"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதை உலகுக்கு உணர்த்த, மருத்துவக் குறிப்புகளை அவர்கள் தந்தனர். போகர் எனும் சித்தர், முருகப்பெருமானின் சிலையை, "நவபாஷாணம்' எனும் மருந்தால் செய்து உலகுக்கு வழங்கினார். "இந்த சிலையில், அபிஷேகம் செய்யப்படும் பஞ்சாமிர்தத்தை சாப்பிட்டாலே போதும். மனிதன் நோயின்றி வாழ்வான்.
..' என்றார்.
அதனால் தான், பழநியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
தைப்பூசத் திருநாள் சிவனுக்குரியது. மார்கழி திருவாதிரை நாளில், "நடராஜர்' எனும் பெயரில், சிவன் தனித்து நடனக்காட்சி அருளுகிறார். தைப்பூசத்தன்று, அம்பிகையுடன் இணைந்து நடனமாடுகிறார். அதனால் தான், தைப்பூசத்தன்று பழநியிலுள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடத்தப்படும். ஆனாலும், மக்கள், மலைக்கோவில் முருகனுக்கு, காவடி எடுத்து, பாதயாத்திரையாக சென்று வழிபாடு செய்யும் பழக்கம் உருவானது.
சித்தர்களுக்கெல்லாம் தலைமையான சித்தராக முருகப்பெருமான் இங்கு இருப்பதால், இத்தலத்திற்கு, "சித்தன்வாழ்வு' என்ற பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால், முருகப் பெருமான் ஞானமாகிய கனியைப் பெற, இங்கு வந்து தங்கியதால், "பழம் நீ' என்றாகி, பழநியாக சுருங்கியது.
நாரதர் கொடுத்த மாங்கனியை, தனக்கு வழங்காமல், விநாயகப் பெருமானுக்குக் கொடுத்ததால் சினம் கொண்ட முருகப் பெருமான், இங்கு ஆண்டியாக இருப்பதாக தல வரலாறு கூறுகிறது. ஒரு சாதாரண கனிக்காக, முருகன் கோபிப்பாரா என்ன!
காரணம் அதுவல்ல.
மனிதர்கள், வாழ்வில் இன்பம் - துன்பம் எனும் இருவேறு சூழ்நிலைகளைச் சந்தித்துத் தான் ஆக வேண்டும். அதே நேரம், இதில் எது வந்தாலும், மனம் தடுமாறக்கூடாது. பரம ஏழைக்கு, ஒரு கோடி கிடைத்தவுடன், அவன் ஆட்டம் போடுகிறான். பெரும் பணக்காரன், ஒரே நாளில் எல்லாவற்றையும் இழந்ததும், மனம் தளர்ந்து, விபரீத முடிவு எடுக்கிறான். இவ்வாறு இல்லாமல், எந்தச் சூழலிலும், பக்குவமாக செயல்பட வேண்டும். அந்த நல்லறிவே, "பழுத்த கனிக்கு' ஒப்பிடப்படுகிறது. அந்த கனியைத் தரும் ஞானபண்டிதனாக, முருகன் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார்.
இன்னொரு தத்துவமும் இதில் உண்டு. தாய், தந்தை, மனைவி, அண்ணன், தம்பி, பிள்ளைகள் என, நாம் காணும் உறவுகள் எல்லாமே மாயை. உயிரோடு இருக்கும் வரை, இவர்களெல்லாம் நம்மேல் பாசம் காட்டும் பாத்திரங்களாக இருக்கின்றனர். உயிர் பிரிந்ததும், அந்த ஆத்மா வேறோர் இடத்தில் பிறவியெடுக்கும். ஏன் இப்படி மாறி மாறி பிறக்க வேண்டும். இந்த உலக இன்பங்களை வெறுத்து, பரம்பொருளான முருகனுடன் கலந்து விட்டால், பசியேது, தூக்கமேது, துக்கமேது! இந்த ஞானத்தை, தன் பக்தனுக்கு அருள்பவராக, முற்றும் துறந்து, வெறும் கோவணத்துடன் பழநியிலே காட்சியளிக்கிறார் முருகப் பெருமான்
.
தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல், தன்னை நாடி வருபவருக்கு அருளை வாரி வழங்குவதற்காகவும், ஆண்டிக் கோலம் கொண்டுள்ளதாக கூறுவர். தைப்பூச நன்னாளில், வாழ்க்கையின் உண்மை நிலையைப் புரிந்து கொள்வோம். அந்த ஞானபண்டிதனைச் சரணடைவோம். அவனது கந்தலோகத்தில் வாழும் பாக்கியம் பெறுவோம்.
கருத்துரையிடுக Facebook Disqus