இந்தியா பாகிஸ்தான் உறவுகளில் அடிக்கடி மோதல்கள் ஏற்படும் நிலையில், ஓசைப்படாமல் ஒரு காரியம் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்திய கோதுமை ஏற்றுமதியை தமது நாட்டின் ஊடாக ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்க அனுமதித்திருக்கிறது பாகிஸ்தான்!


கடந்த சில மாதங்களாக சுமார் 1 லட்சம் டன் கோதுமை, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் ஊடாக எந்தச் சிக்கலும் இன்றி ஆப்கானிஸ்தான்வரை போயிருக்கிறது.

இந்தியா மொத்தமாக இரண்டரை லட்சம் டன் கோதுமையை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப ஒப்புக் கொண்டிருந்தது. பாகிஸ்தான் தொடர்ந்தும் அனுமதித்தால், அடுத்த சில மாதங்களுக்கு இந்த ஏற்றுமதி பாகிஸ்தான் ஊடாகவே நடைபெறுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் காந்த்லா பகுதியில் இருந்து, பாகிஸ்தானின் கராச்சி நகரத்துக்கு கோதுமை அனுப்பப்படுகிறது. கராச்சியில் இருந்து, ரயில் மற்றும் ட்ரக் மூலமாக டொர்க்கம் என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. டொர்க்கம் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள நகரம். இந்த இடம்தான், ஆப்கானிஸ்தானுக்குள் வரும் பல்வேறு சரக்குகளுக்கு ட்ரான்சிட் பாயின்டாக உள்ளது.

டில்லி சௌத் பிளாக் அதிகாரிகள், இந்திய கோதுமை பாகிஸ்தான் ஊடாக செல்ல அனுமதிக்கப்பட்டது பெரிய விஷயம்தான் என்கிறார்கள். ஆனால், ஷிப்பிங் துறையில் உள்ளவர்கள் இதை வேறு ஒரு விதமாகவும் பார்க்கலாம் என்கிறார்கள்.

“எப்படியென்றால், இந்த கோதுமை ஷிப்மென்ட்டை இந்தியாவில் இருந்து (காந்த்லாவில் இருந்து) அனுப்புவது இந்தியா கிடையாது. ஆப்கானிஸ்தானுடன் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி, காந்த்லாவில் வைத்து கோதுமையை ஆப்கானிஸ்தான் பெறுப்பு ஏற்க வேண்டும். அப்படியே நடக்கிறது. காந்த்லாவில் கோதுமை ஏற்றப்படுவது, ஆப்கானிஸ்தான் ஏற்பாடு செய்யும் ட்ரக்களில்தான். அதற்கான டாக்குமென்ட்களை தயார் செய்வது, ஆப்கானிஸ்தான் ஷிப்பிங் ஏஜென்டுகளே.

எனவே இதை, இந்திய கோதுமையை ஆப்கானில்தான், பாகிஸ்தான் ஊடாக கொண்டு செல்கிறது என்று சொல்லலாமே தவிர, இந்தியா, பாகிஸ்தான் ஊடாக சரக்கை அனுப்புகிறது என்று எடுத்துக் கொள்ள முடியாது” என்கிறார்கள் அவர்கள்.

அப்படிப் பார்த்தால் இது, ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான டீல் என்றே கருதப்பட வேண்டும் என்பது உண்மைதான்.
ஆனால், இந்த கோதுமை ஏற்றுமதியை பாகிஸ்தான் நினைத்தால் தடுக்க முடியும் என்ற நிலை இருந்தும், அவர்கள் தடுக்கவில்லை. ஏனென்றால், ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலுள்ள ட்ரேட் அக்ரீமென்ட் அப்படி!

ஆப்கானுக்கு வரும் பொருட்களுக்கு பாகிஸ்தான் ட்ரான்சிட் வசதி அந்த அக்ரீமென்டில் ‘நிபந்தனையுடன்’ ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. நிபந்தனை, சரக்குகளின் பாயின்ட் ஆஃப் ஒரிஜின் இந்தியாவாக இருக்க கூடாது. எனவே பாகிஸ்தான் நினைத்தால், இந்த போக்குவரத்து பாதையை முடக்கலாம்.

விவகாரம் பாகிஸ்தானிய அரசியல் கட்சிகளால் பெரிது படுத்தப்படாதவரை, கோதுமை போய்க்கொண்டே இருக்கும்!
 
Top