0


ஊருக்கு ஓரத்திலே
உண்டு ஒரு காணி நிலம்
எங்கப்பன் பாட்டன் பூட்டன்
எல்லொரும் வாழ்ந்த இடம்
தொட்டா நீர் ஊரும்
தோண்டுனா நெல் விளையும்
தட்டி எடுத்தோம்முன்னா
தங்கம் கூடச் சேர்ந்து வரும்

மாசம் தவறாம
மழை ஒண்ணு பெய்ஞ்சுபோகும்
மழை பெய்ஞ்ச மண்வாசம்
மல்லிக பூவ தோக்கடிக்கும்

பார்த்தாலே பசி போக்கும்
பஞ்சம் பிசி போக்கும்
பழகிய தோழன் போல
பாசம் கூட காட்டி நிக்கும்

உழுது களைக்கையில
உள்ளதொரு புளிய மரம்
உண்மையச் சொல்லப்போனா
ஊருக்கு அது அந்தப்புரம்

அலுத்துச் சலித்துப்போயி
அணைச்சு சாய்ஞ்சோமுன்னா
ஆத்தா மடிபோல
அம்பூட்டுச் சொகம் கொடுக்கும்

பெத்த மக போல
பேணிப் பாத்தோம்முங்க
பாதம் பட்டா நோகும்மோன்னு
பார்த்துப் பார்த்தே நடந்தோமுங்க

இப்போ
காரு போக வேண்ணுமுன்னு - இத
கவர்மண்ட்டு கேக்குதுங்க
சோறு போடும் பூமி - இத
கூறு போட பாக்குதுங்க

நீதி சொல்லும் சாமி கூட
நிதி பார்த்தே நிக்குதுங்க
சதி செய்யும் கூட்டம் ஒண்ணு
சந்திக்கு வருகுதுங்க

பூமிய தந்துபோட்டு
பொழைக்க எங்க போறதுங்க ?
சாமியே கேட்டாக்கூட
சத்தியமா மாட்டேனுங்க !

கருத்துரையிடுக Disqus

 
Top