''கொசுக்களை விரட்டக் கடைகளில் விற்கப்படும் கொசுவத்தி, மேட், லிக்விட் போன்றவை நம் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கொசுவத்திச் சுருள், லிக்விட் என எல்லாக் கொசு விரட்டிகளிலும் பைரேத்ரின்(pyrethrin) எனும் வேதிப்பொருள் கலந்து இருக்கும். கொசுவத்திச் சுருளில் இருந்து வரும் புகையையோ அல்லது லிக்விட் வாசனையையோ சுவாசிப்பவர்களுக்கு சைனஸ் அலர்ஜி ஏற்படலாம். இதனால் ஆஸ்துமா நோய் உண்டாகும் வாய்ப்பும் இருக்கிறது. ஏற்கெனவே ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயின் வீரியம் இன்னும் அதிகமாகி, வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாகிவிடும். சின்னக் கொசுக்கடிக்குப் பயந்து கொசு விரட்டிகளைப் பயன்படுத்தினால், அது பெரிய நோய்க்கு வழிவகுத்துவிடும். கொசுவைக் கட்டுப்படுத்தக் கொசுவலைதான் சிறந்தது. கொசு பேட் பயன்படுத்தியும் கொசுக்களை அழிக்கலாம்' என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆஸ்துமா, அலர்ஜி சிறப்பு மருத்துவர் ஸ்ரீதரன்.
''கொசுவத்திகளைப் பயன்படுத்தினால்தான் பாதிப்பு, கிரீம் பயன்படுத்தினால் பாதிப்பு இருக்காது என்கிறார்களே?'' என்ற கேள்வியுடன் தோல் சிகிச்சை மருத்துவர் பிரியாவை சந்தித்தோம். ''கொசு மேட்டில் இருந்து வெளிப்படும் ரசாயனம், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும். கொசுவத்திச் சுருள், லிக்விட் என எல்லாவற்றிலும் பாதிப்புகள் இருக்கின்றன. கொசு விரட்டிக்கான கிரீம்களைப் பயன்படுத்தினால் எந்தப் பாதிப்பும் இருக்காது. மிகச் சிலருக்கு மட்டும் அது தோல் அலர்ஜியை ஏற்படுத்தலாம். நமக்கு அலர்ஜி இருக்குமோ என்று சந்தேகப்படுபவர்கள் அலர்ஜிக்கான சின்ன பேட்ச் டெஸ்ட் எடுத்துவிட்டு, கிரீம்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. காடு, மலை, நீர்நிலைகள் இருக்கும் இடங்களுக்குச் சுற்றுலா அல்லது ட்ரெக்கிங் அனுபவத்துக்காகச் செல்லும்போது, கொசு விரட்டிக்கான கிரீம்களை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும். இதனால் தோலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது'' என்றார் விளக்கமாக.
**கொசுவைக் கட்டுப்படுத்தச் சில இயற்கை வழிகள்**
>>தேங்காய் நார்களை எரித்தால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை விரட்டும். மாலை நேரத்தில் தேங்காய் நார்களை எரித்து வீடு முழுக்க அதன் புகையைக் காண்பித்தால், ஒரு கொசுகூட இருக்காது. இயற்கை நார்களின் புகையால், உடலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
>>வீட்டின் ஒரு பக்கத்தில் நெருப்பு வைத்து அதில் மாம்பூக்களைப் போட்டால், அதில் இருந்து வரும் புகை கொசுக்களை விரட்டிவிடும்.
>> வேப்பிலை, நொச்சி இலை ஆகியவற்றை உலர்த்தி, நெருப்பில் போட்டுப் புகைக்கவைத்தால், கொசுத் தொல்லை இருக்காது.
>> நாய்த்துளசிப் பூவை உலர்த்தித் தூள் செய்து சாம்பிராணியுடன் சேர்த்துப் புகைக்கவைத்தால், கொசுத் தொல்லை தீரும்.
>> நம்மை இருட்டிலும் அடையாளம் பார்த்துக் கடிக்கும் திறன் கொசுக்களுக்கு உண்டு. எனவே, வேறு வாசனை வரும் திரவியங்களை நம் உடலில் பூசிக்கொண்டாலும் கொசுக்கடியில் இருந்து தப்பலாம்.
>> பூண்டு வாசனை கொசுவுக்கு ஆகாது. நிறையப் பூண்டு சாப்பிட்டால், அதன் மணத்திலேயே கொசு ஓடிவிடும்.
>> விளக்கு எரிக்க கேரளாவில் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண்ணெய், நெய் போன்றவற்றை இன்றும் பயன்படுத்துகின்றனர். இதை நாமும் பயன்படுத்தினால் கொசு பக்கத்தில் வரவே பயப்படும்.
>> கொசுவை ஒழிக்க ஜன்னல்களில் கொசுவலையை மாட்டிவிடலாம். கொசுவலையில் சிறிய துளைகள் ஏற்பட்டிருந்தால், அவற்றை உடனே அடைத்துவிடுவது நல்லது.
பிறந்த குழந்தைகள் மேட் புகையைச் சுவாசிக்கும் சூழலுக்கு ஆளானால், வலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். நுரையீரல் புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்புகள்கூட இருக்கின்றன என்று லக்னோ மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.
ஒரு கொசுவத்தி எரியும்போது, அது வெளியிடும் சாம்பலின் அளவு 75 முதல் 137 சிகரெட் எரிப்பதனால் வரும் சாம்பலுக்குச் சமம்.
கருத்துரையிடுக Facebook Disqus