0

மலையின் உச்சியில் இருக்கிறது முருகன் கோயில். கோயிலுக்குச் செல்ல 200-க்கும் மேற்பட்ட படிகள்.

படிக்கட்டுக்களின் ஓரங்களில் இளநீர், தேநீர், சந்தனம், சாமிப் படங்கள், பழங்கள், அர்ச்சனைத் தட்டுகள், நெய் தீபங்களை விற்கும் சிறு கடைகள் என வரிசைகட்டி இருந்தன.




அந்தக் கடைகளில் ஒன்று, முருகவேலின் அப்பாவுடையது. மலை அடிவாரத்தில்தான் வீடு. முருகவேல், எட்டாம் வகுப்பு படிக்கிறான். பள்ளிக்கூட நேரம் போக, மற்ற நேரங்களில் கடையில்தான் இருப்பான்.

வரும் பக்தர்களின் வயதுக்கு ஏற்ப, அவர்களை முறை வைத்துக் கூப்பிடுவான். அவனைவிட வயதில் மூத்த பெண்களை 'அக்கா’ என்பான், மிகவும் படித்தவர்களாகத் தெரிந்தால், 'ஆன்ட்டி’ என ஆங்கிலத்தில் விளிப்பான். பெரியம்மா என்றும் சொல்வான். பாட்டி என்ற வார்த்தையை மட்டும் ரொம்ப ஜாக்கிரதையாகப் பயன்படுத்துவான். அது, நிறையப் பேருக்குப் பிடிப்பது இல்லை என்பதை முருகவேல் அனுபவத்தில் அறிந்து இருந்தான்.

அன்று மாலை கடையில் இருந்தான். அப்பா வெளியே சென்று இருந்தார். அம்மா மட்டுமே இருந்தார். அவனது குட்டித் தங்கை பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தாள்.

பெண்கள் கூட்டம் வந்தது. "வாங்கம்மா வாங்க. அர்ச்சனைத் தட்டு வாங்கிட்டுப் போங்க. அம்மனுக்கு சாத்த ரோஜா மாலை இருக்கு. செருப்புகளை இங்கேயே விட்டுட்டுப் போங்கம்மா" என்றான் உற்சாகமான குரலில்.

அம்மா முகத்தில் வழக்கமாக இருக்கும் உற்சாகம் இல்லை. "என்னம்மா உடம்பு சரியில்லையா?" என்றான் முருகவேல்.

அம்மா ஏதோ நினைவாக இருந்தார். அவன் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை.முருகவேல், அம்மாவின் தோளைத் தொட்டு "என்னம்மா ஆச்சு?" என்று பரிவுடன் கேட்டான்.

"இங்கே இருக்கிற கடைகளை எல்லாம் காலி பண்ணச் சொல்லி நோட்டீஸ் வந்திருக்கு. என்ன பண்றதுனு தெரியலே..." என்றாள் அம்மா. அவள் குரல் வேதனையின் காரணமாக, கிணற்றில் இருந்து கேட்பது போல பலவீனமாக ஒலித்தது.

அவன் அப்பா வந்ததும் விசாரித்தான். "நடைபாதைக் கடைகளை அப்புறப்படுத்தச் சொல்லி, கோயில் நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்து இருக்கு. இது அவங்க இடம். நாம காலி பண்ணித்தான் ஆகணும். நமக்கு இதை விட்டா, வேறு எதுவும் தெரியாது. என்ன செய்றதுனு பார்ப்போம்..." என்று 'உச்’ கொட்டினார்.

அன்று இரவு முழுவதும் அப்பா தூங்காமல் புரண்டுகொண்டு இருப்பதை முருகவேல் கவனித்தான். என்ன செய்வது என்று அவனுக்கும் புரியவில்லை.

கடவுள் ஒரு கதவை மூடினால், மற்றொரு ஜன்னலைத் திறப்பார் என்று ஆசிரியர் சொன்னது நினைவுக்கு வந்து, ஆறுதல் தந்தது. நீண்ட நேரம் கழித்து, அவனை அறியாமல் தூங்கிப்போனான்.

மறுநாள்... கடைக்காரர்கள் ஆங்காங்கே கூட்டமாக நின்று பேசிக்கொண்டு இருந்தனர். பலர், சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்தார்கள். பலர், கடைகளைக் காலி செய்யும் வேலையில் இறங்கி இருந்தனர். வேறு சிலர், குழப்பத்தோடு சுற்றிச் சுற்றி வந்தனர்.

சொந்த இடம் இருப்பவர்கள், தங்கள் கடைகளை அங்கே மாற்றிக்கொண்டனர். சொத்தும், இடமும் இல்லாத முருகவேலின் குடும்பம் புரியாமல் தவித்தது.

முருகவேல் தன் தமிழ் ஆசிரியரைச் சந்தித்து நெருக்கடியைத் தெரிவித்தான்.

"கவலைப்படாதே,! தேவைதான் மனிதனின் தாய். பாம்பின் விஷம் மரணத்தைத் தரும், ஆனால், அதே பாம்பின் விஷம் அதற்கு முறிவு மருந்தாகவும் இருக்கு. வாழ்க்கையிலும் பல விஷயங்கள் அப்படித்தான். வழக்கமான பாதையிலேயே போகாமல், மாத்தி யோசி. எங்கே பிரச்னை இருக்கிறதோ, அங்கேயே தீர்வும் இருக்கும்" என்றார்.

இரண்டு நாட்கள் கழிந்தன. மாலை நேரம், "நான் கோயிலுக்குப் போயிட்டு வர்றேன்" என்று சொல்லிவிட்டு, முருகவேல் சென்றான்.

திரும்பி வரும் வழியில், ஒரு கிளை வழி பிரிந்தது. அந்த வழியிலும் சில சிறுவர்களும் பெரியவர்களும் சென்றனர். அந்த வழியின் கடைசியில் ஒரு மான் பண்ணை இருந்தது. அங்கே குரங்குகளும், மான்களும், முயல்களும் வளர்க்கப்படுகின்றன. மயில், வான்கோழி போன்ற பறவைகளும் கூண்டுகளில் பாதுகாக்கப்படுகின்றன.

கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும் மக்கள், அந்த மான் பண்ணைக்கும் போவது வழக்கம். அவனும் அன்று மான் பண்ணைக்குப் போனான். ஆர்வம் இல்லாமல் விலங்குகளையும் பறவை களையும் பார்த்துக்கொண்டு இருந்தான்.

கம்பி வலைக்கு உள்ளே இருந்த மான்களை சிறுவர், சிறுமியர் கூட்டம் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தது.

அப்பொழுது ஒரு சிறுமி, "இந்த மானுக்கு நான் சாக்லேட் கொடுக்கட்டுமா?" என்று தன் அம்மாவிடம் கேட்டாள்.

"அதுக்கு சாக்லேட் கொடுக்கக் கூடாது. கேரட், முள்ளங்கி மாதிரி கொடுக்கலாம்" என்றாள்.

"இங்கேதான் காய்கறிக் கடையே இல்லையே, நாம் வீட்டில் இருந்து கொண்டு வந்தால்தான்..." என்ற சிறுமியின் குரலில் வருத்தம் கலந்த ஏமாற்றம்.

'பளீர்’ என்று மின்னல் வெட்டியதைப் போல ஒரு எண்ணம் முருகவேலின் மனதிற்குள் வந்தது. வீட்டை நோக்கி ஓடினான்.

"அப்பா, படிக்கட்டில்தானே கடை போடக் கூடாது? வேறு எங்காவது போடலாமா?" என்றான் முருகவேல் பரபரப்பாக.

அவன் கேட்பதைப் புரிந்துகொண்ட அப்பா, "வேற எங்கே போடுறது? இங்கேதான் ஜனங்க வருவாங்க. அவங்க வந்தாதான் வியாபாரம்" என்றார் விரக்தியாக.

அப்பா, மான் பண்ணைக்குப் போகிற வழியில் கடைபோட அனுமதி தருவாங்களானு கேட்டுப் பாருங்களேன்" என்றான் முருகவேல்.

"அங்கே அர்ச்சனைத் தட்டும், படங்களும் விற்க முடியுமாடா கிறுக்குப் பயலே" என்றாள் அம்மா.

"ஏன் அதையே விற்கணும்? இதுநாள் வரை மனுசங்களுக்குத் தேவையானதை விற்றோம். இனி விலங்குகள், பறவைகளுக்குத் தேவையானதை விற்போம். அப்பா, அந்த இடத்திலே ஒரு கடை போட்டால், மான் பண்ணைக்கு வருகிறவர்கள்... முள்ளங்கி, காரட், தக்காளின்னு வாங்கி விலங்குகளுக்குக் கொடுப்பாங்க. இதனால், விலங்குகளுக்குத் தேவையான தீனி கிடைச்சுடும். நமக்கும் வருமானம் வரும். நீங்க போயி அனுமதி கேட்டுப்பாருங்க" என்றான்.

அப்பா யோசனையுடனே சென்றார். அரை மணி நேரம் கழித்துத் திரும்பியபோது, அவர் முகத்தில் மலர்ச்சி. "முருகா! அவங்க மான் பண்ணை அருகே காய்கறிக் கடை போட சம்மதம் தந்துட்டாங்க. நல்ல ஐடியா கொடுத்தேப்பா..." என்று சொல்லி, முருகவேலை தூக்க முடியாமல் கைகளில் தூக்கிக்கொண்டு கொஞ்சினார்.

அதைப் பார்த்து குட்டித் தங்கைகூட சிரித்தாள். "அப்பா... நான் குழந்தை இல்லை. எட்டாவது படிக்கிறேன்" என்று சொன்ன முருகவேலுக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்த போதிலும் முகத்தில் பெருமை பொங்கியது.

கருத்துரையிடுக Disqus

 
Top