0
 
இந்திய தேசிய கொடியை காண் பித்தால் காங்கிரஸ் கட்சி கொடி, என்று கூறுபவர்கள் மத்தியில் ,பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த மூன்று வயது சிறுமி, எந்த நாட்டின் தேசிய கொடியை காண்பித் தாலும் அசராமல் நாட்டின் பெயரை கூறுகிறார்.

பெரியநாயக்கன்பாளையம் அருகே கூ.கவுண்டம்பாளையத்தில் உள்ள சால்சர் குடியிருப்பில் வசிக்கும் சிவராமகிருஷ்ணன்-சங்கீதா தம்பதியரின் மகள் சாகித்யாவர்ஷினி. இவர், உலகில் உள்ள எந்த நாட்டின் கொடியை காட்டினாலும், அதன் பெயர், தலைநகரம் ஆகியவற்றை மனப்பாடமாக கூறுகிறார்.

சிறுமியின் தந்தை சிவராமகிருஷ்ணன் கூறுகையில்,""சாகித்யாவர்ஷினி, தனது சகோதரன் அருண் பாடம் படிக்கும் போது, உலக வரைபடம் குறித்து விபரங்கள் சேகரித்த போது அதை கூர்ந்து கவனித்து வந்தார். "டிவி'யில் வரும் உலக செய்திகள், சர்வதேச விளையாட்டு போட்டிகளில் நாட்டுக் கொடிகளை காண்பிக்கும் போது, அந்த நாட்டு பெயர்களை சாகித்யாவர்ஷினி சரியாக கூறினார். இச்சம்பவத்துக்கு பிறகுதான், அவரிடம் இருந்த திறமை எங்களுக்கு தெரியவந்தது. தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் கொடிகள், தலைநகரம், நாடுகள் குறித்து கூறி, வியப்பில் ஆழ்த்துகிறார். வீட்டில் சிறு நூலகம் உள்ளது. அதில் உள்ள புத்தகங்களை பார்ப்பதில் இப்போதே கவனம் செலுத்த துவங்கியுள்ளார். நாங்கள் சொல்லிக் கொடுத்த பின், தற்போது 20 திருக்குறள்களை சரியாக கூறுகிறார். சாகித்யாவர்ஷினியை வரும் ஜூன் மாதம்தான் பள்ளியில் சேர்க்க முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.

சாகித்யாவர்ஷினியின் திறமை குறித்து உளவியல் நிபுணர் செந்தில்குமார் கூறுகையில்,""சில குழந்தைகள் இது போன்று அதீத திறமை மிக்கவர்களாகவும், மனப்பாடம் செய்வதில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருப்பர். இவர்கள் நாட்டின் கொடிகளை பார்த்து தலைநகரம், நாட்டின் பெயர்களை கூறுவதோடு, இதே வயதில் சிலர் ஓவியம் வரைவதிலும் திறமை உள்ளவர்களாக இருப்பர். எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களாக காணப்படும் இது போன்ற சிறுவர், சிறுமிகளின் திறமைகளை ஊக்கவிக்க வேண்டும்,'' என்றார்.

கருத்துரையிடுக Disqus

 
Top