கார்களை பற்றி நன்கு அறிந்த பலருக்கு வாழ்க்கையில் எப்போதாவது ஒரு தடவை supercar என்று சிலாகிக்கப்படும் ஆடம்பர கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது லட்சியம். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கோடீஸ்வர்கள் மற்றும் அவர்களது இளைய தலைமுறை வாரிசுகள், தமது பிரஸ்டீஜை காட்டிக்கொள்ள செய்யும் காரியம், இப்போதெல்லாம் ஒரு லம்போர்கினி (Lamborghin) கார் வாங்கிக் கொள்வதுதான்.

போஷ், ரோல்ஸ் ராய்ஸ், அல்லது ஃபெராரி கார்களைவிட இப்போதெல்லாம் கிரேஸ் லம்போகினிதான்.

கனடாவில் விலை சுமாராக 1.4 மில்லியன் டாலர்கள். ஐரோப்பாவில் சற்று குறைவாக இருக்கலாம். இந்தியாவில் அடக்க விலை சுமார் 8 கோடி ரூபா. அமைச்சரின் உறவினராக இல்லாவிட்டால், எவ்வளவு இறக்குமதிவரி கட்ட வேண்டும் என்பதை சுங்க இலாகாவில் விசாரித்து தெரிந்து கொள்ளவும்.
இந்த லம்போகினி காரை, தமது வீட்டில் வைத்து தயாரித்திருக்கிறார் சீன விவசாயி ஒருவரின் மகன்! லம்போகினியின் பளபளப்பு இல்லை. ஆனால், அதன் வேகத்தை (மணிக்கு 210 கி.மீ.) இதுவும் எட்டிப் பிடிக்கிறது.

1.4 மில்லியன் டாலர் காரை தயாரிக்க வெறும் 6,000 டாலர் செலவாகியுள்ளது.
கீழேயுள்ளதுதான், சீன விவசாயி வீட்டில் தயாரிக்கப்பட்ட கார். நிஜ லம்போகினியை காண அடுத்த போட்டோவுக்கு வாருங்கள்.


 

கீழேயுள்ள போட்டோதான் நிஜ லம்போகினி. டீலரிடம் போனாமோ, ஷோகேஸில் பார்த்தோமா, பணத்தைக் கொடுத்து எடுத்து வந்தோமா என்று வாங்க முடியாது. பணம் இருந்தாலும் புக் பண்ணி, காத்திருந்துதான் வாங்க முடியும். நீங்கள் வி.ஐ.பி.யாகவோ அதிஷ்டசாலியாகவோ இல்லாவிட்டால், ர்டர் கொடுத்த பின்னர்தான் தயாரிக்கவே தொடங்குவார்கள்.
 

சீன வீட்டுத் தயாரிப்பு லம்போகினியை உருவாக்கியவரின் பெயர், வாங் ஜியான். சீனாவின் ஜியாங்சூ மாகாணத்தில் உள்ள சிறிய கிராமத்தில் வசிக்கிறார். 24 மணி நேரமும் கார்களே சிந்தனையான கார் வெறியர். பழைய நிஸான் சென்ட்ரா மற்றும், வோக்ஸ்வாகன் ஜெட்டா கார்களின் பாகங்களை வைத்து தமது லம்போகினியை தயாரித்ததாக கூறுகிறார். அதன் எந்திரத்தை இவர் ட்யூன் செய்திருக்கிறார். அதுதான் இந்த வேகம்.
 

தயாரித்தபின் காரை டெஸ்ட் டிரைவ் செய்தபோது, லம்போகினி தமது விளம்பரங்களில் குறிப்பிடும் அதிகபட்ச மணிக்கு 210 கி.மீ. வேகத்தை இந்த காரும் கொடுத்தது. உச்ச வேகத்துக்கு செல்லும்போது, காரின் பாகங்கள் லேசாக உதறுவதாக குறிப்பிடும் வாங் ஜியான், சில பாகங்கள் நட்டினால் பொருத்தப்படுவதைவிட வெல்டிங் செய்ய வேண்டும் என்கிறார். வெல்டிங் வேலைகள் முடிந்து விட்டால், அதி வேகத்தில் உதறாதாம்.
 

தமது காரில் வீதிகளில் செல்லும்போது, பொதுமக்கள் மிக ஆச்சரியத்துடன் பார்ப்பதாக கூறும் வாங் ஜியான், “அதில் எத்தனை பேருக்கு இந்த கார் லம்போகினியின் நகல் என்பது தெரியுமோ என்பது தெரியாது. அதிகம் பேர் தெரிந்துகொள்ள சான்ஸ் இல்லை. சரியாக தயாரிக்கப்படாத கார் ஒன்றில் ஒருவர் போகிறார் என்றே வேடிக்கை பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்” என்கிறார்.
 

இந்த கார் 2007-ம் ஆண்டு மாடலான Lamborghini Reventon போட்டோ ஒன்றைப் பார்த்து தயாரிக்கப்பட்டது. இந்த மாடல் உலகம் முழுவதிலும் வெறும் 27 கார்களே தயாரிக்கப்பட்டன. 28-வது காரை வைத்திருக்கும் வாங் ஜியான், நிஜமான லம்போகினிக்கு அருகே சென்றுகூட பார்த்ததில்லை. அவர் வசிக்கும் மாகாணத்தில் யாரிடமும் லம்போகினி கார் கிடையாது. சீனாவிலேயே 240 லம்போகினி கார்கள்தான் உள்ளன, அனைத்து மாடல்களிலும் சேர்த்து!

 
Top