ரெடிமேட் கடையில் சேல்ஸ் - கேர்ளாக பணிபுரிகிறேன். ஒருநாள், நாலைந்து இளவட்டங்கள், டிரஸ் எடுக்க வந்தனர். அவர்கள் கேட்ட டிரஸ்சை காட்டுவதற்காக, அவர்களில் முதலில் வந்தவரை, "இந்த பக்கம் வாங்கண்ணா...' என்றேன். உடனே, அவருடைய நண்பர்களில் ஒருவர், "டேய்... நீ எனக்கு மாப்பிள்ளை... உன்னை இவங்க அண்ணன்னு சொன்னதால, எனக்கு இவங்க என்ன முறை வேண்டும் தெரியுமா?' என்று கிண்டல் செய்ய... "ஓ மச்சி... நீ அப்படி வர்றியா...' என்று சிரித்தனர் நண்பர்கள்.
இயற்கையிலேயே பயந்த சுபாவம் உடைய எனக்கு, எப்படித்தான் அவ்வளவு தைரியம் வந்ததோ தெரியவில்லை. "டேய்... நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க ரெடி... இப்பவே ரிஜிஸ்டர் ஆபீஸ் போய் கல்யாணம் முடிச்சுக்குவோம். என்னை உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறியா? இல்ல... தனிக்குடித்தனம் வைக்கிற அளவுக்கு தைரியம் இருந்தா சொல்லு, இப்பவே வர்றேன்...'ன்னு ஒரு போடு போட்டேன். அவ்வளவுதான், அவனுடன் வந்த அத்தனை பேரும், ஏன்... என் சக ஊழியர்களும், வாயடைத்து நின்றனர், இந்த பொண்ணுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்தது என்று!
பிரச்னை சிக்கலாகி விட்டதை உணர்ந்து, நான், அண்ணா என்று அழைத்தவர், கிண்டல் செய்த நண்பனை, என்னிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னார்.
அவனும், என்னிடம் மன்னிப்புக் கேட்டு, திரும்பி பார்க்காமல் சென்றான். நான் இந்த போடு போடவில்லை என்றால், கிண்டல் தொடர்ந்து கொண்டே போயிருக்கும்.
குடும்ப வறுமை காரணமாக, வேலைக்கு வருகிறோம். எங்களை போன்றவர்களை, கிள்ளு கீரையாக நினைத்து, கிண்டல் செய்பவர்கள், இனியாவது, கவுரவமாக நடத்தாவிட்டாலும், கிண்டல் செய்யாமலாவது இருப்பரா!
கருத்துரையிடுக Facebook Disqus