நாற்பத்தைந்து வயதான மாமா, காலை 6:00 மணிக்கு, மொட்டை மாடியில் ஏறினார்
என்றால், 8:30 மணி வரை, வயது வித்தியாசமின்றி, காலனி பெண்களை
பார்த்து, "ஜொள்ளு' விட்டுக் கொண்டிருப்பார். வயதானவர்களும், மாமாவின்
பார்வைக்கு தப்பாததால், காலனிவாசிகள் அனைவரும் சேர்ந்து, "ஜொள்ளு மாமா' என,
பெயர் வைத்து விட்டனர். இதையறிந்து வெட்கமடைந்த மாமி, மாமாவை திருத்த,
எத்தனையோ வழிமுறைகளை கையாண்டும், பலன் பூஜ்ஜியம்தான்.
ஒருநாள், மாமா பெயருக்கு கடிதம் ஒன்று வந்தது. அதில், "மதிப்பிற்குரிய பெரியவரே... தினமும் காலை 6:00 மணி முதல் 8:30 மணிவரை, எங்கள் வீட்டுப் பெண்களை, "கலைக் கண்ணோடு' தாங்கள் பார்த்து மகிழ்வதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். உங்கள் வீட்டு மாமி, மகாலட்சுமி போல் இருக்கிறார். என்ன செய்வது... அவரின் அருமை உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
அவரை நாங்கள் கண்டு மகிழலாம்
என்றால், எங்காவது கடைக்கு வரும் போது தான் பார்க்க முடிகிறது. எனவே, பரந்த
மனப்பான்மை உடைய நீங்கள், ஒவ்வொரு நாளும், ஒருவர் வீடு என்ற கணக்கில்,
இந்த காலனி முழுவதும் அனுப்பி வைத்தால், சர்வ லட்சணம் பொருந்திய மாமியை
நாங்களும், "கலைக் கண்ணோடு' கண்டு மகிழ வசதியாக இருக்கும். வரும்
நாட்களில், மாமி எங்கள் வீட்டிற்கு வருவார் என, நம்புகிறோம். வாழ்க மாமா!
வளர்க அவரது, கலை ரசனை! இப்படிக்கு, காலனிவாசிகள்...' என்று கடிதம்
முடிந்திருந்தது.
கடிதத்தை படித்த மாமா ஆடிப்போய், திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆகி விட்டார். இப்போ... கடை மற்றும் ரேஷனுக்கு போவதென்றால் கூட, உடனே பையை தூக்கிக் கொண்டு ஓடுகிறார். எப்படியோ, மாமா திருந்தியதில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். மாமாவுக்கு தெரியாத ஒரு ரகசியம் உங்களுக்கு சொல்லட்டுமா? இந்த கடிதம் எழுதியதே எங்க மாமிதான்! சூப்பர் மாமிதான் என்கிறீர்களா?
கருத்துரையிடுக Facebook Disqus