எங்கள் தெருவிலுள்ள ஒரு மூதாட்டி, இட்டிலி மாவு வியாபாரத்தை சிறப்பாக நடத்தி வந்தார். தினமும், கிலோ கணக்கில், கிரைண்டரில் அரைத்து, ஏரியா மக்கள் அனைவரும் வாங்கிச் செல்லுமளவுக்கு, மாவு விற்பனையில் கோலோச்சி வந்தாள். சமீபகாலமாக ஏற்பட்ட மின்வெட்டால், அந்த தொழிலில் அவருக்கு தொய்வு ஏற்பட்டது.

மின்சாரம் கிடைக்கும் சிறிது நேரத்திற்குள்ளாக, மாவு அரைக்க இயலாமல் திண்டாடினார், மாவு கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு மாவு இல்லை எனச் சொல்லி வந்ததோடு, போதிய வருமானமின்றி கஷ்டப்பட்டவரின் மனதில், ஒரு புது வியாபாரத் திட்டம் உதயமானது.

மாவுக்கடை என்ற விளம்பரப் பலகையை எடுத்து, "கிழங்குக்கடை' என்ற போர்டு மாட்டினார். மரவள்ளி மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை அவித்தும், உதிரியாக்கியும், தாளித்தும் அதன் மேல் தேங்காய் தூவி, சுவையுடன் மக்களுக்கு வினியோகித்தார். அந்த வியாபாரம், இப்போது அமோகமாகவே நடக்க துவங்கி விட்டது. மாவு வியாபாரத்தில் வந்த லாபத்தை விட, கூடுதலாக வர, மூதாட்டி சந்தோஷமடைந்து விட்டார்.

என்ன செய்யறது...மின்சார உற்பத்தி குறைவானதால அரசால், 24 மணி நேரமும் மக்களுக்கு மின்சாரம் தர முடியவில்லை. அதுக்காக அரசையே குறை சொல்லிட்டிருக்க முடியுமா? நம்மளை மாதிரி ஆட்கள், பஞ்சம் பொழைக்கறதுக்கு மாற்று வழியை கையாளத் துவங்கினா, எப்படியும் பொழைக்கலாம். "ஆண்டவன் ஒரு கதவை மூடினா... இன்னொரு கதவை திறந்து வைக்காமலா போவான்...' என்ற, அவளது நம்பிக்கை மிகுந்த வார்த்தைகள், மின்சாரத்திற்காக காத்திருந்து கால விரையம் செய்யும் மற்றவர்களுக்கு, ஒரு தூண்டுகோலாய் அமையும் என்பதில் ஐயமில்லை.
 
Top