சில கிராமங்களுக்கு செல்லும் போது, நானும் போவேன். அப்போதெல்லாம், பிச்சை என்னை விழுந்து விழுந்து கவனிப்பான். நான், வீட்டில் வந்து சொன்னால் பாட்டி திட்டுவாள். "அவன்கிட்டயெல்லாம் பையனை ஏன் விடுறே? அவன் கூட பேசிப்பழகி, அவனை மாதிரியே நடக்கறான் பாரு...'என்பாள்.
"அவனும், மனுஷ பிறவிதாம்மா...'என்பார் அப்பா. ரொம்ப நாள் கழித்துத் தான், அவன் திருநங்கை என்றே எனக்குத் தெரியும். மற்ற நேரங்களில் ஆணைப்போலவும், கூவாகம் செல்லும் போது மட்டும் பெண்ணாகவும் மாறுவதை பார்த்து, வியந்திருக்கிறேன். ஒரு பூப்போட்ட கைலியும், சட்டையும் அணிந்தபடி, பெண்ணைப் போல நடப்பான். இழுத்து இழுத்து பேசுவான். "பிரபு தம்பி, நல்லா சாப்பிடணும். முட்டை தோசை போடட்டுமா...'என்று, அக்கறையாய் கேட்பான்.
பிச்சையின் முட்டை தோசை, அத்தனை ருசியாக இருக்கும். ஒரு கரண்டி மாவை கிண்ணத்தில் எடுத்து, அதில், நுரை பொங்க அடித்த முட்டையை ஊற்றுவான். உப்பும், மிளகுத்தூளும் கலந்து, கலக்கி தோசை ஊற்றி தந்தானென்றால், பஞ்சை பிய்த்து சாப்பிடுவது போல் இருக்கும். நாலைந்து கேட்பேன். முட்டை தோசை என்றில்லை. காடை, கோழி என ஒவ்வொன்றும் ருசியாக இருக்கும். கூத்தாண்டவர் கோவில் விசேஷத்துக்கு கிளம்பும் போது, சகலவித அலங்காரங்களோடு, நடிகையைப் போல் கிளம்புவான். மை தீட்டிய விழிகளும், தலை நிறைய பூவும், அடுக்கின வளையலுமாய் பெருமிதம் பொங்க போவான். எனக்கோ, நாடகத்தில் பெண் வேஷம் கட்டியதைப் போல் இருக்கும்.
"டேய் பிச்சை... வேலை முடிஞ்சுதுன்னு, உடனே ஊருக்கு கிளம்பிடாத... தஞ்சாவூரு பக்கம், பத்து நாள் கேம்ப் இருக்கு' என்றார் அப்பா.
"சரிங்கய்யா, கேம்ப் முடிஞ்சே ஊருக்கு போறேன்' என்றான்.
"அப்படி என்ன தான், உன் ஊருல இருக்கோ!' என்றபடி எழுந்து போனார்.
"பிச்சை, எங்க வீட்டுக்கு வந்துடேன். எதுக்கு ஊருக்கு போவணும்' என்று கேட்டேன்.
"எனக்கு சொந்தம்ன்னு சொல்லிக்க அக்காவும், அக்கா மகளும் தான் இருக்காங்க. "புள்ள' கல்லூரியில் படிக்குது. நான், போயி பணம் கொடுத்தா தான் பொழப்பு ஓடும் தம்பி. மத்தபடி, அய்யாவத் தாண்டி எனக்கு என்ன கிடக்கு' என்றான்.
அவனது ஊர், காட்டுமன்னார் கோவில் பக்கம், ஒரு கிராமம் என்றும், வாய்க்காலும், தென்னை மரங்களுமாய் பார்க்க அழகாக இருக்கும் என்றும் சொல்வான். அன்றைக்கு அப்பாவுக்கு நெஞ்செரிச்சல். பிச்சை, பரபரவென்று வேலியோரம் போய், இரண்டு பிரண்டைகளை பறித்து வந்தான். காய்ந்த மிளகாய், பூண்டுப்பல், உளுந்து, பெருங்காயம் இவற்றோடு பிரண்டையும், புளியையும் நன்றாக சுட்டு, அம்மியில் வைத்து, துவையல் அரைத்து வந்தான். கொஞ்சம், ரசம் சாதத்தோடு சாப்பிட்ட அப்பாவுக்கு நெஞ்செரிச்சல் நின்றது.
"டேய்... நளன்டா நீ. இதை சாப்பிடு பிரபு' என்று எனக்கும் கொடுத்தார்.
உண்மையில், அப்படிப்பட்ட துவையலை, நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை.
நான் ஒன்பதாவது முடித்து, பத்தாவது போகப் போவதால், என்னை வீட்டிலேயே விட்டு விட்டு,"கேம்ப்'க்கு போய்விட்டார் அப்பா. எனக்கும், கணக்கு டியூஷன் இருந்தது. கிட்டத்தட்ட கேம்ப் முடியும் தருவாயில், அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. கை, கால் மூட்டு கள் வீங்கி, எந்த வேலையும் செய்ய முடியாமல் போனது. பாட்டி, அப்பாவுக்கு போன் செய்தாள். இரண்டு நாளில், அப்பா பிச்சையுடன் வீடு வந்தார்.
"இதை ஏண்டா, இழுத்துட்டு வந்தே?'என்று கேட்டாள் பாட்டி.
"ஒம் மருமகளுக்கு, உடம்பு சரியாகும் வரை, பிச்சை தான் சமைப்பான்' என்றார் அப்பா. பாட்டி வாயை மூடிக் கொண் டாள். அவளாலும், ஒரு டம்ளரைக் கூட கழுவ முடியாது. எனக்கு ஜாலியாக இருந்தது. இனி, விதவிதமாய் சாப்பிடலாம். அம்மா, சமையலறையை காட்டி, இன்னது இங்கிருக்கிறது என்று சொன்னதோடு, ஓய்வெடுக்க கிளம்பி விட்டாள். பிச்சை முதல்நாள் சற்றே தயக்கமாய் வேலை செய்தான். மறுநாளோ, சொந்த வீடு போல பழகிக் கொண்டான்.
அம்மாவுக்கு, முடக்கத்தான் தோசை செய்து கொடுத்தான். "மருந்து பாட்டுக்கு, மருந்து சாப்பிடுங்கம்மா... இதையும், சாப்புட்டு பாருங்க...' என்று கார சட்னி செய்து கொடுத்தான். சில நாட்களிலேயே, பாட்டியையும் கவர்ந்து விட்டான். தொண்டைக்கு இதமாய், சுக்கு கஷாயம் போட்டு, பிளாஸ்க்கில் ஊற்றி வைத்தான். பாட்டிக்கு, கண்ணீரே வந்துவிட்டது. எனக்கோ, தினமும் ராஜ சாப்பாடு தான். ஆப்பம் பால், இடியாப்பம் குருமா, அடை துவையல் என வித்தியாசமாய் சாப்பிட்டேன்.
"ஏண்டா பிச்சை, அக்கா குடும்பத்துக்கே செலவழிச்சா... நாளைக்கு உனக்குன்னு எதுவும் வேணாமா?' என்று, ஒரு நாள் கேட்டாள் பாட்டி.
"எதுக்கு ஆச்சி, கையில சமையல் வேலை இருக்கு. நம்ப அய்யாகிட்டயே, காலம் பூராவும் இருந்துக்கிடுவேன். அக்கா மவ நல்லாப் படிக்குது. நல்ல அரசாங்க வேலையில, இருக்கிற மாப்பிள்ளையா பார்த்து, கட்டிக்குடுத்துட்டா என் கடமை முடிஞ்சிரும். அக்கா, பொண்ணோட போய் தங்கிக்கிடும்' என்றான்.
சில நாட்களிலேயே, அவன் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றானாள் அம்மா. நான் பத்தாம் வகுப்பு சென்றேன். என், மத்தியான டிபன்கள் பள்ளியில் பிரசித்தி பெற்றன. எனக்கு கீரையும், காய்களும் அறவே பிடிக்காது. பிச்சை, பசுங்கீரையை பசுமையாகவே கடைந்து கொடுப்பான். சீரகமும், பெருங்காயமும் மணக்கும். என் வாழ்நாளில் முதன்முறையாக, பீன்ஸ், அவன் செய்து தான் சாப்பிட்டேன். முதலில், அதை ஏதோ உப்புமா என்று நினைத்து, வாயில் போட்டேன். நீர்ச்சுவையோடு, பருப்பும், தேங்காயும் உதிராக ருசியாக இருந்தது. என் நண்பர்கள், என் டப்பாவுக்காக சண்டை போட்டனர். நான், ஒரு சுற்று பருத்து போனதாக பாட்டி சந்தோஷப்பட்டாள்.
ஒருநாள், பிச்சை கலவர முகத்தோடு பாட்டியிடம் வந்து நின்றான். "ஆச்சி...நானு, அவசரமா ஊருக்கு போவணும்...லீவு குடுங்க...' என்றான்.
"என்னடா விஷயம்?'
"அக்கா வரச் சொல்லிச்சு... எனக்கே, என்னன்னு தெரியல' என்றான்.
பணம் கொடுத்து அனுப்பி விட்டாள் பாட்டி. போனவன், பத்து நாளாக வரவேயில்லை. மீண்டும், அம்மாவின் சமையல் எனக்கு பிடிக்கவேயில்லை. பிச்சை வரவுக்காக ஏங்கினேன்.
வெள்ளிக்கிழமை ஸ்கூல் முடிந்து வந்தேன். வெண்டைக்காய் சாம்பாரின் மணம், ஊரைத் தூக்கியது. ஹை...பிச்சை வந்தாச்சு. உள்ளே நுழைந்து, நேரே, சமையலறைக்கு ஓடினேன்... "யாரிது?' புதிதாய் கல்யாணமான இளம்பெண். பாட்டியின், அறைக்கு ஓடினேன். பிச்சை கைகட்டி நின்றிருந்தான். அப்பா, அம்மா, பாட்டி எல்லாரும் இருந்தனர்.
"இது உனக்கே நியாயமா இருக்கா... ஊரு உலகம் என்னடா சொல்லும்? உன்னைய பத்தி எல்லாருக்குமே தெரியுமே... நீ போயி, உன் அக்கா மகளை கல்யாணம் கட்டிக்கிட்டு வந்திருக்கியே' என்று கத்தினாள் பாட்டி.
"அந்தப் பொண்ணு வாழ்க்கையை வீணடிச்சுட்டியே... ரொம்ப சின்ன பொண்ணுடா' அம்மா, அப்பா தலையில் அடித்துக் கொண்டனர். "வெளியில சொன்னா வெட்கக்கேடு, பிச்சை தெரிஞ்சு தான் செய்தியா?' என்று அங்கலாய்த்தனர்.
"என்னை மன்னிச்சுடுங்கய்யா... வேற வழி தெரியல. மக, எங்கியோ கெட்டுப்போயி வந்துட்டான்னு தெரிஞ்சதும், எங்கக்கா நாண்டுக்கிட்டு செத்துப் போச்சு. இதை கூட்டிக்கிட்டு, கெடுத்தவன் கிட்டேயே போயி நியாயம் கேட்டேன். அவங்க பெரிய பணக்காரங்க, அரசியல்வாதிங்க வேற. ஏழை சொல்லு எடுபடுமா? அசிங்கப்பட்டு திரும்பிட்டோம். இதுக்கு இனிமே, ஒரு பாதுகாப்பு வேணுமே. அதான் தாலி கட்டிபுட்டேன்' என்று அதே பெண்மைக் குரலில் சொன்னான் பிச்சை.
"யாரு தோட்டமா இருந்தா என்னா. ஆடு மேயாம ஒரு வேலி. இந்த வேலி, என்னிக்குமே பயிரை மேயாது இல்லிங்களா' என்று கூறியபடி, அந்தப் பெண்ணுக்கு இணையாய், பெண்ணைப் போலவே நடந்து சென்ற பிச்சையை, அப்பா பெருமூச்சுடன் பார்த்தார்.
பல ஆண்டுகளுக்கு பின்...
""என்ன கதை எழுத ஆரம்பிச்சுட்டீங்களா?'' என்று, என் மனைவி அனுராதா கையில் பஜ்ஜித் தட்டுடன் வந்து, என் அருகே வைத்தாள். கடலை எண்ணையில், பொன்னிறத்துண்டாய் வறுபட்ட பஜ்ஜி மினுங்கியது. வாசனை எட்டூருக்கு இழுத்தது.
இந்த இடத்தில், என் மனைவியின் கைப்பக்குவத்தை பற்றி சொல்லியே ஆக வேண்டும். பிரமாதமாய் சமைப்பாள். எங்களுக்குள், வயசு வித்தியாசம் சற்று அதிகம் தான். நான், என்றும் இளமையாய் இருப்பதால் மேட்சாக இருந்தது.
""இந்த கதை, அதிக வரவேற்பை பெறும் பாரேன்... ஏன்னா சில உண்மைகள் சுவாரஸ்யமானது,'' என்றேன் பஜ்ஜியை கடித்தபடி. ""எழுத்தாளரே... எனக்கு உள்ளே வேலையிருக்கு,'' என்றபடி போனாள் அனுராதா.
நான் கதையை மடித்து, உறையில் இட்டேன். பிச்சையின் மனைவியின் மகள் தான் அனுராதா என்பதை, எதற்கு உங்களுக்கு சொல்ல வேண்டும்?
கருத்துரையிடுக Facebook Disqus