செவிவழிக் கதை!
தஞ்சாவூர் பொய்யனுக்கும்
மதுரை புளுகனுக்கும் பொய் பேசறதுல புளுகிறதுல போட்டி!. தஞ்சாவூர் பொய்யன் “புளுகறதுல
நான் தான் பெரிய ஆளு” ன்னான். மதுரை புளுகனோ “நான் தான் பெரிய புளுகன்”ன்னான். இந்த
விவகாரம் அப்படியே பெரிசாகி ஒருத்தருக்கொருத்தர் நான் தான் பெரியவன்னு போட்டி போட்டுகிட்டு
ஊரே கூடி போச்சு!.
ஊர்ஜனங்க எல்லாம் ஓண்ணு கூடி நீங்க எதுக்கு சண்டை
போட்டுகிறீங்க? ஒரு போட்டி வைப்போம்! அதுல யாரு நல்லா புளுகறீங்கண்னு பார்த்து நாங்க
யாரு பெரிய புளுகன்னு தீர்ப்பு கொடுக்கறோம்னு அறிவிச்சாங்க!
நாளைக்கு காலையில ஒன்பது மணிக்கெல்லாம் நீங்க ரெண்டு
பேரும் புளுகறது ரெடியா பஞ்சாயத்து மண்டபத்துல ஆஜாராயிடனும்னு சொல்லிட்டு பஞ்சாயத்து
கலைஞ்சது.
தஞ்சாவூர் புளுகன் கிட்ட நாம எப்படி புளுகி ஜெயிக்கறதுன்னு மதுரை புளுகன் புலம்பிகிட்டு இருந்தான்.
மதுரை புளுகன் கிட்ட நாம எப்படி புளுகறதுன்னு தஞ்சாவூர் பொய்யன் புலம்பிக்கிட்டு இருந்தான்..
இப்படி புலம்பிகிட்டு இருக்கும் போது தஞ்சாவூர் பொய்யனோட பையன் அங்க வந்தான்.
அப்பா! நீ எதுக்கு இப்படி புலம்பிட்டு கிடக்கே?ன்னு
கேட்டான்.
இல்லப்பா! நாளைக்கு மதுரை புளுகனுக்கும் எனக்கும்
பொய் பேசற போட்டி இருக்கு!பஞ்சாயத்துல யாரு பெரிய புளுகன்னு முடிவு பண்ணி தீர்ப்பு
சொல்ல போறாங்க! அதான் அவனை எப்படி புளுகறதுல ஜெயிக்கிறதுன்னு ஒரே கவலையா இருக்குன்னான்
தஞ்சாவூர் பொய்யன்.
சரிப்பா! நீ போக வேணாம்! நான் போய் மதுரை புளுகன ஜெயிச்சிட்டு
வரேன்!ன்னு சொன்னான் பையன்.
என்னப்பா! மதுரை புளுகன் கிட்ட புளுகறதுக்கு நானே
யோசனை பண்ணிகிட்டு இருக்கேன் நீ போய் அவனை எப்படி ஜெயிப்பே? அப்படின்னு கேட்டான் தஞ்சாவூர்
புளுகன்.
அதபத்தி நீ கவலைப்படாதே அப்பா! நான் கட்டாயம் ஜெயிச்சுட்டு
வந்துருவேன்! ஆமாம் எத்தனை மணிக்கு போட்டி? ன்னு கேட்டான் பொய்யனுடைய பையன்.
அது நாளைக்கு காலையில பத்து மணிக்கு ஊர் பஞ்சாயத்து
மண்டபத்துல என்றான் பொய்யன்.
சரிப்பா! நீ எதுக்கும் கவலைப்படாம வீட்டிலேயே இரு!
நான் போய் ஜெயிச்ச செய்தியோட வரேன்! அப்படின்னு சொன்னான் தஞ்சாவூர் பொய்யனோட பையன்.
மறுநாள் காலை பத்து மணிக்கு ஊரே திரண்டு மண்டபத்துல
உட்காந்து இருக்கு! மதுரை புளுகன் வந்து காத்து கிடக்கான் மணி பத்து தாண்டி
உச்சி பொழுதும் வந்துருச்சு! அப்பத்தான் நிதானமா வர்றான் தஞ்சாவூர்
பொய்யனோட பையன்.
வாடா! எங்கடா உங்க அப்பன் தஞ்சாவூர் பொய்யன்? ன்னு
ஊரே கேட்டுச்சு!
எங்கப்பன் வரலைங்க! எங்கப்பாவுக்கு பதிலாத்தான்
நான் வந்தேன். நேரத்துல புளுகறதுக்கு போயிடுன்னு எங்கப்பா சொல்லி அனுப்பிச்சாரு! ஆனா
எங்க பாட்டிக்கு கல்யாணம். எங்க பாட்டியை கூட்டிகிட்டு மண்டபத்துக்கு போகும் போது கல்யாணத்
தேங்காயை மறந்துட்டு போயிட்டோம். “கோயில்ல போய் பாட்டனையும் பாட்டியையும் உட்காரச்
சொல்லிட்டு ஓட்டமா ஓடி தேங்காயை எடுத்துகிட்டு வாடா”ன்னு சொன்னாங்க.
அங்கிருந்து ஓட்டமா
ஓடி வீட்டுக்கு வந்து தேங்காயை எடுத்துகிட்டு ஓடினேன். அப்ப கால் தடுக்கி கீழே விழுந்தேன்.
அப்ப அந்த தேங்காய் சுக்கு நூறா உடைஞ்சி அந்த
ஊரையே தேங்கா தண்ணி அடிச்சிகிட்டு போயிருச்சு. நான் ஒருத்தன் மட்டும்தான் தப்பிச்சேன்.
பஞ்சாயத்துல கலந்துக்கணும்னு ஓடி வந்தேன்.
என்னோட பொல்லாத நேரம் அப்ப பார்த்து கடல்
தீப்பிடிச்சு எரியுது! பக்கத்துல இருந்த வைக்கப்போர புடுங்கி போய் போட்டு கடல் தீயை
அணைச்சேன். அணைச்ச கையோட வர்ற போதுதான் பார்த்தேன் உச்சி பொழுது ஆயிருச்சு. அதனாலதான்
இவ்வளவு நேரம் ஆயிருச்சு! கோபிச்சுகாதீங்க! அப்படின்னு சொன்னான்.
அதை கேட்டு மதுரை புளுகன் அதிசயமா பார்த்தான்.
“
தம்பி, ஆகாயத்துக்கும்
பூமிக்கும் சரியா புளுகிட்டே! இனிமே எனக்கு புளுகறதுக்கு இடமே இல்லே!
இதுக்கு மேல உனக்கு
தஞ்சாவூர் பொய்யனோட பையன்னு பேரு இல்லே! அண்டப்புளுகன்! ஆகாசப்புளுகன்!
ன்றதுதான் சரி! நீயே இப்படி புளுகினா உங்கப்பன் புளுக கேட்கவே வேணாம்!
அப்படின்னு சொன்னான்.
பஞ்சாயத்தும் மதுரை புளுகனே ஒத்துகிட்டாச்சு இனிமே
தஞ்சாவூர் பொய்யன் தான் பெரிய புளுகன்னு தீர்ப்பு சொல்லி கலைஞ்சி போச்சு!
கருத்துரையிடுக Facebook Disqus