0
பச்சிளம் குழந்தையை குளிப்பாட்டி விடும் சம்பாத்தியத்தில், சென்னையில் வாழ்க்கை நடத்துகிறார் மூதாட்டி. பெற்றோர் எதிர்ப்பை மீறி, காதல் மணம் செய்துகொண்டு நகரில் தனித்து வாழ்பவர்கள், மூதாட்டியின் சேவையை பயன்படுத்துகின்றனர்.பட்டணத்தில் வாழ்வது அவ்வளவு சுலபம் அல்ல. குடிக்கிற தண்ணீரில் இருந்து, கழிப்பறையை பயன்படுத்துவதற்கு வரையும் காசு கொடுத்தாக வேண்டும். மூச்சு காற்றைத் தவிர மற்ற அனைத்தையும் பணம் கொடுத்து தான் சென்னையில் வாங்க வேண்டும்.


மங்கிய மரபு

அனைத்தையும் வாங்கினாலும், பச்சிளம் குழந்தையை பராமரிப்பது போன்ற விஷயங்களில் பணத்தை நம்புவது சாத்தியமில்லாமல் போகும். அந்தந்த குடும்பத்தவரே தான் அதை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.இவற்றை கற்றுக்கொள்வது கூட்டுக் குடும்பங்களில் சுலபம். தலைமுறைக்கும் அவை பண்பாட்டு ரீதியாக நகர்ந்து வருகிறது. கூட்டு குடும்பங்கள் சிதைந்து போன சென்னை நகரில், சிறு குடும்பங்களில் குழந்தை பராமரிப்பு சிக்கலான ஒன்றாக உள்ளது. இந்த சிக்கலை பயன் படுத்தி பிழைப்புக்கான ஒரு சிறு தொழிலை உருவாக்கி விட்டார் ஒரு மூதாட்டி.

பச்சிளம் குழந்தைகளை குளிப்பாட்டி பிழைப்பு நடத்தும் ரங்கம்மாள் கூறியதாவது:

வேலை வெட்டி இருக்குல்ல...

பச்சிளம் குழந்தையை எல்லாராலும் குளிப்பாட்டிவிட முடியாது. வெதுவெதுப்பான தண்ணீரில், முழங்காலில், குப்புற கிடத்தி, மூக்கில் தண்ணீர் போய் விடாமல், மூச்சுத் திணறல் ஏற்படாமல், இதமாக, அதே நேரத்தில் விரைவாக குளிப்பாட்டி முடிக்க வேண்டும். இப்போதுள்ள பெண்களுக்கு குழந்தையை குளிப்பாட்டி விடத் தெரியவில்லை. வயதானவர்கள் வீட்டில் இருந்தால் கூட, மொழு, மொழுன்னு இருக்கு. கை வாகு வரவில்லை. அதனால் பயமாக இருக்கிறது என, தெரிவிக்கின்றனர். கிராமத்தில் ஒன்றிரண்டு குழந்தைகள் பிறந்து இருக்கும். தெருவில் இருக்கும் வயதானவர்கள் குளிப்பாட்டி விடுவர்.

என்ன தப்பு?

நகரத்தில் அப்படி இல்லையே, நகருக்கு, நான்கு பிள்ளைகள் பிறந்துட்டு இருக்கு. எனக்கும் வயிறு இருக்குல்ல... அதனால் தான் இதை ஓர் தொழிலாக குழந்தைகளை குளிப்பாட்டி வருகிறேன். இதன் மூலம் கிடைப்பதை வைத்து என் வாழ்க்கையை நடத்துகிறேன். எப்பவும் சுத்தமாக இருப்பேன். எல்லாம் நவநாகரிகம் ஆகிவிட்டதால், சில குடும்பங்களில், குழந்தை ஆயி போன துணியைக் கூட துவைக்க தயங்குகின்றனர். இவர்களிடம் பணம் கேட்டால் என்ன தப்பு... அதற்காத்தான் 1,000 ரூபாய் கேட்கிறேன். ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் பணம் கொடுப்பர். அப்புறம், அவர்களே குளிப்பாட்டிக் கொள்வர். இலவசமாக குளிப்பாட்டி விட்டுக் கொண்டு இருந்தால், என்னை யார் பார்த்துக் கொள்வது.இவ்வாறு ரங்கம்மாள் தெரிவித்தார்.

ஆள் கிடைக்காது

இவரால் பயன் பெறும் மணி ரஞ்சனி கூறியதாவது:

பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, காதல் திருமணம் செய்து கொண்டு, சென்னைக்கு வந்தோம். குழந்தை பிறந்த தகவல், எங்களது வீட்டாருக்கு தெரிந்த பின்னும் வந்து பார்க்கவில்லை. உதவிக்கு ஆள் கிடையாது. எனக்கோ குழந்தையை குளிப்பாட்ட பயம். அப்புறம், 600 ரூபாய்க்கு குழந்தையை குளிப்பாட்டுகிறார் மூதாட்டி என தெரிந்ததும், நிம்மதியடைந்தோம். பணம் வாங்குகிறார் என்பதை தவிர, மிகவும் அன்பானவர். எங்களைப் போன்றவர்களுக்கு அவரை விட்டால் வேறு வழியில்லை. கிராமத்தில் இந்த நடைமுறையை பார்த்ததில்லை என்பதால், ஆச்சரியமாக இருந்தது.இவ்வாறு மணி ரஞ்சனி கூறினார்.

குளிப்பாட்டும் போது...:

*மிதமான காற்றோட்டமுள்ள இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

*மெல்லிய பருத்தி துணியை தயாராக வைத்திருத்தல் வேண்டும்.

*குழந்தையை அழுத்தி பிடிக்கக்கூடாது. முழங்காலில் கிடத்தி, மார்பு உள்ளிட்ட முன் பகுதியை சுத்தம் செய்த பின், தலை சற்று தூக்கி இருக்குமாறு பின்னால் கிடத்தி, சுத்தம் செய்ய வேண்டும்.

*கண், மூக்கு, வாய் பகுதியில் சோப்பு தண்ணீர் போய் விடாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

*விரைவாகவும், அதே நேரத்தில் கவனமாகவும் செயல்பட வேண்டும்.

*ஒவ்வொரு செயலும் படிப்படியாக நடக்க வேண்டும்.

கருத்துரையிடுக Disqus

 
Top