நீண்ட காலமாக, பொதுமக்கள் மத்தியில், அரசு மருத்துவமனைகளில் பணி நேரத்தில், மருத்துவர்கள் சரியாக இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், "பயோ மெட்ரிக்' முறையை செயல்படுத்த, அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.முதல்கட்டமாக, மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ்வரும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், இம்முறை விரைவில் அமலுக்கு வர உள்ளது. சென்னையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், இதற்கான ஆயத்தப் பணிகள், கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகின்றன.இந்நிலையில், "பயோ மெட்ரிக்' முறையை, அரசு மருத்துவமனைகளில் மட்டுமின்றி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து, சங்கத்தின் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக, அவ்வப்போது ஆலோசிக்கப்பட்டு வந்த, "பயோ மெட்ரிக்' முறையை செயல்படுத்த, அரசு தற்போது தீவிரம் காட்டி வருகிறது. பணி நேரத்தில் மருத்துவமனையில் இல்லாத பணியாளர்கள் மீது அரசு, சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கலாம். அதற்குப் பதிலாக, அனைத்து அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் வருகைப் பதிவை, தொழில்நுட்ப முறையில் கண்காணிக்க முயல்வது, மருத்துவப் பணியை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.
மேலும், புற நோயாளிகளின் எண்ணிக்கை, உள் நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சைகளை பொருத்து, அரசு மருத்துவர்கள், நேர வரையறையின்றி பணிபுரிய வேண்டியுள்ளது. எனவே, மருத்துவர்களுக்கு இம்முறை ஒத்து வராது.பொதுமக்கள் மத்தியில் அரசு மருத்துவர்கள் பற்றி, தவறான புரிதலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதால், இம்முயற்சியை அரசு கைவிட வேண்டும். இல்லையெனில், தலைமை செயலகம் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும், "பயோ மெட்ரிக்' முறை கொண்டு வரப்பட வேண்டும்.இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.
ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை நோயாளிகள் சிலர் கூறுகையில், "டாக்டர்கள், நர்ஸ்கள் எல்லாரும், அவரவர் பணி நேரத்தில், சரியாக வேலை செய்திருந்தால், இந்தப் பிரச்னையே எழுந்திருக்காது. நேரம் தவறாமையை வலியுறுத்தும் பட்சத்தில், பணியைக் கொச்சைப்படுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை' என்றனர்.
டுமீல் 1. நம்மாளுங்க இதுலயும் வேலையை காட்டுவாங்க. காலைலே சீக்கிரம் வந்து விரலை
அமுக்கிட்டு திரும்ப சொந்த கிளினிக் போய்ட்டு சாயங்காலம் வந்து அமுக்கர
டகால்ட்டி வேலை பண்ணுவாங்க. அதனாலே எல்லோர் கழுத்திலேயும் ஸ்டெதாஸ்கோப் கூட
ஒரு GPS கட்டி தொங்க விட்டா நல்லா இருக்கும்.
டுமீல் 2. இப்படித்தான் சாலை சந்திப்புகளில் சாலை விதியை மீறுபவர்களை தண்டிக்க ,
கண்காணிப்பு காமெரா பொருத்திநீர்கள் ..அதில் போக்கு வரத்து போலீசார் லஞ்சம்
வாங்குவதும் பதிவாகிறது என்று எல்லாவற்றையும் பழுதடைய செய்து விட்டார்கள்
.. அது போல தான் இதுவும் ஆகும்... நிர்வாக சீர்கேட்டை முதலில் அமைச்சர்
அலுவலத்தில் இருந்து ஆரம்பியுங்கள் .. ஆரம்பமே சரியில்லாத பொது முடிவு
மட்டும் சரியாகி விடுமா
டுமீல் 3. ஆசிரியர்களுக்கும் கொண்டுவரபடவேண்டியது. ஒரு சில கிராம புற பள்ளிகளில்,
அரசு ஆசிரியர்கள் தினமும் ஒருவர் மாற்றி ஒருவர் விடுப்பு
எடுத்துகொள்கிறார்கள். ஆனால் அவற்றை பதிவு செய்வதில்லை. பெரும்பாலான
பள்ளிகளில் சரியான நேரத்திற்கு எந்தவொரு அரசு ஆசரியரும் வருவதில்லை. ஏனனில்
அரசு ஆசிரியர்களில் பாதிபேர் வேறொரு வியாபாரம் செய்கிறார்கள். அதனால்
ஆசிரியர் வேலை அவர்களுக்கு சைடு பிசினஸ் போன்று உள்ளது.
டுமீல் 4. இதை அமுல் படுத்துவது நம் ஊரில் சாதகமா எனத்தெரியவில்லை... பயோ மெட்ரிக்
நுழைவு இயந்திரம் ஒவ்வொரு பாதையிலும் வைக்கப்படவேண்டும். அதாவது விரலை
வைத்தால்தான் கதவு திறக்கும்படியாக. இல்லை என்றால் விரலை நேரத்தோடு வந்து
வைத்துவிட்டு வேறு வழியாக சென்று விடலாம். அப்படியே எல்லா பாதையிலும்
வைத்தாலும் யாரோ ஒருவர் (உதாரணமாக நோயாளி) வரும்போதோ அல்லது வெளியே
செல்லும்போது அவர் பின்னால் விரலை வைக்காமல் சென்றுவிடலாம்