இந்தியாவில் முதன்முறையாக, முற்றிலும் இயந்திரமயமாக்கப்பட்ட, அரசு மாட்டுப்பண்ணை, கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம் குளத்துபுழாவில் உள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு, பரிட்சயமான ஊர் குளத்துபுழா. இங்கு தர்மசாஸ்தா கோவில் உள்ளது.
நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட, இயற்கை எழில் கொஞ்சும் இந்த பண்ணையில், பசுக்களுக்காக, 50 ஏக்கர் நிலத்தில் புற்கள் வளர்க்கப் படுகின்றன. முப்பது ஏக்கர் பரப்பளவில், ஓங்கி உயர்ந்து வளர்ந்து நிற்கின்றன சுத்தமான காற்றை தரும் மரங்கள். மீதி, 20 ஏக்கரில், பண்ணைக்கான கட்டடம் உள்ளது. இதில், பிரமாண்ட, "ஷெட்' அமைக்கப்பட்டுள்ளது. பசுக்களுக்கான, "ஷெட்டில்' ரெஸ்ட் ஏரியா, டைனிங் ஏரியா, மில்க்கிங் ஏரியா என, மூன்று பகுதிகள். இருநூறு பசுக்கள் வளர்க்க வசதியான இடத்தில், இப்போது, 180 பசுக்கள் உள்ளன.
ஒவ்வொரு பசுவிற்கும் ஒரு எண், கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கம்மல் போல, காதில் ஒரு, "சிப்' மாட்டப்பட்டுள்ளது. கழுத்தில் நீல நிற, "டிரான்ஸ்பாண்டர்' கட்டப் பட்டுள்ளது. நானோ டெக்னாலஜிபடி, பசுவின் ஒவ்வொரு அசைவும், "சென்சர்' மூலம் கன்ட்ரோல் ரூம் கம்ப்யூட்டரில் பதிவாகும். ஒவ்வொரு பசுவிற்கும் ஒரு, "பே' ஒதுக்கப் பட்டுள்ளது. அங்கேயே ரெஸ்ட் எடுக்கின்றன. எப்போது சாப்பிடுவது, பால் கறப்பது என்பதை கம்ப்யூட்டர் முடிவு செய்து, கட்டளை பிறப்பிக்கும். அதற்கு தகுந்தவாறு, அப்பகுதியில் உள்ள இரும்பு தடுப்பு, "லாக்' ரிலீஸ் ஆகும் போது, பசுக்கள் வெளியே வரும்.
"டைனிங் ஏரியா' வரும் பசுக்களின் முன்பாக, இயந்திரம் மூலம் கொட்டப்படும் சத்துணவை (மரவள்ளி கிழங்கு+புல்+ தீவனம், "மிக்ஸ்' செய்யப்பட்டது) சாப்பிடுகின்றன. குறிப்பிட்ட நேரமாகும் போது, வரிசையாக, பால் கறக்கும், "மில்க்கிங் ஏரியா'வுக்கு வருகின்றன. "கவ் கேட்' என்ற இயந்திரம் மூலம், ஒரே நேரத்தில், 12 பசுக்களுக்கு பால் கறக்கப்படுகிறது. ஒவ்வொரு பசுவும் தந்த பாலின் அளவு, பசுவின் எடை போன்றவை கம்ப்யூட்டரில் பதிவாகும். பால் கறந்த பின், பள்ளி "அசெம்பிளி'க்கு, வரிசையாக செல்லும் மாணவர்களை போல, வெளியே வருகின்றன பசுக்கள். இவ்வாறு வரும் போது,
தனித்தனியாக, "சென்சர்' செய்ய கதவு உள்ளது. பால் அளவு குறைவு அல்லது நோய் அறிகுறி போன்ற அசாதாரண சூழ்நிலை இருந்தால், அதை கம்ப்யூட்டர் கண்டுபிடிக்கும். அப்போது குறிப்பிட்ட பசு, செல்ல வேண்டிய, "கேட்' திறக்காது. அது, தனியாக பராமரிப்பு பகுதிக்கு அனுப்பப்படும்.
பசுக்களுக்கு அமைதியான மனநிலையை ஏற்படுத்த, "ஷெட்' எங்கும் மெல்லிசை கேட்கிறது. ஓய்வெடுக்கும் பகுதியில், வெப்பநிலை, 30 டிகிரி செல்ஷியசை விட அதிகமானால், குளிர்விக்கும் இயந்திரம் மூலம், செயற்கையாக பனிமழை பெய்விக்கப்படுகிறது. உடலை மசாஜ் செய்ய, ஈரமாக்கி துடைக்க, ஆங்காங்கே, "மெகா ஆட்டோமேட்டிக் பிரஷ்கள்' வைக்கப்பட்டுள்ளன. இப்படி ராஜ உபசாரத்தில் வாழ்கின்றன பசுக்கள்; அதுவும் அரசுப் பண்ணையில் என்பது அதிசயம் தானே!
பசுவின் சாணமும், இயந்திரம் மூலம் உடனுக்குடன் அகற்றப்படுகின்றன. இவை, ஜெர்மன் தொழில் நுட்ப இயந்திரம் மூலம், தண்ணீருடன் கலக்கப்பட்டு, புல்வெளிக்கு பாய்ச்சப்படுகின்றன. அயர்லாந்து நாட்டு தொழில்நுட்பத்தில், கம்ப்யூட்டர்கள் இயக்கப்படுகின்றன. ஆறு அதிகாரிகள் ஜெர்மனி சென்று பயிற்சி பெற்றுள்ளனர். பொதுவாக இவ்வளவு பசுக்களையும் பராமரிக்க, 50 தொழிலாளர் கள் வேண்டும். ஆனால் இயந்திர மயமாக்கியதால், எட்டு பேர் தான் பணியில் உள்ளனர். "இயந்திர புரட்சி' நடத்தி, பண்ணை துவக்கப்பட்டது,
தொழிலாளர்களுக்காக போராடும், கம்யூனிஸ்ட் கட்சியின் முந்தைய ஆட்சியில் என்பது ஆச்சரிய தகவல்! துவங்கிய ஒன்றரை ஆண்டுகளில், கேரளாவில், "ஹைடெக்' வெண்மை புரட்சியை ஏற்படுத்தி விட்டது இந்த பண்ணை.
பார்வையாளர்கள் அனுமதி உண்டு!
*பண்ணையை பார்க்க ஒருவருக்கு, 20 ரூபாய் கட்டணம். பசுக்கள் அருகே சென்று நேசம் காட்டி, தொழில்நுட்ப விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், கட்டணம், 500 ரூபாய். விவசாய குழுக்களுக்கு பயிற்சி, பண்ணைகள் அமைக்க, தனியாருக்கு ஆலோசனை வழங்கு கின்றனர்.
தொடர்புக்கு: 0475-2317547, பொறுப்பாளர் கார்த்திகேயன் : 094460 04285.
கருத்துரையிடுக Facebook Disqus