அமெரிக்கா லாஸ் ஏஞ்சலெஸில் எடுக்கப்பட்ட போட்டோ இது. பேங்க் கொள்ளையர்கள் தப்பி ஓடுகையில், ஓடும் வாகனத்தில் இருந்து பணத்தை வீசியெறியும் காட்சி இது. பின்னால் துரத்திய போலீஸை தடுக்க கொள்ளையர்கள் செய்த தந்திரம் இது. (பணத்தை எடுக்க மக்கள் வீதிக்கு வருவார்கள். ட்ராஃபிக் ஜாம் ஆகும். போலீஸ் பின்தொடர முடியாது)
ஆனால், லாஸ் ஏஞ்சலெஸில் போலீஸென்ன நம்ம ‘ராமஜெயம் கேஸ்’ திருச்சி போலீஸா? கொள்ளையரின் காருக்கு முன்னே பிக்-அப் ட்ரக்குகளை நிறுத்தி, மறித்து, கொள்ளையரை பிடித்து விட்டார்கள்.


வீதியில் வீசப்பட்ட பணத்தின் பெரும்பகுதி, அப்படியே மக்களின் பாக்கெட்டுகளுக்குள் போய்விட்டது.
 

தொலைத் தொடர்பு சாதனங்கள் வந்துவிட்ட இந்த நாட்களிலும், மியன்மாரில், பப்ளிக் போன் பூத்துகள் இயங்குகின்றன.

காரணம், செல்போன்களுக்கு எப்போதாவதுதான் சிக்னல் கிடைக்கும். பாதி பேசிக்கொண்டு இருக்கையில் ஜாம் பண்ணப்பட்டுவிடும்! அரசு ஒரு ‘காரணமாகவே’ நிலைமையை அவ்வாறு வைத்திருக்கிறது.

லேன்ட்-லைன்களை மட்டுமே ஒட்டுக்கேட்கும் வசதி அவர்களிடம் உள்ளதே, அந்த காரணம்!

ஆப்கானிஸ்தான், கந்தஹார் நகரில் எடுக்கப்பட்ட போட்டோ இது. தமது முகாம் அமைந்துள்ள அடத்தருகே வசிக்கும் குழந்தைகளுடன் திராட்சையை பகிர்ந்து கொள்பவர், அமெரிக்க ராணுவத்தின் டெல்டா கோய் 1-ம் பிளாட்டூன் படைப்பிரிவை சேர்ந்த ஒருவர்.

தற்போது அங்குள்ள நிலையில், இவர் இப்படி வெளியே நின்றால், எந்த நேரத்திலும் கொல்லப்படலாம். அப்படி நடந்தும் உள்ளது!


 

தென் சூடானின் ஜூபா பகுதியில் எடுக்கப்பட்ட போட்டோ இது. அங்குள்ளவர்களின் வாழ்க்கையை இந்த போட்டோவைவிட தெளிவாக யாராலும் எடுத்துக்காட்ட முடியாது. போட்டோவில் ஒரு சிறுமி, தன்னைவிட இளையவர்களான சகோதரன் மற்றும் சகோதரிக்கு காலை உணவாக கஞ்சி தயாரிக்கிறார்!

தென் சூடானும், சூடானும் தமக்கிடையே யுத்தம் புரிய மில்லியன் கணக்கில் பணம் செலவு செய்கிறார்கள். எண்ணை வளம் உள்ள இந்த நாட்டில், யுத்தம் காரணமாக எண்ணை எடுத்து சுத்திகரிக்கும் ஆலைகள் சரியாக இயங்குவதில்லை! அதனால், எண்ணை ஏற்றுமதி மூலம் கிடைக்க வேண்டிய பணம் கிடைப்பதில்லை.

தென் சூடானும், சூடானும் ஒரே நாடாக இருந்து, சமீபத்தில் பிரிந்தவை!

 

13-09-2012 காலை அமெரிக்கா, சிக்காகோ நகர பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் செய்தபோது எடுக்கப்பட்ட போட்டோ இது. மொத்தம் 26,000 ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 4 லட்சம் குழந்தைகளின் வகுப்புகள் நடக்கவில்லை. சிக்காகோ நகர ஸ்கூல் சிஸ்டம்தான் அமெரிக்காவில் 3-வது பெரிய ஸ்கூல் சிஸ்டம்.

நம்மூரில் நடக்கும் வேலைநிறுத்தம் போல கட்சிக் கொடி (கட்சி தொழிற்சங்கம்) ஏதுமில்லை பார்த்தீர்களா?

சிலி, சான்டியாகோ நகரில் எடுக்கப்பட்ட போட்டோ இது. சால்வடோர் அலன்தே மரணமடைந்த 39-வது நினைவு தினத்தை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் செய்பவர்களை, மிரட்டி கலைப்பதற்காக தாக்குதல் நடத்தும், கலவர போலீஸார்!

அமெரிக்கா தமது இரு போர்க்கப்பல்களை லிபியாவுக்கு அவசரமாக அனுப்புகிறது. பென்காசியில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டு, தூதரும் கொல்லப்பட்டதன் எதிரொலி இது.

போட்டோவில் உள்ளது, அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான USS McFaul. இது தற்போது, அரபிக்கடலை கடந்து கொண்டிருக்கிறது.

பிரேசில், ரியோ-டி-ஜெனிரோ நகரில் எடுக்கப்பட்ட போட்டோ. போதைப் பொருளுக்கு அடிமையான இளம் வயதினரை மீட்கும் நடவடிக்கை இது.
போதைப்பொருள் மயக்கத்தில் பிளாட்பாரத்தில் படுத்துள்ள இளம் வயதினர் ஒருவரை மீட்குமுன், அந்த ஏரியா பாதுகாப்பானதாக உள்ளதா என்று போலீஸ்காரர் ஒருவர் நோட்டமிடும் காட்சி இது.

 

தென்னாபிரிக்காவின் வடமேற்கு மாகாணத்தில் ஆவேசமான போராட்டக்காரர்களை போலீஸ் பின்தொடரும் காட்சி இது. இவர்கள், ஆங்கிலோ அமெரிக்கன் சுரங்க தொழிலாளர்கள். இவர்கள் வேலை நிறுத்தம் செய்வதால், உலகில் பிளாட்டினம் சுரங்கத் தொழிலின் மிகப்பெரிய நிறுவனமான ஆங்கிலோ அமெரிக்கன் தத்தளிக்கிறது.

இரு தரப்பும் நீண்ட நாட்களாக முடிவு எட்டப்படாத பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றன. தொழிலாளர் போராட்டம், தற்போது வன்முறை பாதையில் திரும்ப தொடங்கியுள்ளது.
 

பூனையை ஆனை போட்டோ எடுத்ததுபோல, பலபேர் சேர்ந்து சின்னஞ்சிறு பொருள் ஒன்றை போட்டோ எடுக்கும் இந்த போட்டோ, அமெரிக்கா, சான் பிரான்சிஸ்கோவில் எடுக்கப்பட்டது.

ஆப்பிளின் புதிய ஐ-போன் அறிமுகத்தின்போது, மீடியா போட்டோகிராஃபர்கள் ஐ போனை போட்டோ எடுக்கும் காட்சி இது.

இங்கிலாந்தின் மத்திய பகுதியில், லெய்செஸ்டர் பகுதியில், அகழ்வாராட்சிக்காக வெட்டப்பட்ட குழி ஒன்றினுள் நிற்பவர், அகழ்வு ஆராட்சியாளர் மேத்யூ மாரிஸ்.  இங்கு இவர் கண்டுபிடித்திருப்பதாக கூறப்படுவது சுவாரசியமான விஷயம்.

இங்கு பிரிட்டிஷ் மன்னர் ரிச்சார்டு-III யின் எலும்புகளை கண்டெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

யுத்தம் நடைபெற்றபோது, இறந்துபோன இந்த மன்னரின் உடல் கிடைத்ததா? அதை யாரோ எங்கோ புதைத்தனரா என்பது தொடர்பான 500 வருட மர்மத்துக்கு இந்த எலும்புகள் விடை சொல்லும் என்கிறார்கள், லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி துறையினர்.

500 வருடங்களுக்கு முன் மன்னரின் உடல் புதைக்கப்பட்டதாக இவர்கள் குறிப்பிடும் இடத்தில் இப்போது, லெய்செஸ்டர் சிட்டி சென்டரின் பார்க்கிங் லாட் உள்ளது.

சோமாலியா, மொகாதிசு நகரில், எடுக்கப்பட்ட போட்டோ இது. சுட்டுக் கொல்லப்பட்ட போராளி ஒருவரின் உடலை கடந்து செல்வது, ஆபிரிக்க யூனியன் ராணுவப் படையின் ட்ரக்.

ஜசீரா பேலஸ் ஹோட்டலில் அல்-சபாப் போராளி அமைப்பு நடத்திய குண்டுவெடிப்பு ஒன்றன் பின்னர், ஆபிரிக்க யூனியன் ராணுவம் வந்து குண்டு வெடிப்பை நடத்தியவர்களை சுட்டது. அப்போது இந்த போராளி கொல்லப்பட்டார். இவர் இறப்பதற்கு முன், ஜசீரா பேலஸில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்தார்.

ஆனால், இவர் குறி வைத்த நபர்கள், அந்த குண்டுவெடிப்பில் இறக்கவில்லை.
குண்டு வெடிக்க வைக்கப்பட்ட நேரத்தில், சோமாலியா ஜனாதிபதி, கென்யா நாட்டு வெளியுறவு அமைச்சரை இந்த ஹோட்டலில் சந்திப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர்கள் இடத்தை மாற்றிவிட்டார்கள். அது தெரியாமல், இவர் குண்டை வெடிக்க வைத்து, தாமும் கொல்லப்பட்டார்.

ஹெய்தி, போர்ட்-அவ்-பிரின்ஸில் எடுக்கப்பட்ட போட்டோ இது. வெடி வைத்து தகர்க்கப்படுவது, தேசிய அரண்மனை! கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் இங்கு ஏற்பட்ட பூகம்பத்தில் இந்த அரண்மனை சேதமடைந்திருந்தது. அதை செப்பனிடும் பணிகள் செய்யப்பட்டு வந்தது.
ஆனால், எப்படி செய்தாலும், பழைய பொலிவு திரும்பவில்லை என்பதால், அரண்மனையை முற்றாக தகர்த்துவிட்டு, புதிதாக அமைப்பது என முடிவு எடுக்கப்பட்டது.

அதையடுத்து, வெள்ளிக்கிழமை அரண்மனை வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இனி புதிதாக கட்டடம் கட்ட வேண்டும். (ஆமா.. புதிய அரண்மனைக்கு கிரானைட் கற்கள் எங்கிருந்து வருகின்றனவாம்?.. சும்மா தெரிந்து கொள்ள கேட்கிறோம்)

யம்மோவ்.. புலியை முறத்தால் அடித்து விரட்டிய புறநாநூறு வீரப் பெண்ணின் மறு அவதாரமா?

குவாத்தமாலா, டாக்டிக் நகரில் எடுக்கப்பட்ட போட்டோ இது. நான்கு பேர், அங்குள்ள பள்ளி ஒன்றுக்குள் திருடுவதற்காக புகுந்து, வகுப்பறையில் இருந்த இரு மாணவர்களை கொன்றுவிட்டு வெளியே வரும்போது, கொலைகாரர்களை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள், தாமே தண்டனையும் கொடுத்தார்கள்.

இந்தப் பெண், கொலைகாரர்களில் ஒருவரை சிசர்ஸ் ஒன்றால் குத்தும்போது எடுக்கப்பட்ட போட்டோ இது. கூட்டத்துக்குள் போலீஸூம் (கருப்பு யூனிபார்ம்) இருப்பதை கவனியுங்கள்.

பாகிஸ்தான், கராச்சி நகரில் எடுக்கப்பட்ட போட்டோ இது. கார்மென்ட் தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டு 289 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை நீங்கள் நேற்று பார்த்திருப்பீர்கள்.

இதுதான் அந்த தொழிற்சாலை. தீ அணைக்கப்பட்டபின், தொழிற்சாலையை பார்வையிடும் மக்கள்!

ஏற்கனவே நீங்கள் பார்த்த சிக்காகோ நகர பள்ளி ஆசிரியர்களின் ஸ்ட்ரைக்கின் போது எடுக்கப்பட்ட மற்றொரு போட்டோ. வேலை நிறுத்தத்தில் குதித்த ஆசிரியைகளுக்கு ஆதரவாக, மாணவிகள் சிலரும் கலந்து கொண்டார்கள்.

இதில் ஒரு ஆசிரியையும், ஒரு மாணவிகளையும் பாருங்கள். ஒரு மாணவி, தனது பிறந்த நாளிலும் பேவாராட்டத்தில் கலந்து கொள்வதாக அறிவிப்பு எழுதிக்கொண்டு வந்திருக்கிறார்!

பிலிப்பின்ஸ், தாகிக் சிட்டியில் எடுக்கப்பட்ட வித்தியாசமான போட்டோ இது. மோட்டை போட்டு வரிசையாக இருப்பவர்களை விடுங்கள். அவர்கள் ஆண்கள். தற்போது தலையை கொடுத்துவிட்டு அமர்ந்திருக்கும் மூவரையும் கவனித்துப் பாருங்கள்… அவர்கள் பெண்கள்!

என்னங்க கொடுமை இது? ஒருவேளை அ.தி.மு.க.-வின் பிலிப்பீன்ஸ் கிளையில், வேண்டுதலுக்காக மொட்டை போடுகிறார்களோ!

இது வேறு விவகாரம். பிலிப்பீன்ஸ் ராணுவத்துக்காக நேற்று (வியாழக்கிழமை) 300 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்களில் 270 ஆண்கள், 30 பெண்கள் அனைவருக்கும், தேர்வு முடிந்த உடனேயே ராணுவப் பயிற்சிக்காக மொட்டை போடப்பட்டது. ராணுவத்தில் மொட்டை போடுவதில் பெண்களுக்கு விதிவிலக்கு ஏதும் கிடையாதாம்!
 
Top