0
 
சார்லஸ் வில்லியம்ஸ் வயது 89. இங்கிலாந்து வசம் நமது நாடு அடிமைப்பட்டிருந்தபோது ராயல் ஏர்போர்ஸ் என்று அழைக்கப்பட்ட இந்திய விமானப்படையில் இடம் பெற்றிருந்தார். 2ம் உலகப் போரில் பங்கேற்றவர்.
விமானப்படையில் சேர்ந்த சார்லஸ், லாகூருக்கு ஆறு வார பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு ஆக்ராவில் பணி கிடைத்தது. அடுத்த சிலநாட்களிலேயே அவர் பர்மாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இங்கிலாந்துப் படை, ஜப்பானியப் படையுடன் 2ம் உலகப் போரில் மோதிக் கொண்டிருந்தது.
''எங்களது பிரிவு நேரடியான போரில் பங்கேற்கவில்லை. இருப்பினும் தரைப் போரில் ஈடுபட்டிருந்த எங்களது வீரர்களுக்குத் தேவையானதை நாங்கள் செய்து வந்தோம். பல வாரங்கள் நாங்கள் சாப்பாடு, தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட நேரிட்டது. மிகவும் மோசமான போர் அது. பல வீரர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமுற்றனர். இருப்பினும் நாங்கள் தப்பினோம் என்று பழைய நினைவுகளில் மூழ்கினார் சார்லஸ்.

சரி, சார்லஸின் பெரும் செயலைப் பற்றி பேசுவோமா...
ஓய்வுக்குப் பின்னர் தனது பென்ஷன் கணக்கைப் பார்த்தபோது அதில் ஏதோ குழப்பம் இருப்பதாக உணர்ந்தார் சார்லஸ். அதாவது தனது பென்ஷன் தொகை குறைவாக இருப்பதாக உணர்ந்தார் சார்லஸ். இதையடுத்து உள்ளூர் ராணுவ நல மற்றும் குறை தீர்ப்பு வாரியத்தை அணுகி முறையிட்டார். ஆனால் அங்கு அவருக்கு பலன் கிடைக்கவில்லை. யாரும் அவரது குறையைத் தீர்க்க அக்கறை காட்டவில்லை.

இதையடுத்து மைசூரில் உள்ள வீகேர் முன்னாள் ராணுவத்தினர் அறக்கட்டளையின் தலைவர் சுப்ரமணியை அணுகினார் சார்லஸ். பின்னர் வீகேர் அறக்கட்டளையில் கணக்குப் போட்டு பார்த்தபோது சார்லஸுக்கு பென்ஷன் தொகை குறைத்துக் கொடுக்கப்படவில்லை, மாறாக கூடுதலாக கொடுக்கப்பட்டு வருவது தெரிய வந்தது.

அதாவது நிரந்தர மருத்துவப் படியாக சார்லஸுக்கு ரூ. 300 மாதந்தோறும் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. உண்மையில் அந்தப் படியைப் பெறும் தகுதி அவருக்கு இல்லை. கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த மருத்துவப் படியுடன் சேர்த்து மாதம் ரூ. 15,200 பென்ஷன் வழங்கப்பட்டு வந்துள்ளது.

தனக்கு கூடுதலாக பணம் போடப்பட்டு வருவதை அறிந்த சார்லஸ், உடனடியாக கூடுதலாக தரப்பட்ட தொகையை 15 மாதங்களுக்கு சம தொகையாக கழித்துக் கொண்டு விடுமாறு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து சுப்பிரமணி, மங்களூரில் உள்ள ஸ்டேட் பாங்க் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுப்பிரமணி கூறுகையில், தற்போது சார்லஸுக்கு மருத்துவச் செலவுகள் நிறைய உள்ளன.அவருக்கு கண் பார்வை மங்கி விட்டது. இருதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதற்கு ரூ. 1.5 லட்சம் பணம் தேவை. அது இல்லாமல் அவதிப்படுகிறார். இந்த நேரத்தில் தனக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படியைத் திரும்பக் கொடுத்து விட தீவிரமாக உள்ளார். இது ஒரு பக்கம் ஆச்சரியத்தையும், மறுபக்கம் வருத்தத்தையும் தருகிறது என்றார்.

ஆனால் சார்லஸ் கூறுகையில், எனக்கு எது தகுதி இல்லையோ அதைப் பெற நான் ஆசைப்படக் கூடாது. அது தவறு. மேலும், எனக்கு தகுதி இல்லாத பணத்தைப் பெற்று அரசுக்கு சுமையைக் கூட்ட நான் விரும்பவில்லை. எனவேதான் பணத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன் என்றார் உறுதியாக.

சார்லஸ் நிராகரித்துள்ள தொகை சிறிதுதான், ஆனால் அவரது மனம் மிக மிகப் பெரியது... இப்போது நாட்டில் நடந்து வரும் ஊழல்களை விட!

கருத்துரையிடுக Disqus

 
Top