க சொன்ன விலைக்கே எடுத்துக்கறேன். பணத்தை ஆன்லைன்ல அனுப்பிடறேன், உங்க அக்கவுன்ட் நெம்பர் டீடெய்ல் அனுப்புங்கன்னு சொன்னவுடன், ஆஹா நாம எதிர்பார்த்த ரேட் கிடைச்சுடுச்சுன்னு இவரோட பேங்க் டீடெய்ல் அனுப்ப அந்த நபர் ஒரு க்யூஆர் கோடு (Quick Response code) இவரோட வாட்ஸ் அப் நெம்பருக்கு அனுப்பறாரு. அனுப்பிட்டு இந்த QR code ஸ்கேன் பண்ணுங்க. டெஸ்ட் பண்றதுக்காக உங்களுக்கு இப்போ இதுல 10 ரூபாய் அனுப்பியிருக்கேன். ரிசீவ் ஆனதும் மீதி 11990 ரூபாயை இதேபோல அனுப்பிடறேன்னு சொல்ல இவரும் அந்த QR Code ஐ ஸ்கேன் பண்ணதும் இவரோட அக்கவுன்ட்ல 10 ரூபாய் கிரடிட் ஆகியிருக்கு. 

சந்தோஷப்பட்ட மனுஷன், தான் மிகப்பெரிய மோசடியில் சிக்கப்போறோம்னு தெரியாம உடனே அவருக்கு கால்பண்ணி விஷயத்தை சொன்னதும் அவரு மீதித்தொகைக்கு இன்னொரு  QR code அனுப்பறாரு. அதை ஸ்கேன் பண்ணதும் 10 ஆயிரம் ரூபாய் இவரோட அக்கவுன்ட்ல இருந்து அவருக்கு போயிடுச்சு. இவர் பதறிப்போய் அந்த நபருக்கு கால்பண்ணதும், சாரி சார் QR code ஐ தவறா மாத்தி அனுப்பிட்டேன், உங்க பணமும் எனக்கு வந்த பணத்தையும் உடனே அனுப்பிடறேன், நீங்க நான் ‍மறுபடியும் அனுப்பப்போற QR code ஐ ஸ்கேன் பண்ணிட்டா உங்க அக்கவுன்ட்டுக்கு கிரடிட் ஆகிடும்னு சொல்லி ஒரு QR code அனுப்ப மீண்டும் 40 ஆயிரம் இவர் அக்கவுன்ட்ல  டெபிட் ஆயிடுச்சு. அதோட ஆட்டம் முடிஞ்சுது. மொத்தத்துல 50 ஆயிரம் காலியாயிடுச்சு.

கொடுத்த நெம்பருக்கு கால் பண்ணா அந்த நெம்பர் ப்ளாக். மனுஷன் கடந்த ஒரு வாரமா வீட்டுக்கும் சைபர் க்ரைம் காவல்நிலையத்துக்குமா நடந்து கிட்டு இருக்காரு. ஏமாத்தனவர் பத்தி ஒரு தகவலும் கிடைக்கலே. 9ஆயிரத்துக்கு வித்திருந்தா பிரச்சனை சால்வ்டு. அதிகமா கிடைக்குமேன்னு ஆசை.  இவர் மட்டுமில்லே. கடந்த சில நாட்கள்ல சென்னையில் மட்டும் QR code  மூலமாக 22 பேர் இப்படி ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. படித்த படிக்காத விவரமறிந்த நிறைய பேரு டெக்னாலஜி தெரிந்த கிரிமினல்களால் இப்படி ஏமாற்றப்படுகின்றார்கள். டெக்னாலஜி சார்ந்த நூதன மோசடிகள் நாள்தோறும் அரங்கேறிக்கிட்டே இருக்கு. நாம தான் ரொம்ப எச்சரிக்கையா இருக்கனும். 

ஒருஅக்கவுன்ட் நெம்பரும், இமெயில் ஐடி இருந்தா இந்த QR code ஐ இலவசமா ஜெனரேட் பண்ணி கொடுக்க நிறைய இணைய தளங்கள் தயாரா இருக்கு. சைபர் கிரிமினல்கள் இதனைப்பயன்படுத்தி நூதனமாக அடுத்தவர்களின் அக்கவுன்ட்ல இருந்து பணத்தை அபேஸ் பண்ணிடறாங்க. இவங்க வாங்கற சிம்கார்டு போலி அட்ரஸ்ல வாங்கப்படுது. நாலைஞ்சு பேரை இப்படி  ஏமாத்திட்டு இவங்க அக்கவுன்ட்ல பணம் போய் சேர்ந்ததும் இன்னொரு அக்கவுன்ட்டுக்கு உடனே மாத்தப்பட்டு இந்த அக்கவுன்ட்டை கைகழுவி விட்டுடறாங்க. எப்படி சிம்கார்டும் அக்கவுன்ட்டும் இன்றளவும் டூப்ளிகேட் ஐடி வச்சு பெறமுடியுதுங்கறது புரியாத புதிரா இருக்கு.

அவங்க கொடுத்த அட்ரசை தேடிப்போனா அங்க அதுபோல யாருமே இருக்கறது இல்லே. பேங்க்ல இருந்து பேசற மாதிரி டெபிட், கிரடிட் கார்டு நெம்பர்கேட்டு அதன் மூலமா பணத்தை திருடறது, இந்த விளம்பரங்கள் பார்த்துட்டு பேரம் பேசாம உங்களுக்கு பணம் டிரான்ஸ்பர் பண்றேன்னு சொல்லிட்டு பணத்தை அக்கவுன்டுக்கு அனுப்பினதா ஒரு மெசேஜ் அனுப்பிட்டு ப்ளாக் மெயில் பண்றது, காஸ்ட்லி பிராண்டட் லேப்டாப் குறைஞ்ச விலைக்கு தர்றதா சொல்லி எல்லா டீடெய்லும் கொடுத்துட்டு பார்சல்ல வாங்கிக்கோங்கன்னு சொல்லி ஆன்லைன்ல பணத்தை டிரான்ஸ்பர் பண்ணச் சொல்லி ஏமாத்தறது இப்படி  நிறைய நடந்துகிட்டுதான் இருக்கு. நல்ல படிச்ச விவரம் தெரிஞ்ச இளைஞர்கள்கூட இவர்களது பொறியில் சிக்கி பணத்தை இழக்கறாங்க. 

பெரும்பாலா  நடக்கற இந்த மோசடிகளை சைபர் ப்ரான்ச் போலீசாரால் கண்டுபிடிக்க முடியறதே இல்லை.  ராஜஸ்தான், டெல்லி, பீகார் போன்ற மாநிலத்துக்காரன் இங்க இருக்கறவனை நல்லா ஏமாத்தறான். ஏமாத்தறதுக்காகவே தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளை நல்லா கத்துக்கறான்.

ஆன்லைன்ல முகம் தெரியாத ஒருத்தன் பொருட்களை கம்மியான விலைக்கு தர்றேன்னு  விளம்பரப்படுத்தினாலோ இல்லே விளம்பரப்படுத்தின பொருளை எங்க இருந்தோ ஒருத்தன்  பார்த்துட்டு சொன்ன விலைக்கே எடுத்துக்கறேன்னு சொல்லி ஆன்லைன்ல பணம் அனுப்பறேன்னு சொல்றவங்களையோ நம்பவே நம்ப வேணாம் நண்பர்களே.  முகம் தெரியாதவர்களிடம் ஆன்லைன் மூலம்  பணப்பரிவர்த்தனை செய்து பொருட்களை வாங்குவதும் விற்பதும் என்பது நம்முடைய வங்கிக்கணக்குல இருக்கற பணத்திற்கு நாமே வச்சுக்கற ஆப்பு.. 

கருத்துரையிடுக Disqus

 
Top