Latest News

கடந்த 46 ஆண்டுகளுக்கு முன் நியூயார்க் சென்று கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானம், சுவிட்சலாந்தில் தரையிறங்குமுன் ஆல்ப்ஸ் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 117 பேரும் உயிரிழந்தனர்.
தற்போது, அந்த மலைப்பகுதியில் சென்ற உல்லாசப் பயணிகள், ஏர் இந்தியா விமானத்தில் இருந்து வீழ்ந்த டிப்ளமேட்டிக் மெயில் பேக் ஒன்றை கண்டெடுத்து சுவிஸ் போலீஸில் கொடுக்க, அவர்கள் இந்திய தூதரகத்தில் கொடுக்க, இந்த மெயில் பேக், நேற்று (செவ்வாய்க்கிழமை) டில்லி வெளியுறவு அமைச்சில் காட்சிக்கு வைக்கப்பட்டது.


மெயில் பேக் உள்ளே முக்கிய கடிதம் ஏதுமில்லை. சில பத்திரிகைகள் இருந்தன. அவற்றில் ஒன்று, விபத்து நடைபெறுவதற்கு முதல் தினம் (ஜனவரி 23, 1966) வெளியான ஹிந்து பத்திரிகை. அப்போது பத்திரிகையின் விலை, 13 பைசா!
 

கொல்கத்தா. டீசல் விலை உயர்வை எதிர்த்து பஸ் ஸ்ட்ரைக் நடந்ததால், படகுத் துறையில் எக்கச்சக்க கூட்டம். ஆபீஸ் செல்வதற்கு படகையே நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆமா.. இந்த படகுகூட டீசலில் தானே இயங்குகிறது?


மும்பை. டி.வி ஷோ பிக் பாஸ்-6 துவக்க விழாவுக்கு வந்திருந்த சல்மான் கான், சும்மா போகலாமா? அதுதான் போடுகிறார் ஒரு ஆட்டம். சல்மான் கான் ஆடுவதற்கு டீசல் போடத் தேவையில்லை என்பதால், விலை உயர்வால் பாதிப்பு இல்லை!
 

ஹைதராபாத். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயம்மா மாட்டு வண்டியில் கிளம்பி விட்டார். டீசல் விலை உயர்வுக்கு எதிராக இவரது கட்சி மாட்டு வண்டி போராட்டம் ஒன்றை நடத்தியது. அதை தொடக்கி வைத்தபோதே, எம்.எல்.ஏ. விஜயம்மா இப்படி காட்சியளிக்கிறார். மாட்டை பார்த்தால், அதற்கு குடிப்பதற்கு டீசல் கொடுத்தால் கூட ஓடாது போலிருக்கே!

மும்பை. மற்றொரு டீசல் விலையுயர்வு போராட்ட போட்டோ. இது சிவசேனா அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது. முதல் போட்டோவில் நிஜ எம்.எல்.ஏ. விஜயம்மா மாட்டு வண்டியில் சென்றார். இந்த போட்டோவில் சைக்கிளில் இருப்பவர், போலி பிரதமர்.

ஆம். பிரதமர் மன்மோகன் சிங் வேடமிட்ட ஒருவரை சைக்கிளில் ஏற்றி ஊரைச் சுற்றும் போராட்டம் இது. டீசல் விலை ஏற்றத்தால், பிரதமரே சைக்கிளில் போக வேண்டிய நிலை என்று சிம்பாலிக்காக காட்டுகிறார்களாம்.

ஜோத்பூர். போட்டோவில் உள்ளவர்கள், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சமீபத்தில் குடிபெயர்ந்த இந்துக்கள். தற்போது இவர்கள் ஜோத்பூரில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். போட்டோவில் அவர்களுடன் பேசிக்கொண்டு இருப்பவர், ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கிஹ்லாட்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னை அண்ணாசாலையில் எடுக்கப்பட்ட போட்டோ இது. மவுண்ட் ரோடு தர்க்காவில் இருந்து, ஸ்பென்சர் பிளாசா வரை எங்கும் மனிதத் தலைகளாக இருந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸ் தடியடி பிரயோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜே.கே.திரிபாதி, இடமாற்றம் செய்யப்பட்டார்.

அமிர்தசரஸ். சீக் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் டீசல் விலையேற்றத்தை கண்டித்து, காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியின் போட்டோவை எரிக்கும் காட்சி இது.

புபனேஸ்வர். பிஸ்வகர்மா பூஜையை முன்னிட்டு, ஆட்டோக்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
 

மும்பை. டீசல் விலை உயர்வை கண்டித்து, பெண்கள் நடத்திய ஆவேச போராட்டம். இந்த போராட்டம் சிவசேனாவின் ஏற்பாடு.

ஹைதராபாத். தேசியக் கொடியுடன் ஓடிச் செல்பவர்கள், ஒஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள். இவர்களது ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை கலைப்பதற்காக போலீஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசியபோது, அதிலிருந்து தப்பிக்க ஓடும் காட்சி இது. இஸ்லாமை இழிவுபடுத்தும் விதத்தில் எடுக்கப்பட்ட திரைப்படத்துக்கு எதிரான போராட்டம் இது.

சிலிகுரி (மேற்கு வங்கம்). கின்னஸ் சாதனையாளர் சைலேந்திர நாத் ராய், தமது தலைமுடியால் ட்ரெயின் ஒன்றை இழுத்து சாதனை செய்தபோது எடுக்கப்பட்ட போட்டோ இது. ட்ரெயினின் எடை, 42 டன். இதை, இரண்டரை மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்றார் ராய். அருகில் உள்ள போலீஸ்காரருக்கும் ஏதாவது எக்சர்சைஸ் சொல்லிக் கொடுத்திருக்கலாமே!

ஸ்ரீநகர் (காஷ்மீர்). தீயணைப்பு படையினர் அரசு ஜீப் ஒன்றை காப்பாற்ற முயற்சிக்கும் காட்சி இது. இஸ்லாமை இழிவு படுத்தி எடுக்கப்பட்ட சினிமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள், காஷ்மீர் அரசின் வாகனத்தை ஏன் எரித்தார்கள் என்பதுதான் புரியவில்லை.
 

சிலிகுரி (மேற்கு வங்கம்). தீஜ் திருநாளை கொண்டாடும் வங்கத்துப் பெண்கள். தீஜ் கொண்டாட்டங்கள் தற்போது இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து மறைந்து கொண்டிருக்கின்றன. இந்துப் பெண்கள் விரதம் இருக்கும் தீஜ், தற்போது, நேபாத்திலும், ஹரியானா மாநிலத்திலுமே பரவலாக கொண்டாடப்படுகிறது. மேற்கு வங்கத்தின் சில கிராமப் பகுதிகளில் மட்டுமே கொண்டாடப்படுவதை காணலாம்.

கோழிக்கோடு. லாரி உரிமையாளர்களின் ஸ்ட்ரைக் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள். டீசல் விலை உயர்வால், அதிக கட்டணம் கோரி போராடுகிறார்கள் இவர்கள்.

அமிர்தசரஸ். பஞ்சாம் மின்சார வாரியத்தில் வேலை இழந்த லைன்ஸ்மேன் ஒருவர், மாநில முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தபோது, காவல்துறையால் அங்கிருந்து அகற்றப்படுகிறார்.


கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க தமிழகத்துக்குள் நுழைய முயன்றபோது, தமிழக காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட போட்டோ இது.
 

புது டில்லி. தேசிய பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டு நேரடி முதலீட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தபோது, டில்லி போலீஸால் தடுத்து நிறுத்தப்பட்டனர். சும்மா சொல்லக்கூடாது. டில்லி போலீஸ் சிரித்த முகமாக உள்ளார்கள்!


ஸ்ரீநகர் (காஷ்மீர்) இது ஒன்றும் சாகச நிகழ்ச்சி அல்ல, போராட்டம்தான். அமெரிக்க திரைப்படத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, வீதியின் நடுவே போட்டு எரிக்கப்பட்ட டயரை தாண்டிக் குதித்து செல்லும் போராட்டக்காரர். சரி. டயருக்கு பக்கத்திலேயே நிறைய இடம் உள்ளதே!
 

புதுடில்லி. புருண்டி நாட்டின் ஜனாதிபதி வருகை தந்தபோது, குடியரசுத் தலைவரும், பிரதமரும் வவேற்ற காட்சி இது. இப்போதெல்லாம் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை கவர் செய்யும் போட்டோகிராபர்களே, ‘ஸ்மைல் பிளீஸ்’ என்றெல்லாம் சொல்வதில்லை.

கொல்கத்தா. வாடிக்கையாளர்கள் வருகைக்காக காத்திருக்கும் காய்கறி வியாபாரிகள். இவர்களது வியாபாரத்துக்கும், வெளிநாட்டு மெகா செயின் நிறுவனங்களால் போட்டி ஏற்படப் போகிறது.

மும்பை. Mercedes-Benz காரின் புதிய ஸ்போட்ஸ் மாடல் (Tourer B) இந்திய மார்க்கெட்டுக்குள் அறிமுகம் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட போட்டோ இது. சரி. கார் என்ன விலை? ரூ.2,475,000.
 
Top