ஒரு அதிசய மனிதரை பாருங்கள்...

நாள்தோறும், புதுவித ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கும் நம் நாட்டில், 22 ஆண்டுகளாக பணத்தை தொட்டுக்கூட பார்க்காத மனிதர் ஒருவரும் வாழ்ந்து வருகிறார். ஆம், பணம் தான் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் என்பதால், அதை தொடக்கூட விரும்பவில்லை என்கிறார், இந்த அதிசய மனிதர்.

மகாராஷ்டிர மாநிலம், பீடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாபன்ராவ் மாஷ்கே, 58. விவசாயியான இவர், 22 ஆண்டுகளுக்கு முன், பணத்தைத் தொடுவதில்லை என, சத்தியம் செய்து கொண்டார். வெறும் வார்த்தையாக இல்லாமல், அதை இன்றளவும் கடைபிடித்து வருகிறார்.

மாஷ்கே கூறியதாவது: கடந்த 22 ஆண்டுகளுக்கு முன், பணத்தகராறு ஒன்றில், என் கிராமத்தினர் சிலர் உயிரிழந்தனர். சம்பவத்தை நேரில் பார்த்த நான், பணம் தான் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் என முடிவு செய்தேன். உயிரோடு இருக்கும் வரையிலும், பணத்தை கையால் கூட இனி தொடுவதில்லை என உறுதி எடுத்துக் கொண்டேன். இத்தனை ஆண்டுகளில், என் முடிவை கைவிடும் வகையில், பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. எனினும், சத்தியத்தை தொடர்ந்து காப்பாற்றி வருகிறேன்.

என் வீட்டைத் தவிர வெளியிடங்களில் உணவு உண்பதோ, தேநீர் குடிப்பதோ இல்லை. என் முடிவால், என் மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. என் சத்தியத்தை தெரிந்து கொண்ட என் முதலாளி, மாத சம்பளத்தை என் குடும்பத்தினர் கையில் அளித்து விடுவார். அதுபோல், வெளியூர் செல்லும் போது, என் மகன் அல்லது நண்பர்களுடன் தான் செல்வேன்.

பயண வேளையில் ஏற்படும் பணத்தேவையை அவர்கள் பார்த்துக் கொள்வர். இவ்வாறு மாஷ்கே கூறினார். கைக்கு கை மாறும் பணத்தை, கையில் தொடாத இந்த மனிதர், பீடு மாவட்டத்தில் தொடர்ந்து 22 ஆண்டுகளாக பீடு நடை போட்டு வருவதை, உள்ளூர் மக்கள் வினோதமாக பார்க்கின்றனர்.

தினமலரில் வாசித்த அந்த செய்தி பல விதமான சிந்தனைகளை கிளறி விடுகிறது. அதிசயிக்க வைக்கிறார் அந்த மனிதர் என்றால் -அதிர்ச்சி அடைய வைக்கிறார்கள் நம்ம ஊர் அரசியல்வாதிகள் தங்களின் பணத்தாசைகளின் மூலம். பற்றற்ற சாமியார்களும், மக்களுக்கு உழைப்பதே உயிர் மூச்சு எனும் அரசியல்வாதிகளும், பணத்தாசையில் சிக்கி சிறையில் வாழுவதை பார்க்கும்போது, கவியரசர் கண்ணதாசனின் "பணம் என்னடா பணம் பணம்... குணம் தானடா நிரந்தரம்" என்கிற பாடல் தான் ஞாபகத்துக்கு வருகிறது, 

அரசியல்வாதிகள் தாங்கள் மட்டும் கற்ற முறைகேட்டு வித்தைகளை தேர்தலின் மூலம் மக்களுக்கும் வாக்குக்கு பணம் கொடுத்து கற்று தந்து விட்டார்கள் என்று சொன்னால் மிகையில்லை. நாள்தோறும் லஞ்சம் வாங்கி பிடிபட்ட அரசு அலுவலர்களை செய்திதாள்கள் வாயிலாக பார்க்கிறோம். அரசியல்வாதிகளை பற்றி சொல்லவே வேண்டாம். அப்படி என்ன வேண்டி கிடக்கிறது - பாழாய் போன பணத்தாசை.

இன்று நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு நிறைவான சம்பளம் - அரசு பணியாளர்களுக்கு. ஆனால் வருமானத்தில் விளிம்பு நிலையிலுள்ள மனிதர்களிடம் இருக்கின்ற நேர்மை அவர்களிடம் இல்லையே. உழைத்து உழைத்து ஒன்றுக்கும் உதவாத வாழ்க்கை வாழும் மனிதர்களை - படத்திற்கு கோடி கோடியாய் வாங்கும் சினிமா நடிகரும், கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளும் நினைத்து பார்ப்பார்களா?

தன் அருகேயே இப்படியான மனிதர்களை வைத்து கொண்டு அதீதமாய் சம்பாதிப்பது திருட்டுக்கு சமானம், அடாவடித்தனம் என்கிற உறுத்தல் அவர்களுக்கு இல்லையா? எப்போதும் நன்மையோடு தீமை என்பதும் இருக்கும். நல்லதோடு கெட்டதும் இருக்கும். பணத்தாசை பிடித்தவர்களோடு பணத்தை வெறுப்பவர்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக தான் உள்ளது.

லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்பவர்களுக்கு மத்தியில் - தம் கைக்காசை செலவு பண்ணி முதியவருக்கு டீ வாங்கி கொடுத்து,  பணியை செவ்வனே செய்து தரும் ஊழியர்களையும் பார்க்கிறோம். ஒரு முறை பல் வலியின் காரணமாக மருத்துவமனைக்கு சென்றோம். நாம் நினைத்தது போல் சாதாரணமாக முடியவில்லை சிகிச்சை. பையில் இருந்ததோ நூறுரூபாய். ஆனால் நூற்றிஐம்பது ரூபாய் கட்டணமானது. தயக்கத்தோடு கையில் இவ்வளவு தான் உள்ளது என்ற போது, மனமுவந்து வாங்கி கொண்டார் மருத்துவர்.

நல்ல மனிதர்கள் தங்கள் செய்கை மூலம் நல்லது கற்று தருகிறார்கள். பணத்தாசை பிடித்தவர்கள் - நம்மையும் பணத்துக்கு அடிமையாக்கி விடுகிறார்கள்.
 
Top