அந்த ஒலி, எல்லாருக்குமே காதை அடைக்கும் அளவுக்கு இருந்தது. சற்று நேரத்திற்குள், கிட்டத்தட்ட எல்லா, "போர்ஷன்'களிலிருந்துமே விதவிதமான பக்திப்பாடல்கள் ஒலிக்கத் தொடங்கின.
இதில், இன்னும் முக்கியமான விஷயம் என்னவென்றால், அவரவர்கள் தங்களுக்குப் பிடித்தமான, "டிவி' சேனல்களை போட்டிருந்தனர். கிட்டத்தட்ட வெங்கடேச சுப்ரபாதம், கந்தர் சஷ்டி கவசம், ஐயப்பப் பாடல்கள், சில வேத மந்திரங்கள், மகிஷாசுர மர்த்தினி ஸ்தோத்ரம், திருப்பாவை என்று, ஒட்டு மொத்தமாக அலறிக் கொண்டிருந்தது.
இதனால் ஏற்படும் ஒலி அளவு, எந்த அளவுக்கு தொந்தரவாக இருக்கும் என்பதை யாருமே உணர்ந்த மாதிரி தெரியவில்லை. இந்த சப்தம் காரணமாக, விடியற்காலையில் எழுந்து படிக்கும் பழக்கம் இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு, அந்த பழக்கத்தை, பெற்றோரே இல்லாமல் செய்து விடுவர் போலிருக்கிறது.
இதற்காக, நான் தெய்வ பக்தி இல்லாதவன் என்று அர்த்தம் இல்லை. ஆனால், "டிவி'யில் போட்டால் தான் பக்தி என்பது அல்ல. அதை அவரவர்களுக்கு மட்டும், கேட்கிற மாதிரி வைத்துக் கொள்ளலாமே. அதைவிடச் சிறப்பு, வீட்டில் உள்ளவர்கள், அவரவர்களுக்கு பிடித்த ஸ்தோத்ரங்களையோ, பாடல்களையோ மற்றவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் பாராயணம் செய்யலாமே!