அமெரிக்கா, சிக்காக்கோவில் எடுக்கப்பட்ட போட்டோ இது. பள்ளி ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்னமும் தொடர்கிறது. நேற்று (திங்கட்கிழமை) சிக்காக்கோ சி.பி.எஸ். தலைமையகத்துக்கு முன், ஸ்ட்ரைக் அறிவிப்பு பலகையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் ஒரு ஆசிரியை!
அட, அவங்க வேலை நிறுத்தத்தைகூட ஜாலியாகத்தான் பண்றாங்க!
 



பாகிஸ்தான், பின்-காசிம் நகரில் எடுக்கப்பட்ட போட்டோ இது. கராச்சியில் இருந்து 50 கி.மீ தென்மேற்கே உள்ள இந்த சிறு நகரத்தில், நேற்று (திங்கட்கிழமை) ட்ரெயின் விபத்து ஒன்று ஏற்பட்டது. மீட்புக் குழுவினர் வந்து சேர்வதற்கு முன், பின்-காசிம் நகரவாசிகளே, ட்ரெயினில் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் காட்சி.
இரு பாசஞ்சர் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில், விபத்து ஏற்பட்டது. இருவர் உயிரிழந்தனர்.


 

இந்தோனேசியா, ஜகார்த்தா நகரில் நேற்று எடுக்கப்பட்ட போட்டோ இது. கடந்த சனி, ஞாயிறு தினங்களில் இங்குள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்னால் நடைபெற்ற போராட்டங்கள், நேற்றும் தொடர்ந்தன. போராட்டக்காரர் ஒருவர் அமெரிக்க தூதரகத்தை நோக்கி கல் வீசுவதற்கு சில விநாடிகளுக்கு முன் போட்டோ எடுக்கப்பட்டது.

இந்த கல் போய் விழுந்த 5 நிமிடங்களில், போலீஸ் போராட்டக்காரர்களை நோக்கி கண்ணீர் புகைக் குண்டுகளை விசத் தொடங்கியது.

ஜப்பான், டோக்கியோ புறநகரப் பகுதியில் உள்ள யொகோடா ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட போட்டோ இது. விமானத்துக்கு அருகே நிற்பவர், லியோன் பனிட்டா, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்.

பனிட்டா தமது ஜப்பானிய விஜயத்தை மேற்கொள்ள சிறப்பு விமானத்தில் வந்து இறங்கி, அந்த இடத்திலேயே ராணுவத்தினரின் கேள்விகளுக்கு பதில் கொடுத்த காட்சி இது. விமானம் பார்க் பண்ணப்பட்ட இடத்தையே மேடையாக்கி விட்டார்கள், ஒரு மைக், இரு கொடிகளை வைத்து!

என்ன இருந்தாலும், நம்மாட்கள் அமெரிக்கர்களைவிட உசத்திதான்.
புரட்சித் தலைவி, கேப்டன் எல்லாம், வாகனத்தில் இருந்தபடியே பேசிவிட்டு போவார்கள். இந்த ஆள் விமானத்தில் இருந்து இறங்கி பேசுகிறார்!

பிரிட்டன், எப்சம் பகுதியில் எடுக்கப்பட்ட போட்டோ இது. நம்ம தமிழ் சினிமாவில் வரும் ஸ்டன்ட் காட்சிதான். ஆனால், சினிமா அல்ல, நிஜமாகவே நடந்தது. வெளியே பார்க் பண்ணப்பட்டு நின்றிருந்த அவுடி கார் ஒன்றில் வேகமாக வந்து மோதிய லெக்ஸஸ் கார், அப்படியே பறந்து, வீடு ஒன்றின் முதல் மாடியில் மோதியது!

பறந்த காரை செலுத்தியவர், மற்றும் அதில் இருந்த இரு பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்பது அடுத்த ஆச்சரியம்.

சீனா, பெய்ஜிங் நகர பார்க் ஒன்றில் எடுக்கப்பட்ட போட்டோ. சீன பிரதமர் வென் ஜியாபோ, “உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் எமது நாட்டில் உள்ளது. எந்தவொரு மேலைநாட்டு பொருளாதாரத்துக்கும் எம்மால் சவால் விட முடியும்” என்று கூறியிருக்கிறார்.

இந்த முதியவர், பார்க்கில் இசைக்கருவி வாசித்து பணம் கேட்கிறார்!
மேலைநாட்டு பொருளாதாரத்துக்கு சவால் விடுவது இருக்கட்டும், முதலில் மேலை நாடுகளில் உள்ள முதியோருக்கான இல்லங்களையும், அவற்றில் செய்து கொடுக்கப்படும் வசதிகளையும் ஒருமுறை பார்த்துவிட்டு வாருங்கள் பிரதமரே!

ஸ்பெயின், மெட்ரிட் நகர அடோசா ரயில்வே ஸ்டேஷனில் எடுக்கப்பட்ட போட்டோ இது. நேற்றும், இன்றும் ஸ்பெயினில் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடக்கிறது.

அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க (நேற்று கொஞ்சம் அப்படியிப்படி ரகளையாகி விட்டது) இன்று அதிகாலை, எல்லா ரயில்வே ஸ்டேஷன்களிலும், கலவர போலீஸை இறக்கி விட்டுள்ளார்கள். திகைத்துப் போய் நிற்கும் பயணியை பாருங்கள்! என்ன நடக்கிறது என்று நியூஸ் பார்க்காமல் ரயில் ஏற வந்திருப்பாரோ!

சரி. நேற்று ‘கொஞ்சம் அசம்பாவிதம்’ ஏற்பட்டு விட்டது என்றோமே, அடுத்த போட்டோவில் அதையும் பாருங்கள்.
 

முதல் போட்டோவில் நீங்கள் பார்த்த அதே அடோசா ரயில்வே ஸ்டேஷனில் நேற்று எடுக்கப்பட்ட போட்டோ இது. நேற்று கலவர போலீஸ் வரவில்லை, நம்ம திருச்சி பாலக்கரை போலீஸ் போன்ற சாதா போலீஸ்தான் பாதுகாப்புக்கு நின்றது. வேலைநிறுத்தம் செய்தவர்கள் புகுந்து விளையாடி விட்டார்கள்.

அதையடுத்து, நேற்று நின்ற போலீஸை ராமஜெயம் கொலைவழக்கு போன்ற எதுவும் கண்டுபிடிக்க தேவையற்ற கேஸ்களுக்கு அனுப்பிவிட்டு, கலவர போலீஸை இன்று காவலுக்கு விட்டுள்ளார்கள்.

பிரான்ஸ், பாரிஸ் எலீசி அரண்மனையில் எடுக்கப்பட்ட போட்டோ இது. ஒட்டகச் சிவிங்கிகள் மத்தியில் அகப்பட்ட முயல்குட்டி போல நிற்பவரை தெரிகிறதா? பிரான்ஸின் புதிய ஜனாதிபதி, Francois Hollande.
லண்டன் ஒலிம்பிக்ஸில் கலந்துகொண்ட பிரெஞ்ச் ஹான்ட்பால் டீமை ஜனாதிபதி நேற்று அழைத்து சந்தித்தபோது, எடுக்கப்பட்ட போட்டோ இது.
நம்ம அனுஷ்காவுடன் நடிக்கும்போது, சில ஹீரோக்கள் ஸ்டூலில் ஏறி நின்று குளோஸ்-அப் காட்சிகளில் நடிப்பார்களே… அந்த டெக்னிக் இவர்களுக்கு தெரியாதா?

ஆஸ்திரேலியா, அலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) தோன்றிய fire tornado இது. மிக அரிதாகவே ஏற்படும் இதை தீ பிசாசு (fire devil) என்றும் அழைப்பார்கள். நேற்று இதை நேரில் கண்டவர்கள், “போர் விமானம் ஒன்று எழுப்பும் ஒலி போல கேட்டது. திடீரென வானத்துக்கும் பூமிக்குமான நெருப்பு கீற்று உருவானது” என்கிறார்கள்.

இரண்டு அல்லது மூன்று நிமிடத்துக்கு மேல் fire tornado நீடிக்கவில்லை. அதற்குள் கிளிக் செய்யப்பட்ட போட்டோ இது.

மியன்மார், யாங்கூனில் நகருக்கு வெளியே சிறிய போர்ட் ஒன்றுக்கான கட்டுமான வேலை நடைபெறும் இடத்தில் எடுக்கப்பட்ட போட்டோ இது. வேலை ஆரம்பிக்கும் முன், தமது காலை உணவை முடித்துக் கொள்கிறார் தொழிலாளி ஒருவர்.

லெபனான், பெய்ரூட்டில் ஹிஸ்பொல்லா ஆதரவு பெண் ஒருவர், தமது நண்பியை அமெரிக்காவுக்கு எதிராக நேற்று நடந்த போராட்டத்தில் கலந்து கொள்ள தயார் செய்கிறார். ஹிஸ்பொல்லா அமைப்பு புரட்சியின் அடையாளமாக பயன்படுத்தும் சிவப்பு வர்ண துணியில் அரபு மொழியில் எழுதப்பட்டுள்ள வாக்கியத்தின் அர்த்தம்: கடவுளின் தூதரே.. உங்கள் சேவையில்!

லண்டன், பிரிட்டனில் எடுக்கப்பட்ட போட்டோ இது. Burberry Prorsum 2013 spring/summer collection கேட்-வாக்கில் பங்கு கொள்ளும் மாடல் நங்கைகளின் அணிவகுப்பு இது.

சீனா, வுஹானில் நேற்று நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்ட போட்டோ இது. இந்த டான்ஸின் முக்கியத்துவம் என்னவென்றால், இதில் கலந்து கொண்ட அனைவருமே, மாற்றுத் திறனாளிகள்!
 

கறுப்பு தொப்பி, தாடி சகிதம் நிற்பவரை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? அநேகருக்கு தெரிந்திருக்க சான்ஸ் இல்லை. காரணம், இவர் வெளியே தலைகாட்டுவதோ, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோ, அரிதிலும், அரிது.

இவர்தான், இஸ்ரேலை கிடுகிடுக்க வைக்கும் சையத் ஹாசன் நஸ்ரல்லா! ஆம். ஹெஸ்பொல்லா அமைப்பின் தலைவர்.
மிக அரிதாக பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நஸ்ரல்லா, நேற்று (திங்கட்கிழமை) பெய்ரூட் நகரில் நடைபெற்ற அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்களை பார்வையிட மெய்பாதுகாவலர் சகிதம் வந்தபோது எடுக்கப்பட்ட போட்டோ இது.
சி.ஐ.ஏ. மற்றும், எம்.ஐ.-6 உளவுத்துறைகள் இவரை கொல்வதற்கு செய்த முயற்சிகளை தொகுத்தால், ஒரு பெரிய புத்தகமே எழுதலாம்.


 
Top