0
எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்மணி, அரசு பணியிலிருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றார். ஆனால், வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல், தினமும் மதிய உணவு தயார் செய்து, பார்சல் கட்டி, தன் ஸ்கூட்டியில் ஒவ்வொரு அலுவலகமாகப் போய், தேவையானவர்களுக்கு விற்க ஆரம்பித்துள்ளார். நியாயமான விலையில், தரமான உணவாகவும் இருப்பதால், இப்போது நிறைய அலுவலகங்களில், அவருக்கு வாடிக்கையாளர்கள் பெருகி விட்டனர்.
சமாளிக்க முடியாமல், உதவிக்கு ஆள் வைத்திருக்கிறார். இது போக, அலுவலர்கள் விரும்பினால், அவர்கள் வீட்டிற்கே போய் சாப்பாடு கொடுத்துவிட்டு, மாலையில் கேரியரை வாங்கி வருவார். இதனால், மாதந்தோறும் கணிசமான தொகை கிடைக்கிறது.

அவருக்கு வரும் பென்ஷன் பணமே போதுமானதாக இருக்க, இதற்கு என்ன அவசியம் என்று அவரிடமே கேட்டேன்.

"முப்பது ஆண்டுகளுக்கு மேல், அலுவலகம் சென்று வேலை பார்த்த பழக்கம் நின்று விட்டதால், உடலும், மனமும் சோர்ந்து போகும். அதற்கு இடம் கொடுக்காமல், ஏதாவது வேலை செய்யும் போது, உற்சாகம் கிடைக்கிறது. வெளியுலகத் தொடர்பும் கிடைக்கிறது. வாழ்க்கையில் சலிப்பு வராது ...' என்றார்.

ஒரு டிகிரி வாங்கிவிட்டு, அரசு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்த்து, வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் இன்றைய தலைமுறையினர் யோசித்தால், இந்த மாதிரி எவ்வளவோ வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. யோசிப்பார்களா?

கருத்துரையிடுக Disqus

 
Top