0
 
கொல்லம் பகுதியின் முக்கிய கோயில்களில் ஒன்றான இது கொல்லம் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்திலுள்ளது. தனது அற்புதமான கட்டிடக்கலை அம்சங்கள் மற்றும் உன்னதமான சிற்பங்களின் மூலம் நூற்றுக்கணக்கான பக்தர்களை இது தினமும் ஈர்க்கிறது.

பாண்டியர் கால கோயிற்சிற்பக்கலை பாணியில் தனித்தன்மையான கலையம்சங்களுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் உள்ள பிரசித்தமான கோயில்களின் தோற்றத்தை இக்கோயில் ஒத்திருப்பது ஆச்சரியமான ஒரு வரலாற்று அதிசயமாகும். கோபுர கலசங்கள், தீர்த்தக்குளம், பிரகாரம் போன்ற எல்லா அம்சங்களிலும் இது தமிழகக் கோயில்களைப்போன்று காட்சியளிக்கிறது.

இக்கோயிலின் முக்கியமான சிற்ப நுணுக்கங்களில் ‘வியாளா’ எனப்படும் யாளி சிற்ப வடிப்புகள் பிரசித்தமாக அறியப்படுகின்றன. நாம் படிகளில் ஏறும்போது நம்மோடு சேர்ந்து இந்த யாளிகளும் சிற்பங்களும் சேர்ந்து ஏறுவது போன்ற பிரமையை தரும் விதத்தில் இவை செதுக்கப்பட்டிருக்கின்றன.

தற்காலத்தில் ‘அனிமேஷன்’ தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்படும் அதே யுத்தியை இந்த சிற்பவடிப்புகளில் காணும்போது நமக்கு மெய்சிலிர்க்காமல் இருக்க முடியாது. இந்தக்கோயிலில் புராதனமான தமிழ் கல்வெட்டுகள் காணப்படுவது மற்றொரு வரலாற்று அதிசயமாகும்.

தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களை இந்த கல்வெட்டுகள் வெகுவாக கவரக்கூடும். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இந்த கல்வெட்டுகள் 12ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பதாக கருதப்படுகிறது.

கொல்லம் – ஆயூர் சாலையில் அமைந்துள்ள இந்த ராமேஷ்வரா கோயில் சாலை மார்க்கமாக சுலபமாக சென்றடையும் விதத்தில் உள்ளது. சாந்தமும் தெய்வீகமும் தவழும் சூழலைக்கொண்டுள்ள இக்கோயில் பயணிகளுக்கு ஆத்மார்த்த புத்துணர்ச்சியை அளிக்கும் விதத்தில் வீற்றுள்ளது.

கருத்துரையிடுக Disqus

 
Top