அலகாபாத்: உத்திரபிரதேச மாநிலத்தில் ஜாமினில் வெளியே வந்த ஆளும் கட்சி எம்.எல்.ஏ., ஒருவர் போலீசாருக்கு பணம் கொடுத்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த விஜய்மிஸ்ரா, ஞான்பூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்வானார். இவர் மீது, 62 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கடந்த 2010-ம் ஆண்டு பகுஜன்சமாஜ் கட்சியின் முன்னாள் அமைச்சர் நந்தகோபால் நந்தி என்பவர் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் முதல் குற்றவாளியாக உள்ளார்.
இது தொடர்பாக விஜய்மிஸ்ரா கைது செய்யப்பட்டு கடந்த 17 மாதங்களாக நைனி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமினில் நேற்று விடுதலையானார். அப்போது சிறையை விட்டு வெளியே வந்த போது, சிறை வாளாகத்திலேயே போலீசார் சிலருக்கு ரூ.500 நோட்டுக்களை வழங்கினார்.இக்காட்சி சிறை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு (சி.சி.டி.வி.) கேமிராவில் பதிவானது. இதைத்தொடர்ந்து பணம் வாங்கிய மூன்று போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.இது குறித்து எம்.எல்.ஏ.வின் மகள் சீமா கூறுகையில், எனது தந்தை ஜாமினில் வெளியே வந்தார். அப்போது அங்கிருந்த சில போலீசார் , ஸ்வீட் எதுவும் கிடையாதா என எம்.எல்.ஏ.விடம் கேட்டனர். கைவசம் ஸ்வீட் கொண்டுவரவில்லை. பணம்தான் இருந்தது ஸ்வீட்டிற்கு பதிலாக பணம் கொடுத்தோம் இதில் என்ன தவறு என கூறினார்.
கருத்துரையிடுக Facebook Disqus