நைகர் நாட்டின் ஹொகான்டகி நகரில் எடுக்கப்பட்ட போட்டோ இது. பின்தங்கிய கிராமம் இது. இந்த பெண்கள் ஆர்வத்துடன் பார்க்கும் நபர் ஒரு மாப்பிள்ளை! ஆம், மாப்பிள்ளையேதான்! நைகர் நாட்டில் திருமணம் செய்ய பெண்களுக்கான வயது எல்லை 15.
வேறு கிராமத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை ஒருவர் இந்த கிராமத்தில் உள்ள 15 வயது பெண்ணை திருமணம் செய்ய வந்தபோது, மணப்பெண்ணின் ஸ்கூல் தோழிகள், மாப்பிள்ளையை பார்க்கும் காட்சி இது. மாப்பிள்ளைக்கு வயது 36.
சீனா, ஷென்ஸென் பகுதியில் எடுக்கப்பட்ட போட்டோ இது. சீனக் கொடியை போர்த்தியுள்ள போராட்டக்காரர் ஒருவர் கண்களைக் கசக்குவது, கண்ணீர்ப்புகை எரிச்சல் தாங்காமல்!
நேற்று சீனா முழுவதும் ஜப்பானுக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. தமக்கு சொந்தமான தீவு ஒன்றை ஜப்பான் கவர்ந்து விட்டது என்பது இவர்களது கட்சி. ஜப்பானோ, தீவு தம்முடையது, தாம் விலை கொடுத்து வாங்கி விட்டோம் என்கிறது! இழுபறி நீடிக்கிறது. (மேலதிக விபரங்கள் தெரிய வேண்டுமென்றால், இது தொடர்பாக நாம் வெளியிட்ட செய்தியை பார்க்கவும்)
ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் எடுக்கப்பட்ட போட்டோ இது. சிட்னி ஹார்பர் பிரிஜ்ஜில் ஸ்பைடர் மேன் வேஷத்தில் ஓடும் நபர், நேற்று சிட்னியில் நடந்த ஓட்ட திருவிழாவில் (Sydney Running Festival)
சினிமாவில் எப்போதும் வெற்றியே பெறும் ஸ்பைடர் மேல், சிட்னி ஓட்டப்போட்டியில் முதல் மூன்று இடங்களுக்குள் வரவில்லை என்பதுதான் சோகம்!
குவாத்தமாலா நாட்டின், குவாத்தமாலா சிட்டியில் எடுக்கப்பட்ட போட்டோ இது. நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த 191-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் நேற்று நடைபெற்றன. அதில் கலந்துகொண்ட மாறுவேடமிட்ட மாணவர்கள் சிலர் போட்டோவில் கிளிக் ஆகியுள்ளனர்.
கியூபா, ஹவானா நகரில் எடுக்கப்பட்ட போட்டோ இது. பிரைவேட் டாக்ஸி டிரைவர் ஒருவர் தமது டாக்ஸியை மழைக்குள் ஓட்டிச் செல்லும் காட்சி இது.
கம்யூனிச நாடான கியூபாவில் 1980-களுக்கு பின் பிரைவேட்டாக டாக்சி வைத்திருக்க லைசென்ஸ் வழங்கப்படுவதில்லை. முன்பு வழங்கப்பட்ட டாக்சிகள்தான் இன்னமும் ரோடில் ஓடுகின்றன. போட்டோவில் உள்ள டாக்சியின் தோற்றத்தில் இருந்து அதன் வயதை ஊகித்துக் கொள்ளுங்கள்.
தென்னாபிரிக்கா, மெரிக்கானா நகரில் பிளாட்டின சுரங்க தொழிலாளிகள் போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட போட்டோ இது. போராட்டக்காரரின் கண்களில் தெரியும் வெறுப்பையும், கையில் உள்ள கல்லையும் பாருங்கள். அவர் கண் வைத்திருப்பது, போலீஸ் மீது!
இந்த போராட்டத்தை கலைக்க போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர்! இப்போது புரிகிறதா வெறுப்பின் காரணம்?
திடீரென கடந்த நூற்றாண்டுக்கு சென்று விட்டோமா? இல்லை… இது நேற்று அமெரிக்கா, பூன்ஸ்பரோவில் (மேரிலேன்ட்) எடுக்கப்பட்ட போட்டோ! American civil war battle of Antietam 150-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் விதத்தில், அந்த நாளைய கெட்டப்பில் வந்த சிலர் போட்டோவில் உள்ளனர்.
குதிரைகள் ஓடி புழுதி கிளம்புவதால், போட்டோவில் ஒரு பழைய கால எஃபக்ட் கிடைத்திருக்கிறது!
அமெரிக்கா, செரியோட் (கலிபோர்னியா) நகரில் எடுக்கப்பட்ட இந்த போட்டோவில் முகத்தை மூடியபடி செல்பவர் யார் தெரிகிறதா? இன்று உலகமெங்கும் அமெரிக்காவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு காரணமான சினிமா படத்தின் டைரக்டர் Nakoula Basseley Nakoula இவர்தான்!
தாமே முன்வந்து, நேற்று அதிகாலை லாஸ் ஏஞ்சலஸ் போலீசாருடன் விசாரணைக்காக செல்லும்போது எடுக்கப்பட்ட போட்டோ இது. மேலதிக விபரங்களுக்கு இவரைப் பற்றிய எமது செய்திகளை பார்க்கவும்.
பிரிட்டன், லண்டனில் எடுக்கப்பட்ட போட்டோ இது. முன்னாள் சூப்பர் மாடல் போலா ஹமில்டன் தனது காரை வேகமாக செலுத்தி, பக்கத்து வீட்டுக்காரரின் காம்பவுன்டில் மோதியதில், அவருடைய முன் பல்லு உடைந்தது. அதுவாவது பரவாயில்லை, விசாரணைக்கு வந்த போலீஸ் அழைத்து வந்த போலீஸ் மோப்ப நாய் வேறு சூப்பர் மாடலை கடித்துவிட்டது!
சரி. ஏனாம் கண்மண் தெரியாமல் கார் ஓட்டினார்? சற்று அதிகமாகவே தீர்த்தம் சாப்பிட்டு விட்டார்! அதனால் இவரது பல்லு காரில் பட்டது. நாயின் பல்லு இவரில் பட்டது!
அமெரிக்க கடற்படையினர் அட்லான்டிக் கடலில் USS Philippine Sea கப்பலில் செய்த சடங்கு இது. இவர்கள் கிண்ணத்தில் ஒருவருடைய அஸ்தியை எடுத்து வந்து சமுத்திரத்தில் கரைக்கிறார்கள்.
அமெரிக்க கடற்படை கப்பலில் கொண்டுவந்து கரைக்கும் அளவுக்கு, அஸ்தி யாருடையது? நீல் ஆம்ஸ்ட்ராங்! சந்திரனில் காலடி வைத்த முதல் மனிதர்!!
இந்தியா, அலாகாபாத்தில் உள்ள ஜார்ஜ் டவுன் போலீஸ் ஸ்டேஷன் இது. இன்ஸ்பெக்டர் ஷேவ் எடுப்பதற்கு வீட்டுக்கு செல்ல முடியாமல் வெள்ளம் என்பதால், போலீஸ் ஸ்டேஷனில் காரியத்தை முடித்துக் கொள்கிறார்!
அட, லீவு போட்டுவிட்டு வீட்டில் இருக்காமல், ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறாரே.. அது பெரிய விஷயம் இல்லையா? (சம்சாரத்துடன் சண்டை?)
பாகிஸ்தான், ஜான்தூல் பகுதியில் எடுக்கப்பட்ட போட்டோ இது. ராணுவத்துக்கு அருகே குவித்து வைக்கப்பட்டுள்ளவை, பஸ் ஒன்றில் வந்த கிராமவாசிகள் அணிந்திருந்த காலணிகள். தலிபான்கள் வைத்த வீதியோர வெடிகுண்டில் கிராமவாசிகளின் பஸ் சிக்கியதில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பஸ்ஸில் வந்த 14 பேரும் கொல்லப்பட்டனர்.
எப்படி இருக்கிறது தீவிரவாதம்?
சிரியா, அலிபோ நகரில் எடுக்கப்பட்ட போட்டோ இது. குடும்பத் தலைவர் ஒருவர் கடைக்கு சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வீதியில் ஓடிச் செல்லும் காட்சி இது. வீதியின் இரு புறமும் இருந்து ஸ்னைப்பர் துப்பாக்கிகள் எந்த நிமிடமும் வெடிக்கலாம்.
அப்படி வெடித்தால், தமது குடும்பத்தினருக்கு பொருட்கள் வாங்க முயன்ற திருப்தியுடன் இந்த குடும்பத் தலைவர் உயிரை விட வேண்டியதுதான்!
எப்படி இருக்கிறது யுத்தம்?
பிரேசில், ரியோ-டி-ஜனிரோ நகரில் எடுக்கப்பட்ட போட்டோ இது. இந்த போலீஸ்காரர்கள் துப்பாக்கியுடன் பொசிஷன் எடுப்பது, தமது சக போலீஸ்காரர் ஒருவரை சுட்டுக் கொன்ற நபரின் வீட்டை முற்றுகையிடும்போது. இந்த பகுதியில் வைத்து ரோந்து சென்ற போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். கொலைகாரன் மறைந்திருக்கும் வீட்டை தெரிந்துகொண்டு முற்றுகையிட்டுள்ளனர் போலீஸ்.
இவ்வளவு ஆர்ப்பாட்டத்துக்கும் மத்தியில் ஹாயாக சிகரெட் குடிக்கும் பெண்மணியை பாருங்கள்!
பிரிட்டன், ஹரோகேட்டில் எடுக்கப்பட்ட போட்டோ இது. பீட்டர் கிளேஸ்ப்ரோக் தமது கையில் வைத்திருப்பது, சோதனை முயற்சியாக அவர் பயிரிட்ட வெங்காயம். ஒரு வெங்காயத்தின் எடை, 8.44 கிலோ! இது ஒரு உலக சாதனையாம்!!
உங்க வீட்டுக்காரி வெங்காயம் வாங்கிவர மார்க்கெட்டுக்கு அனுப்பி வைக்க, நீங்கள் இப்படியொரு வெங்காயத்துடன் திரும்பி வந்தால், சம்சாரம் என்ன சொல்வார்? “நீரு ஒரு வெங்காயம்” என்று சொல்ல மாட்டார்தானே!