கூடுதல் காஸ் இணைப்பு பெற்றவர்களின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையில், காஸ் சிலிண்டர் வினியோகிக்கும் நிறுவனங்கள், மும்முரமாக ஈடுபட்டுள்ளன. 1 இணைப்புக்கு மேல் பெற்றிருப்பவர்களுக்கு, எல்லா இணைப்புகளும் பறி போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

"பாரத், இண்டேன் மற்றும் எச்.பி.,' ஆகிய, மூன்று நிறுவனங்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் ஏஜன்சிகள் மூலம் நாடு முழுவதும், பொதுமக்களுக்கு, 21 நாட்களுக்கு, ஒரு சிலிண்டர் என, காஸ் இணைப்பு வழங்கி வருகிறது. இந்நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகம், செப்டம்பர், 27ம் தேதி முதல், காஸ் இணைப்பு பெற்றவர்களுக்கு, ஆண்டுக்கு, 6 சிலிண்டர் மட்டுமே மானிய விலையில் வினியோகம் செய்ய முடியும் என, அறிவித்தது. கூடுதல், சிலிண்டர் வேண்டுவோருக்கு மானியம் தவிர்த்து, 754.50 ரூபாய்க்கு - உள்ளூர் வரி இல்லாமல் வழங்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டது.

மானிய விலையில் வினியோகம் செய்யப்படும் காஸ் சிலிண்டருக்கு, மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கட்டுப்பாடு விதித்ததால், பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். ஆனால், நுகர்வோர் பலர், வெவ்வேறு அடையாள அட்டைகள் மூலம், வெவ்வேறு நிறுவனங்களில் காஸ் சிலிண்டர் பெற்றுள்ளனர். ஆண்டுக்கு, 6 காஸ் சிலிண்டர் திட்டம் அமல்படுத்தினாலும், கூடுதல் இணைப்பு வைத்துள்ளவர்கள், வெவ்வேறு நிறுவனங்கள் மூலம், மானிய விலை காஸ் சிலிண்டர்களைப் பெற முடியும்.

இந்நிலையில், ஒரு குடும்பத்தில், வெவ்வேறு காஸ் நிறுவனங்களில், ஒரே பெயரில், கூடுதல் இணைப்பு பெற்றுள்ளனரா என்பதை, காஸ் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. பாரத், இண்டேன் மற்றும் எச்.பி., ஆகிய மூன்று நிறுவனங்கள், கூடுதல் இணைப்பு பெற்றுள்ளவர்களின் இணைப்புகளை துண்டிக்க, கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டுள்ளன.

அதன்படி, ஏஜன்சிகளுக்கு, "உங்கள் நுகர்வோரை தெரிந்து கொள்ளுங்கள்' (கே.ஒய்.சி.,) என்ற படிவம் அளித்துள்ளது. அதில், நுகர்வோரின் பெயர், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், தாய், தந்தை பெயர், முகவரி, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், பேன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை, வீட்டு வரி ரசீது நகல் போன்ற தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன. காஸ் ஏஜன்சிகளுக்கு, வரும், 30ம் தேதிக்குள், இந்த படிவங்களை நுகர்வோர், பூர்த்தி செய்து, அனுப்ப வேண்டும்.

 பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தில் உள்ள ஆவணங்களின் எண்களை, நுகர்வோரின் இணைப்புகளுடன், ஒப்பிட்டு பார்க்கப்படும். அவ்வாறு செய்யும் போது, கூடுதல் இணைப்புகளை கண்டுபிடித்து விடமுடியும். கூடுதல் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும். எந்த இணைப்பு, கூடுதல் இணைப்பு என தெரியாமல் போனால், ஒன்றுக்கு மேற்பட்ட எல்லா இணைப்புகளும் துண்டிக்கப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. காஸ் நிறுவனங்களின், இந்த, கிடுக்கிப்பிடி விசாரணையால், கூடுதல் காஸ் இணைப்பு பெற்றவர்கள், கலக்கத்தில் உள்ளனர்.
 
Top